ஆதவன் 🖋️ 617 ⛪ அக்டோபர் 06, 2022 வியாழக்கிழமை
"துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்." ( எபிரெயர் 10 : 22 )
பழைய ஏற்பாட்டு முறைமையின்படி ஆசாரியன் மட்டுமே மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிக்கமுடியும். ஆனால் இன்று புதிய ஏற்பாட்டின் முறைமையில் நாம் எல்லோருமே ஆசாரியர்கள்தான். எனவே நாம் அனைவருமே பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்திட கிறிஸ்துவே தனது இரத்தத்தால் வழி உண்டாக்கியுள்ளார்.
இதனையே இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனங்கள் பின்வருமாறு கூறுகின்றன:- "ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்," ( எபிரெயர் 10 : 19, 20 ) என்று.
தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினால் ( எபிரெயர் 10 : 21 ) நாம் பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய உரிமை பெற்றுள்ளோம். ஆனால் அப்படி நுழைந்திட இன்றைய தியான வசனம் இரண்டு நிபந்தனைகளை கூறுகின்றது. அவை:-
1. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம்
2. சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரம்
ஆம் அன்பானவர்களே, முதலாவது, நமது இருதயம் இயேசு கிறித்துவின் இரத்தத்தால் தெளித்து துப்புரவாக்கப்பட்ட சுத்த இருதயமாக இருக்கவேண்டியது அவசியம். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8) என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளாரே? இருதயத்தில் சுத்தமில்லாமல் நாம் செய்யும் வழிபாடுகளோ, ஆராதனைகளோ, நாம் செலுத்தும் காணிக்கைகளோ நம்மைத் தேவனிடம் சேர்க்காது.
அதுபோல நமது உடலானது பாவ பழுதற்றதாக இருக்கவேண்டியது அவசியம். அதனையே சுத்த ஜாலத்தால் கழுவப்பட்ட சரீரம் என்று வசனம் கூறுகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 ) என்று எழுதுகின்றார்.
உடலால் பாவச் சேற்றில் வாழ்ந்துவிட்டு அதனைப்பற்றி எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நாம் செய்யும் ஆராதனைகள் தேவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. நமது உடலை தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும். ஆடு மாடுகளைப் பலியிடுவதில்கூட பழுதற்றவைகளையே பலியிடவேண்டுமென்று பழைய ஏற்பாட்டு முறைமையில் கூறப்பட்டுள்ளது. அதுபோல நமது உடலை தேவனுக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கும்போது அது பரிசுத்தமானதாக, பாவமில்லாததாக இருக்கவேண்டியது அவசியம்.
அன்பானவர்களே, நமக்கு ஏற்கெனவே மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்திட நமது பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்து தனது சொந்த இரத்ததால் வழியமைத்துக் கொடுத்துள்ளார். அவரது இரத்ததால் உண்டாக்கப்பட்ட மீட்பினை நாம் விசுவாசிக்கவேண்டும். அவரது இரத்தத்தால் நாம் கழுவப்பட நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். அவர் நம்மைத் தூய்மையாக்கி மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் நுழையத் தகுதிப்படுத்துவார்.
அப்போதுதான் நாம் இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் பரலோகத்தில் சேரமுடியும்.
உள்ளத்திலும் உடலிலும் தூய்மையில்லாமல் நாம் செய்யும் எந்த ஆராதனையும், சடங்குகளும், காணிக்கைகளும் நம்மைப் பரலோகம் கொண்டு செல்லாது.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment