Friday, September 16, 2022

பூர்வநாட்களை நினைப்போம் அவரது செய்கைகளையெல்லாம் தியானிப்போம்

 ஆதவன் 🖋️ 598 ⛪ செப்டம்பர் 17,  2022 சனிக்கிழமை

"என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்." ( சங்கீதம் 143 : 4, 5 )

ஆவிக்குரிய வாழ்வில் சோர்வுகளும் மனமடிவுகளும் ஏற்படுவதுண்டு. எவ்வளவுதான் நாம் கிறிஸ்துவுக்குள் பலம்கொண்டாலும் சிலவேளைகளில் நமது பிரச்சனைகளை; துன்பங்களை  நாம் துன்மார்க்கருடைய செழிப்புடன் ஒப்பிட்டுப்பார்த்துவிடும்போது மனம் சோர்வடைந்துவிடுகின்றோம். துன்மார்க்கன் செழிப்பான என்றுதான் வேதம் கூறுகின்றது. (சங்கீதம் 73) ஆனால் அது புல்லைப்போன்ற செழிப்பு. புல்  எப்படி வெயிலால் வறண்டு போகிறதோஅதுபோல அவர்கள் வறண்டுபோவார்கள். 

ஆனால், ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நமக்குள் ஏற்படும் சோர்வுகளின்போது நாம் இவைகளைச் சிந்திப்பதில்லை. நாம் இவ்வளவு நேர்மையாக, உண்மையாக வாழ்ந்து என்ன பயன்? எனும் எண்ணம் எழுந்துவிடுகின்றது. 

இதனை மேற்கொள்ள தாவீது இன்றைய தியானத்தில் வழி காட்டுகின்றார். அதாவது நாம் கிறிஸ்துவுக்குள் வளர ஆரம்பிக்கும் ஆரம்ப நாட்களில் தேவன் நமது வாழ்வில் பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்திருப்பார். ஒவ்வொருவரையும் தேவன் இப்படியே வித்தியாசமாக நடத்துகின்றார். நாம் விசுவாசத்தில் வளர்வதற்காகவே  தேவன் இப்படிச் சில அதிசயங்களை நமது வாழ்வில் செய்து நம்மை வழிநடத்துகின்றார்.  

நமது வாழ்வில் சோதனைகள் ஏற்பட்டு மனம் மடியும்போது தேவன் நமக்குச் செய்த அதிசயங்களை நாம் தியானிக்கும்போது  நம்மை அவை  உயிர்ப்பிக்கும். தேவன்மேல் நமக்குள்ள விசுவாசம் குறைந்திடாமல் நம்மைப் பாதுகாக்கும். இதனையே தாவீது இங்குக் கூறுகின்றார், "என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்." என்று. 

தாவீதுக்கு ஏற்பட்டச் சோதனைகள் அதிகம். சகோதரர்கள் அவனிடம் அன்பாய் இருக்கவில்லை. பிற்காலத்தில் சவுல், சொந்த மகன் அப்சலோம் என அவனது உயிரை வாங்கத் துடித்தவர்கள் பலர். ஆனால் இந்தச் சூழ்நிலைகளில் தாவீது தனது பழைய வாழ்வை எண்ணிப்பார்த்திருப்பார்.  ஆடு மேய்த்துக்கொண்டு வனாந்தரத்தில் அலைந்த நாட்கள்..... அப்போது தான் பிற்காலத்தில் ராஜாவாக ஆவோம் என அவன் எண்ணியதில்லை. ஆனால் தேவன் அவனை உயர்த்தி வைத்தார். 

அன்பானவர்களே, தாவீதின் இந்தப் பழக்கத்தை நாமும் பின்பற்றுவோம். நமது பழைய வாழ்வை எண்ணிப்பார்ப்போம். அதிலிருந்து தேவன் நம்மை எப்படியெல்லாம் மாற்றி வழிநடத்தி வந்துள்ளார் என்பதனைச் சிந்தித்துப்பார்ப்போம். அவற்றுக்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். 

இப்படி நமது பழைய நாட்களை எண்ணும்போது தேவன்மேல் நமக்கு மேலும் அன்பும் விசுவாசமும் அதிகரிக்கும். 

நமது ஆவி நமக்குள் தியங்கும்போது சோர்ந்துபோகாமல் பூர்வநாட்களை நினைப்போம் அவரது  செய்கைகளையெல்லாம் தியானிப்போம் அவரது கரத்தின் கிரியைகளை யோசிப்போம். கர்த்தர் நமக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தந்து நமது சோர்வை மாற்றுவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                     

No comments: