✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 18, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,287
"நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்". (எரேமியா 31:16)
ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்தும் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மக்கள் பலர் உண்டு. ஆம், சில வேளைகளில் நாம் எவ்வளவுதான் உண்மையும் உத்தமுமான வாழ்க்கை வாழ்ந்தாலும் நெருக்கடிகளும் பாடுகளும் நம்மைத் துரத்துவதுண்டு. யோபுவின் வாழ்க்கையைப் பாருங்கள், "அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்." (யோபு 1:1) என்று வாசிக்கின்றோம்.
ஆனால் யோபு பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளானார். '..ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது." ( யோபு 6 : 3, 4 ) என்று அவர் புலம்பினார். அவரது நண்பர்கள் யோபுவின் துன்பத்துக்குக் காரணம் அவர்தான்; அவரது பாவம்தான் என்று அவர்மேல் பழிசுமத்தினார்கள். ஆனால், இறுதியில் அவரது நண்பர்களைத் தேவன் கடிந்துகொண்டதை நாம் வாசிக்கின்றோம்.
ஆம், ஆவிக்குரிய வாழ்வில் வரும் சில துன்பங்கள் நம்மால் புரிந்துகொள்ளமுடியாதவை. ஆனால் தேவன் நமது கண்ணீரைப் பார்க்கின்றார். அதனை அவர் புறக்கணிப்பதில்லை. எசேக்கியா ராஜா நோய்வாய்ப்பட்டபோது "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." ( 2 இராஜாக்கள் 20 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. எசேக்கியா தேவனுக்காக வைராக்கியம்கொண்டு பல நல்ல செயல்களைச் செய்தவர்தான்.
இதுபோலவே இன்று நாம் ஆவிக்குரிய வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் துன்பங்கள் வருமானால் நம்மைப்பார்த்தும் தேவன் சொல்கின்றார், "நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்; உன் கிரியைக்குப் பலனுண்டு".
நேர்மையாக வாழ்பவர்களின் கண்ணீரைத் தேவன் புறக்கணிப்பதில்லை. பிளவை நோய் முற்றியதால் ஏசாயா தேவ அறிவிப்புப் பெற்று எசேக்கியா ராஜாவிடம் "நீர் உயிர் பிழைக்கமாட்டீர், எனவே உமது வீட்டின் காரியங்களை ஒழுங்குபடுத்தும்" என்று கூறினார். ஆனால், "ஏசாயா பெரிய தீர்க்கதரிசியல்லவா? அவரே கூறிவிட்டாரே இனி நான் பிழைக்கமாட்டேன்" என்று எசேக்கியா எண்ணவில்லை; மனம் தளரவில்லை.
நமது தேவனிடம் இரக்கங்கள் உண்டு என்பதனை உணர்ந்திருந்த எசேக்கியா தேவனை நோக்கிக் கண்ணீருடன் விண்ணப்பித்தார். எசேக்கியாவின் நற்செயல்களை அறிந்திருந்த தேவன், "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்." ( 2 இராஜாக்கள் 20 : 5, 6 ) என்று வாக்களித்து அதனை நிறைவேற்றினார்.
ஆம் அன்பானவர்களே, "அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டு" என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 19, 2024. 💚திங்கள்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,288
"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 )
மரித்தபின்பு நித்திய ஜீவனுக்குள் நுழையத் தகுதியுள்ளவர்களாக மாறவேண்டியதே உலகினில் வாழும் ஒவ்வொருவரும் செய்யவேண்டியது. எல்லோருக்கும் அதில் நுழைந்திட ஆசைதான். ஆனால் இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும்" என்று.
அதற்கான காரணத்தையும் "அது இடுக்கமான வாசல்" வழியாக நுழையவேண்டிய அனுபவம் என்றும் இயேசு கூறுகின்றார்.
அப்போஸ்தலரான பவுல் அதனை, விசுவாசத்தின் அடிப்படையிலான போராட்டத்தின் வெற்றியின் மூலம்தான் அடையமுடியும் என்கின்றார். "விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய். " ( 1 தீமோத்தேயு 6 : 12 ) ஆனால் நித்திய ஜீவனை விரும்பும் பலரும் இப்படி விசுவாச போராட்டத்தினை விரும்புவதில்லை.
உலக வாழ்க்கையினை மகிழ்ச்சியோடு அனுபவிக்கவேண்டும்; தேவனைவிட்டு நம்மைப் பிரிக்கும் உலகத்திலுள்ள அனைத்து இன்ப பாவகாரியங்களையும் அனுபவிக்கவேண்டும் இறுதியில் நித்தியஜீவனும் வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து கூறும் அந்த இடுக்கமான வாசல் இப்படி எல்லோரையும் நுழைய அனுமதிக்கும் வாசல் அல்ல.
இப்படித் தங்களுக்கு உலகமும் வேண்டும் தேவனும் வேண்டும் என்று இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்தவர்கள் அதில் நுழைய முடியாது என்கின்றார் இயேசு கிறிஸ்து. "இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." ( மத்தேயு 6 : 24 )
ஆம் அன்பானவர்களே, "அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும்" என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடும் இந்த அநேகர் பிரவேசிக்க வகை தேடினவர்கள்தான். ஆனால் அவர்கள் எப்படித் தேடினார்கள்? அவர்கள் நாம் மேலே பார்த்தபடி உலகத்துக்கும் தேவனுக்கும் பிரியமாக இருக்க முயன்று வழிதேடினார்கள்.
நித்தியஜீவனுக்குச் செல்லும் பாதை குறுகியது. எல்லோரையும் அனுமதிக்கும் விசாலமான பாதையல்ல அது. எனவே அன்பானவர்களே, நாம் அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடி இயேசு கூறிய இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்க முயற்சிசெய்யவேண்டும். போராட்டமில்லாமல் வெற்றியில்லை.
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 20, 2024. 💚செவ்வாய்க்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,289
"புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்." ( தீத்து 3 : 9 )
இன்று கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் முக்கியமான பிரச்னை தேவையில்லாத தர்க்கங்கள். பல்வேறு கிறிஸ்தவ பிரிவினரும் தேவையில்லாமல் ஒருவரையொருவர் குறைகூறுவதும் நாம் அறியாத ஒன்றல்ல. இவைகள் பிரயோஜனமில்லாதவை என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல்.
திருச்சபைகளுக்குள் இன்று, "நாங்கள்தான் கிறிஸ்து உருவாக்கிய ஆதி திருச்சபை, எங்களிடம்தான் ஆரம்பமுதலான வரலாறு உள்ளது" என்றும், "நாங்கள்தான் தப்பறைகள் எதுவும் இல்லாமல் சீர்திருத்தப்பட்ட சீர்திருத்தச் திருச்சபை" என்றும், "நாங்கள்தான் ஆவிக்குரிய ஆராதனை செய்யும் ஆவிக்குரிய சபை" என்றும் வெற்றுப் பெருமை பேசும் நிலை உள்ளது மறுக்கமுடியாதது. இவைகளையே "புத்தியீனமான தர்க்கங்கள்" என்கிறார் அப்போஸ்தலரான பவுல்.
மெய்யான கிறிஸ்தவன் இப்படிச் சபை பாகுபாடுபார்த்து சண்டைபோடுபவனாக இருக்கமாட்டான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்களது வாழ்வில் சொந்த இரட்சகராக அறியாமல் இருந்துகொண்டு இப்படித் தர்க்கம் செய்வது அறிவீனம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்." ( 1 கொரிந்தியர் 2 : 2 ) என்று கூறுகின்றார்.
பொது மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் இந்த வசனம், "நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை." (1 கொரிந்தியர் 2:2) என்று உள்ளது.
அதாவது, பாரம்பரியங்களோ, வம்சவரலாறுகளோ, தாங்கள் சார்ந்துள்ள சபைப் பிரிவினைக்குறித்த பெருமைகளோ பிரயோஜனமில்லாதவை. சிலுவையில் அறையப்பட்ட அவரைத்தவிர நாம் வேறு எதனையும் அறியவேண்டிய அவசியமில்லை. கிறிஸ்துவை அறியாமல் வாழ்ந்துவிட்டு வெறும் சபை பெருமையோடு இருப்பது அறிவீனமல்லவா? இறுதித் தீர்ப்புநாளில் கிறிஸ்து நம்மிடம், "நீ எந்தச் சபையைச் சார்ந்த்தவன்? " என்று கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனாலும் இன்று சபைகளின் போதகர்களும் குருக்களும் இந்த அறிவில்லாமல்தான் இருக்கின்றார்கள்.
கிறிஸ்துவை அறியாத இறையியல் படிப்போ, பாரம்பரியங்களோ வீணானவை. மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நாம் நினைக்கவும் வேண்டாம். அப்படி அறிய நினைப்பதும் அவை குறித்த தர்க்கங்களும் பெருமைகளும் சண்டைகளும் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். அவைகளைவிட்டு விலகுவோம்.
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 21, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,290
"பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்." ( கொலோசெயர் 1 : 4, 5 )
இன்றைய தியான வசனம் நாம் எப்படிப்பட்ட ஊழியர்களை நமக்கு வழிகாட்டிகளாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக உள்ளது.
நம்மைக்குறித்து பரலோகத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையின்படி நாம் வாழும்போது பரலோகத்தில் மகிழ்ச்சியுண்டாகின்றது. "மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 15 : 7 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?
அந்த "நம்பிக்கையினிமித்தம், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்." என்று அப்போஸ்தலராகிய பவுல் கூறுகின்றார்.
விசுவாசிகளுக்கு என்னென்ன காரியங்கள் வேண்டும் என்று அவர் ஜெபிக்கின்றார் என்றும் கூறுகின்றார். "நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். (கொலோசெயர் 1:9-11)
ஆனால் இன்றைய பிரபல ஊழியர்களும் கன்வென்சன் பிரசங்கிகளும் டி.வி ஊழியர்களும் என்னென்ன காரியங்களுக்காக ஜெபிக்கின்றார்கள்? தங்களது விசுவாசிகளுக்கு தொழில் முன்னேற்றமடைய, சொத்து வாங்க, வீடுகட்ட, கார் வாங்கிட இன்னும் இதுபோல என்னென்ன உலக ஆசீர்வாதங்கள் உண்டோ அனைத்துக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்கின்றார்கள். மட்டுமல்ல, வேத சத்தியங்களை மறைத்துப் பிரசங்கித்து விசுவாசிகள் பரலோகத்துக்குச் செல்லத் தடையாக இருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் மாதத் துவக்கத்திலும், "சென்ற ஆண்டைப்போல /மாதத்தைப்போல நீ துன்பத்தைக் காணமாட்டாய்... கர்த்தர் உன் கண்ணீர்களை பார்க்கின்றார். இந்த மாதம் / வருடம் உனக்கு ஆசீர்வாதமானது" என்கின்றார்கள். அப்படியானால் இவர்கள் சென்ற மாதம் / ஆண்டு சொன்னது பொய்யா அல்லது இப்பொது கூறுவது பொய்யா என்று மக்களும் சிந்திப்பதில்லை.
அன்பானவர்களே, நாம் தேடவேண்டியது இப்படிப்பட்ட போலிகளையல்ல; இன்றைய வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் வேண்டுதல்செய்ததுபோல நமக்காக உண்மையாக வேண்டுதல் செய்யும் ஊழியர்களையே.
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 22, 2024. 💚வியாழக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,291
"தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்." ( லுூக்கா 17 : 20, 21 )
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் வந்து நம்மை ஆட்சிசெய்வதே தேவனுடைய ராஜ்ஜியம். அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றதே தவிர வெளியில் இருப்பதல்ல.
இந்த உலகத்தில் பல சர்வாதிகாரிகள் தங்களுக்குக் கீழே ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தி மொத்த உலகத்தையே ஆட்சிசெய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் அது கூடாமல்போயிற்று. ஆனால் அமைதியின் அண்ணலான இயேசு கிறிஸ்து அமைதியாக இன்று தனது ராஜ்யத்தை விசுவாசிகளின் உள்ளத்தில் நிறுவி அழியாமல் இருக்கின்றார்.
ஆம், எனவேதான் தேவனுடைய ராஜ்யத்தை எவராலும் அழிக்க முடியவில்லை. அது ஒரு குறிப்பிட்ட இடத்திலல்ல நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது. எனவேதான் இயேசு கூறினார், "தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது" என்று.
உலக அரசாங்கங்களின் ராஜ்ஜியம் உழைப்பதும் பொருள் சேர்ப்பதும் உண்பதும் குடிப்பதும் தான். ஆனால், தேவனுடைய ராஜ்ஜியம் அப்படிப்பட்டதல்ல என்கின்றார் அப்போஸ்தலரான பவுல், "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 )
நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமும் நமக்குள் இருக்கின்றது என்றால் நமக்குள் தேவனுடைய ராஜ்ஜியம் இருக்கின்றது என்று பொருள். ஆம் அன்பானவர்களே, சந்தோஷம் சமாதானம் எப்போது நமக்கு வரும்? அது நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழும்போது மட்டுமே. தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருந்து நம்மை நடத்துவதால் இந்த சந்தோஷமும் சமாதானமும் நமக்குக் கிடைக்கின்றது. இத்தகைய ஒரு வாழ்வே தேவனுடைய ராஜ்யத்துக்கு ஏற்ற வாழ்வு.
