Sunday, September 18, 2022

குருடருக்கு வழிகாட்டுகிற குருடர்கள்

 ஆதவன் 🖋️ 601 ⛪ செப்டம்பர் 20,  2022 செவ்வாய்க்கிழமை   

"அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்."( செப்பனியா 1 : 12 )

இன்றைக்கு நம்மிடையே சிலர் கடவுளையும் அவரது செயல்களையும் நம்புவதில்லை. அவர்களது எண்ணமெல்லாம் கடவுள் இல்லை என்பதே. இன்னும் சிலர் சந்தேகப் பேர்வழிகள். அவர்கள் மனதில் கடவுளைப்பற்றி குழப்பமான எண்ணம் உள்ளது. அதாவது இந்த உலகத்தில் நிகழும் நிகழ்ச்சிகளைப் பார்த்து ஏன் இப்படி நடக்கிறது? கடவுள் என ஒருவர் உண்மையிலேயே  இருக்கின்றாரா? எனும் சந்தேகம் இவர்களுக்கு எழுகின்றது. இவர்களையே இன்றைய வசனம் வண்டல்போலக் குழம்பி இருக்கிறவர்கள் என்று கூறுகின்றது.    

கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல இப்படி உலக நிகழ்வுகளால்  கலங்கிக் குழம்பி இருக்கிறவர்களைக் கர்த்தர் கண்டுபிடிக்கின்றார். மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கையற்று "கடவுளா? அப்படி ஒருவரும் கிடையாது. அப்படி அவர் நன்மை செய்வதும் இல்லை, தீமை செய்வதும் இல்லை. எல்லாம் மனிதனால்தான் நடக்கின்றது." என்கின்றனர் சிலர். "மின்சாரத்தைக் கடவுளா கண்டுபிடித்தார்? செல் போன், தொலைக்காட்சி போன்ற நவீன விஞ்ஞான கருவிகளிக் கடவுளா கண்டுபிடித்தார்? எல்லாம் மனிதனது அறிவுதான் கண்டுபிடித்தது" என்பவர்களையும் கண்டுபிடிக்கின்றார்.  

இன்றைய வசனம் இத்தகைய இரண்டு மன நிலையுள்ளவர்களையும் நான் தண்டிப்பேன் என்று கூறுகின்றது. அதாவது கடவுளைப்பற்றிய சந்தேக எண்ணத்தோடு குழம்பி இருப்பவர்களையும் கடவுள் இல்லை, அவரால் நன்மையையும் தீமையையும் செய்ய முடியாது என்பவர்களையும் தண்டிப்பேன் என்கின்றார்.

அன்பானவர்களே, நானும் ஒரு காலத்தில் இப்படியே இருந்தேன். தீவிர இடதுசாரி பத்திரிகையில் ஆசிரியராக இருந்து கடவுள் மறுப்பு கட்டுரைகளையும் கருத்துக்களையும் கூறிவந்தேன்.  மனிதனால் எல்லாம் முடியும்போது கடவுள் என இல்லாத ஒன்றை நாம் ஏன் எண்ணிக்கொண்டிருக்கவேண்டும்? என்று கூறிவந்தேன். ஆனால், கர்த்தர் கிருபையாய் எனக்குத் தன்னை வெளிப்படுத்தினார். எனது வாழ்வில் கர்த்தர் வந்தபிறகான மாறுதல் பிரமிக்கத்தக்கது. 

இன்று நவீன உலகினில் கோடிக்கணக்கான இளைஞர்கள் இதுபோல கடவுள் நம்பிக்கையற்று இன்றைய வசனம் கூறுவதுபோல, கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லிகொண்டு அலைகின்றனர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இந்த இளைஞர்கள் பெரும்பாலும் இன்றைய பிரபல ஊழியர்களது செயல்பாடுகளைப்பார்த்து இப்படி மாறியுள்ளனர். 

கிறிஸ்துவை அறிவிக்கவேண்டிய ஊழியர்கள்களும் அவர்கள் நடத்தும் தொலைக்காட்சியும் கடவுளைப்பற்றிய அறிவில்லாத குருடராக இருக்கும் இளைஞர்களை மேலும் மேலும் குழப்பத்துக்குள்ளாக்குகின்றன. குருடராக்குகின்றன. ஆம், கடவுளை அறியா குருடராக இருக்கும் மக்களை மேலும்  வழிதப்பச் செய்கின்றனர் இவர்கள். இத்தகைய ஊழியர்கள் மனம்திரும்பி மக்களுக்கு இடறல் உருவாக்காமல் சத்தியத்தை அறிவிக்க  ஜெபிப்போம். குருடரை வழி தப்பச் செய்வது மகா பாவம். பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இதனைக் கண்டிக்கின்றது.

"குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்." ( உபாகமம் 27 : 18 )

"அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே." ( மத்தேயு 15 : 14 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                         

No comments: