Friday, September 09, 2022

"அதிகம் காணிக்கைக் கொடுப்பவனுக்கு தேவன் அதிகம் கொடுப்பார்" என்பது சாத்தானின் உபதேசம்.

  ஆதவன் 🖋️ 592 ⛪ செப்டம்பர் 11,  2022 ஞாயிற்றுக் கிழமை


"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 3 )

ஆதியில் ஏதேன் தோட்டத்தில்  பாம்பு ரூபத்தில் வந்த சாத்தான் ஏவாளை வஞ்சித்தது. தேவனது வார்த்தையினை மாற்றிப்பேசி அவளைத் தான் சொல்லுவதுதான் சரி என்று நம்பச் செய்தது. இங்குத்  தவறான உபதேசங்களை பவுல் அடிகள் சாத்தானின் வஞ்சக உபதேசத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார். 

கிறிஸ்துவின்மேலான உண்மையான விசுவாசத்துக்குத் தடையான உபதேசங்கள், கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்பு ஏற்படுத்துவதற்குத் தடையான உபதேசங்கள் எல்லாமே சாத்தானின் வஞ்சக உபதேசங்கள்தான்.  

வேதத்தில் சொல்லப்படாத கிறிஸ்துவைப் பிரசங்கிப்பது சாத்தானின் வஞ்சக உபதேசம். ஒருவேளை இத்தகைய போதனைகளைக் கேட்க மக்கள்  கூட்டம் அதிகம் சேரலாம், மற்றபடி இது வேறொரு கிறிஸ்துவைப் போதிப்பதே,  "எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால்,  ( 2 கொரிந்தியர் 11 : 4 )  அது சாத்தானின் உபதேசம்.

புதிய ஏற்பாட்டின்படி  நமது உள்ளத்தையும் உடலையும் பரிசுத்தமாகப்  பாதுகாத்து உயிருள்ள  ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதே புத்தியுள்ள மெய்யான ஆராதனை. (ரோமர் 12:1) இதுவே ஆவிக்குரிய ஆராதனை. மட்டுமல்ல, இதுவே ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் முதல் படி. ஆனால் ஒருவன், "நீ ஆயிரம் ரூபாய் காணிக்கைக் கொடுத்தால் உனக்கு பத்தாயிரமாகத் தேவன் திருப்பித் தருவார், அதிகம் காணிக்கைக் கொடுப்பவனுக்கு தேவன் அதிகம் கொடுப்பார்" எனப் பிரசங்கித்தால் அது ஏவாளை வஞ்சித்த சாத்தானின் உபதேசம்.  

ஏவாள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டாள்.  "தோட்டத்தின் நடுவிலிருக்கும் மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று தேவன் ஆதாம் ஏவாளிடம் கூறியிருந்தார். ஆனால் இன்று ஆசீர்வாத போதகர்கள் ஆசீர்வாதத்தின் அர்தத்தினையும் அதனைப் பெறும் வழிகளையும் மறைத்துப் பிரசங்கிப்பதுபோல சாத்தானும் ஏவாளிடம் மாற்றிப் போதித்தான்.  

"அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ( ஆதியாகமம் 3 : 4, 5 )

இதனைத்தான் அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில், "ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." என்று குறிப்பிடுகின்றார்.

அன்பானவர்களே, பவுல் அடிகள் பயப்பட்டதுபோலவே இன்று நடைபெறுகின்றது. பிற மதத்து மக்கள்  இன்றைய பல ஊழியர்களது போதனைகள், அவர்களது செயல்பாடுகளால் கிறிஸ்தவ மார்க்கத்தின்மேல் சரியான புரிதல் கொள்ளமுடியாமல் இருக்கின்றனர். ஆம், சத்தியத்தை இப்படித் திரித்துப் போதிப்பது சாத்தானுக்கு ஏற்புடையதாக இருப்பதால் சாத்தான் இவர்களது ஊழியங்களைப் பரிபூரணமாக ஆசீர்வதித்திருக்கின்றான். 

தேவனுடனான நமது தனிப்பட்ட  உறவில் நாம் வளர்ந்தால் மட்டுமே நாம் இந்த வஞ்சக போதனைகளுக்குத் தப்பி சத்தியத்தை அறிய முடியும்.  ஆலயங்களுக்குச் செல்வது, வேதாகமம் வாசிப்பது, ஜெபக்கூட்டங்களில் பங்கு பெறுவது மட்டும் போதாது. நமது தனி ஜெபம்தான் தேவனோடுள்ள உறவைப் பலப்படுத்தும். அந்த உறவு பலப்படும்போது மட்டுமே சாத்தானின் தந்திரங்களுக்குத் தப்பி ஒரு மெய்யான ஜெயமுள்ள ஆவிக்குரிய  வாழ்வு வாழ முடியும்.   

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712   

No comments: