நல்ல மனிதர்கள் பூனையைப் போன்றவர்கள்

  ஆதவன் 🖋️ 585 ⛪ செப்டம்பர் 04,  2022 ஞாயிற்றுக்கிழமை


"நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்." ( சங்கீதம் 37 : 23 )

தேவன் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் சிந்தனைகளையும் அறிந்துகொண்டிருக்கின்றார். மனிதனின் அன்றாடச்  செயல்பாடுகள்  அவருக்கு மறைவானவையல்ல. உத்தமமாய்த், தனக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் மக்களிடம் அவர் பிரியமாய் இருக்கிறார். அத்தகைய மனிதர்களது வாழ்க்கையினை அவர் பொறுப்பெடுத்துக்கொள்கின்றார். எனவே இத்தகைய நல்ல மனிதர்களது செயல்பாடுகள் கர்த்தரால் உறுதிப்படும். அவற்றில் எந்தக் குழப்பமும் இடர்பாடும் ஏற்படாது. கர்த்தர் அவர்களது செயல்பாடுகளில் பிரியமாய் இருக்கின்றார்.  

அத்தகைய நல்ல மாந்தர்கள் "விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்." ( சங்கீதம் 37 : 24 ) என்று அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது எதிர்பாரா விதமாகச் சில தவறுகளை நல்ல மனிதர்களும் செய்யலாம். ஆனால் அப்படி அவர்கள் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை. ஏதாவது வழியில் அவர்களது தவறினை  தேவன் உணர்த்திக்கொடுத்து அவர்களைத் தாங்குகின்றார். 

தாவீது ராஜா தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் எதிர்பாராத விதமாக உரியாவின் மனைவியிடம் பாவத்தில் விழுந்துவிட்டார். ஆனால் தேவன் அவரை அப்படியே தள்ளிவிடவில்லை. நாத்தான் தீர்க்கதரிசி மூலம் அவரது பாவத்தை உணர்த்திக்கொடுத்து மீண்டும் தன்னோடு சேர்த்துக்கொண்டார். காரணம் தாவீதின் மனம். அவர் நாத்தான் தனது பாவத்தை உணர்த்தியதும் மனம் திரும்பி அழுது மன்னிப்பு வேண்டினார். 

அவர் எழுதிய பாவ மன்னிப்பின் சங்கீதம் (சங்கீதம் 51) இன்றும் நாம் பாவத்தில் விழும்போது நாம் ஜெபிக்க ஏற்ற ஜெபமாக இருக்கின்றது. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்து அவரோடே இருந்தும் அப்போஸ்தலரான பேதுரு, கிறிஸ்துவை மறுதலிக்கவும் சபிக்கவும் செய்தார். ஆனால், தனது தவறுக்கு மனம் வருந்தி அழுதார். கிறிஸ்து அவரை மீண்டும் சேர்த்துக்கொண்டார். தலைமை அப்போஸ்தலராகவும் ஏற்படுத்தினார்.

ஆம், "நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்." ( நீதிமொழிகள் 24 : 16 ). அதாவது பூனையைப் போன்றவர்கள் நல்ல மனிதர்கள். எழுதரம் விழுந்தாலும் மனச்சாட்சியில் குத்தப்பட்டு தங்களது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு மனம் திரும்பிடுவார்கள். ஆனால் துன்மார்க்கரோ பன்றியைப்போல எத்தனைத்தரம் கழுவினாலும் சேற்றிலேயே இன்பம்கண்டு அதில்தானே மூழ்கியிருப்பார்கள்.

அன்பானவர்களே, நாம் பலவீனமானவர்கள்தான். எனவே நாம் அடிக்கடி தேவனுக்கு ஏற்பில்லாதச் செயல்பாடுகளைச் செய்துவிடலாம். ஆனால், அதிலேயே மூழ்கிடாமல் தேவனிடம் பாவங்களை அறிக்கையிட்டு மனம்திரும்பவேண்டும்.  இப்படி வாழும்போது நமது வழிகளில் கர்த்தர் பிரியமாய் இருப்பார். நமது நடைகளை உறுதிப்படுத்துவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்