இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, September 22, 2022

தேவன் கிளி ஜோசியம்போல பேசுபவரல்ல; அவர் பிரத்தியட்சமாக பேசுபவர்

 ஆதவன் 🖋️ 608 ⛪ செப்டம்பர் 27,  2022 செவ்வாய்க்கிழமை

"நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்." ( ஏசாயா 30 : 21 )

இன்றைய வசனம் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் பற்றிக் கூறுகின்றது. கர்த்தரது வார்த்தைக்குக்  கீழ்ப்படிந்து வாழும்போது நாம் அவரது மக்களாகின்றோம். பரலோக சீயோனுக்கு நாம் சொந்தக்காரர்கள் ஆகின்றோம். அப்படி வாழ்பவர்கள் கர்த்தரது பரிசுத்த நகரான எருசலேமில் வாழ்பவர்களாக இருப்பார்கள்.  இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனங்களில் ஏசாயா இதனைத்தான் பின்வருமாறு கூறுகின்றார்:- 

"சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்." ( ஏசாயா 30 : 19 )

மட்டுமல்ல இப்படி வாழும் மக்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று வழிநடத்தக்கூடிய தேவனது வார்த்தைகளை அவர்களே கேட்பார்கள். இதனையே ஆவியானவரின் வழிநடத்துதல் என்கின்றோம். இந்த தேவனது வழிநடத்தும் வார்த்தைகளே  நம்மை நீதி நியாயம் உள்ள மனிதர்களாக மாற்றி நம்மை நீதியின் பாதையில் நடந்திடும். 

இப்படி நம்மை வழிநடத்திடும் பரிசுத்த ஆவியானவரைத்தான் இயேசு கிறிஸ்து நமக்கு வாக்களித்தார். 

"நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்"( யோவான் 16 : 7, 8 )

இயேசு கிறிஸ்து வாக்களித்த பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல் நமக்குத் தேவையென்றால், நாம் முதலில் அதனை விரும்பவேண்டும். இயேசு கிறிஸ்து கூறியபடி அவருக்கு உகந்தவர்களாக வாழ  நம்மை அவருக்கு  முற்றிலும் ஒப்படைக்கவேண்டும்.  

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் ஆவியானவருக்குத் தங்களை ஒப்புவிக்காமல், அவரது வழிநடத்துதலின்படி வாழ விரும்பாமல் இருந்துகொண்டு தங்களது தேவைகள், பிரச்சனைகளுக்கு மட்டும் அவரைத் தேடுகின்றனர். அவர்கள் தேவனது குரலை குறுக்கு வழியில் கேட்க முயலுகின்றனர். கண்களை மூடி வேதாகமத்தைத் திறந்து விரலை வேதாகமத்தில் வைத்து அங்கு காணும் வசனத்தை தேவன் தங்களுக்குத் தந்த வழிகாட்டும் வசனமாக எண்ணிக்கொள்கின்றனர்.   

இப்படி நாம் தேவ குரலைக் கேட்க வேதாகமம் நமக்கு அறிவுறுத்தவில்லை.  நமது தேவன் கிளி ஜோசியம்போல பேசுபவரல்ல. அவர் பிரத்தியட்சமாக பேசுபவர். நமது பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்தி நம்மை நீதியின் பாதையில் நடத்துபவர். 

அன்பானவர்களே, தேவனுக்கும் அவரது வழிநடத்துதலுக்கும் நம்மை முற்றிலும் ஒப்படைப்போம். அப்போது, நாம் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று நம்மை வழிநடத்தும் தேவனது வார்த்தைகளை நமது காதுகள் கேட்கும். இந்த வழிநடத்துதல் தான் தேவனுக்கேற்ற பரிசுத்தராக நம்மை வாழவைக்கும்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712               

No comments: