ஆதவன் 🖋️ 613 ⛪ அக்டோபர் 02, 2022 ஞாயிற்றுக்கிழமை
"வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது." ( நீதிமொழிகள் 28 : 9 )
கிறிஸ்தவர்கள் பலரும் ஜெபத்தைக்குறித்து கொண்டுள்ள கருத்துக்கள் விபரீதமானவை. பல ஊழியர்களும்கூட ஜெபம் என்பதை ஏதோ கடமைபோல எண்ணுகின்றனர். அதிகாலையில் ஜெபிக்கும் ஜெபத்துக்கு வல்லமை அதிகம், ஒரு நாளைக்கு பத்தில் ஒரு பங்கு நேரம் , அதாவது 2 மணி 40 நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும், காலை ஜெபிப்பதற்குமுன் மற்றவர்களிடம் பேசக்கூடாது (ஏனெனில் ஆண்டவரிடம்தான் முதலில் பேசவேண்டுமாம்) இப்படிப் பல மூடத்தனமான எண்ணங்கள் கொண்டுள்ளனர். இவற்றை பல ஊழியர்கள் விசுவாசிகளுக்கும் கட்டளைபோலச் சொல்லிக்கொடுத்துள்ளனர்.
தேவன் நமது தாய் அல்லது தகப்பன் என்று வேதம் கூறுகின்றது. தேவனை தாயாக, தகப்பனாக எண்ணி மேற்படி கருத்துக்களை சிந்தித்துப்பாருங்கள். எந்த தாயும் தகப்பனும் தன்னிடம் தனது பிள்ளை அதிகாலையில் கேட்டால்தான் எதனையும் கொடுப்பேன் என்றோ, தினமும் 2 மணி 40 நிமிடம் தன்னுடன் பேசவேண்டுமென்றோ, காலையில் முதலில் தன்னிடம்தான் பேசவேண்டுமென்றோ நிபந்தனை விதிப்பதில்லை. அடிப்படை அன்புதான் நம்மை அவர்களோடும் அவர்களை நம்மோடும் பிணைத்துள்ளது. இதுபோல தேவனை நாம் தாயும் தகப்பனுமாக எண்ணும்போதுதான் அவரிடம் அன்பு ஏற்படுமே தவிர மற்றபடி அன்பு ஏற்படாது.
மட்டுமல்ல, எந்த தாயும் தகப்பனும் தனது பிள்ளை தனது சொல்படி கேட்டு நல்ல ஒழுக்கமும் நேர்மையுமுள்ளவனாக வளரவேண்டுமென்றே விரும்புவார்கள். துன்மார்க்கமாய் அலையும் தறுதலைப் பிள்ளையைப் பெற்றவர்கள் வெட்கப்படுவார்களேதவிர அந்த பிள்ளைக்கு எதனையும் இரங்கிச் செய்யமாட்டார்கள்.
ஆம், இதுபோலவே நாம் தேவனுக்கு ஏற்பில்லாத செயல்பாடுகளைக் கொண்டிருந்தோமானால் தேவன் நமது ஜெபங்களைக் கேட்பதில்லை. வேதத்தில் தேவன் நாம் நடக்க வேண்டிய வழிகளைக் கூறியுள்ளார். அந்த வேதத்தையே கேட்கமாட்டோம் என்று கூறுபவனது ஜெபத்தைத் தேவன் எப்படிக் கேட்பார்? எனவேதான் இன்றைய வசனம் கூறுகின்றது, "வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது". என்று.
ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தேவன் இதனை ஏற்கெனவே கூறியுள்ளார். "நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது." ( ஏசாயா 1 : 15 )
இன்று கிறிஸ்தவர்களில் பலர் நாம் சுவிசேஷம் சொல்லும்போது நகைக்கின்றனர். எங்களுக்கு எங்கள் பாரம்பரிய முறைமைகள்போதும் என்கின்றனர். அன்பானவர்களே, பாரம்பரிய முறைமைகள் அல்ல, வேதம் கூறும் முறைமைகள் தான் முக்கியம். நமது ஜெபங்கள் கேட்கப்பட வேண்டுமானால் முதலில் நாம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெறவேண்டும்.
வேத வசனங்களைக் கேட்கக் கேட்க நாம் நமது பாவங்களை, குற்றங்களை உணர்ந்துகொள்கின்றோம். ஒரு கண்ணாடி எப்படி நமது முகத்தின் அழகைப் பிரதிபலிக்கின்றதோ அதுபோல வேத வசனங்கள் நமது அகத்தின் அழகினைப் பிரதிபலிக்கும். நமது ஆவிக்குரிய வாழ்வை அவை சீர்படுத்தும். எனவேதான் நாம் வேதத்துக்குச் செவிகொடுக்காவேண்டியது அவசியம். அப்படி நம்மை நாம் சீர்படுத்தும்போது மட்டுமே தேவனுக்கு ஏற்புடையவர்களாகின்றோம். அப்போதுதான்தேவன் நமது ஜெபத்தைக் கேட்டு நமக்குப் பதிலளிப்பார்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
.jpg)
No comments:
Post a Comment