இயேசு கிறிஸ்துவின் உயிலின் முக்கிய சொத்து ஆத்தும இரட்சிப்பு.

 ஆதவன் 🖋️ 597 ⛪ செப்டம்பர் 16,  2022 வெள்ளிக்கிழமை

"ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்த சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்." ( எபிரெயர் 9 : 15, 16 )

மோசே மூலம் கொடுக்கப்பட்ட பழைய உடன்படிக்கை மக்கள் கடைபிடிக்கவேண்டிய கட்டளைகளைக் கொடுத்ததே தவிர அவைகளால் மக்களைத் தூய்மைப்படுத்தமுடியவில்லை.  மக்களது அக்கிரம சிந்தனை மாறவுமில்லை. அதாவது அந்தக்கட்டளைகளால் உள்ளான மனிதனில் எந்த மாறுதலும் செய்யமுடியவில்லை. 

கட்டளைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை மக்கள் மனிதாபிமானத்திற்கு கொடுக்கவில்லை. எனவேதான் இயேசு கிறிஸ்து ஓய்வு நாளில் மக்களுக்குக் குணமளித்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி வாழ்வது தேவனுக்கு ஏற்புடைய மக்களாக நம்மை மாற்றிட முடியாது. எனவேதான் செயலிழந்த பழைய உடன்படிக்கையினை மாற்றி இயேசு கிறிஸ்து தனது இரத்தத்தால் புதிய உடன்படிக்கையினை ஏற்படுத்தினார். 

இதனையே, "முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்."  என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

புதிய உடன்படிக்கையினை மரண சாசனம் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. மரண சாசனம் என்பது உயில். ஒரு தகப்பன் தான் மரணமடையுமுன் தனது சொத்துக்களைக்குறித்து உயில் எழுதுவதுபோல இயேசு கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் மக்களாகிய நமக்காக எழுதிய உயில் தான் புதிய உடன்படிக்கை.  

இங்கு எபிரெய நிருப ஆசிரியர் மேலும் ஒரு உண்மையினை விளக்குகின்றார். அதாவது தகப்பன் எழுதிய உயில் தகப்பனது மரணத்துக்குப்பின்தான் உயிர் பெறும். அதற்குமுன் அந்த உயில் செல்லாது. அதுபோல இயேசு கிறிஸ்து எழுதிய புதிய உடன்படிக்கையின் உயிலானது அவரது மரணத்தினால் உயிர் பெற்று இன்றும் அதனை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களை உயிர்ப்பிக்கின்றது. இதனையே இன்றைய வசனத்தில்  "ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்த சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்." ( எபிரெயர் 9 : 16 ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அன்பானவர்களே, பழைய ஏற்பாட்டின் (உடன்படிக்கையின்) மூலம் மக்களை முற்றும் முடிய இரட்சிக்க முடியாததால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நாம் எல்லோரும் நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் உயிலை எழுதியுள்ளார். அவரது மரணத்தால் அதனை உயிர்பெறச் செய்தார்.

தகப்பன் எழுதிய உயிலில் சில நிபந்தனைகளை விதித்திருந்தால் அந்த நிபந்தனைக்கு உட்பட்டவர்களுக்கே உயிலில் குறிப்பிடப்பட்டவைகள் சொந்தமாகும். இயேசு கிறிஸ்துவின் உயிலின் முக்கிய சொத்து ஆத்தும இரட்சிப்பு. அதனை பெற்றுக்கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். அது:- 

"என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்." ( ரோமர் 10 : 9,10 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                     

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்