தேவனுடைய ராஜ்ஜியம் நமக்குள் இருக்குமானால் நாம் பரலோக ராஜ்யத்துக்குத் தூரமானவர்கள் அல்ல. ஆவியானவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவரது வழிநடத்துதலை வேண்டுவோம். கிறிஸ்து நமக்குள் வந்து தனது ராஜ்யத்தை நமக்குள் நிறுவிட இடம்கொடுப்போம். இதோ, தேவனுடைய ராஜ்யம் நமக்குள் தான் இருக்கின்றது.
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 23, 2024. 💚வெள்ளிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,292
"அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்." (எபிரெயர் 4:13)
இந்த உலகத்தில் நாம் பலவேளைகளில் பலரையும் ஏமாற்றிவிடலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றிவிட முடியாது என்று கூறுவார்கள். இது உண்மையான கூற்றாக இருந்தாலும் தேவனைப் பொறுத்தவரை அவரை நாம் ஒரு சின்ன காரியத்தில்கூட ஏமாற்றிடமுடியாது.
ஒரு மனிதன் பதினைந்து ஆண்டுகளாக தனது மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தான். ஆனால் இந்த மனிதன் ஊரிலும் ஆலய காரியங்களிலும் முன்னின்று செயல்படுபவன். ஆண்டு விழாக்களிலும் இதர கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் அனைத்து பிரமுகர்களும் ஆயர்களும் இவனையும் இவனது பணிகளையும் பாராட்டி, "நமது ஊருக்குக் கிடைத்த பொக்கிஷம் இவர்" என்று கூறுவார்கள்.
ஆம் அன்பானவர்களே, நாம் ஒரு மனிதரது வெளிச் செயல்பாடுகளைப் பார்த்து அவர்களை மதிப்பிடுகின்றோம். ஆனால் தேவனை ஏமாற்றிட முடியாது. "அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்."
ஒரு மனிதனது வெளிச் செயல்பாடுகளையல்ல, அவனது உள்ளான மனத்தினையும் தேவன் அறிந்திருக்கின்றார். ஆதியாகமம் நூலில் காயின் ஆபேல் சரித்திரத்தை நாம் வாசித்திருக்கின்றோம். காயினது காணிக்கையினை தேவன் அங்கீகரிக்கவில்லை. காரணம், அவனது உள்ளான மனம் நேர்மையானதாக இல்லை; நன்மைசெய்யும் குணமுள்ளதாக இல்லை. எனவே காயினது காணிக்கையினை தேவன் அங்கீகரிக்கவில்லை இதனையே, "காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை." ( ஆதியாகமம் 4 : 5 ) என்று வாசிக்கின்றோம். ஆம், காயினை அங்கீகரிக்காததால் அவன் காணிக்கையினையும் அங்கீகரிக்கவில்லை.
இதனை நாம் தொடர்ந்து வாசிக்கும்போது பார்க்கின்றோம், "அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்." ( ஆதியாகமம் 4 : 6, 7 ) என்றார். காயினது எரிச்சல் அவனுக்குள்ளிருந்த கொலைகார குணத்தை வெளிப்படுத்துகின்றது. தேவன் அதனை அறிந்திருந்தார். ஆம், அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது.
நம்மை நாம் நிதானித்துப்பார்ப்போம். தேவனுக்கு அல்லது நம்மோடு வாழும் சக மனிதர்களுக்கு உண்மையில்லாத காரியங்களை நாம் செய்துகொண்டிருப்போமானால் நாம் எவ்வளவுதான் நல்ல காரியங்களை ஆலயத்துக்கென்று செய்தாலும் தேவன் அவற்றை அங்கீகரிக்கமாட்டார். சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது,
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 24, 2024. 💚சனிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,293
"கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்." ( எரேமியா 10 : 24 )
இன்றைய தியான வசனத்தில் எரேமியா தீர்க்கத்தரிசி தேவனுடைய தண்டனைக்குத் தன்னை ஒப்புவித்து ஜெபிக்கின்றார். "நீர் என்னைத் தாண்டியும் ஆனாலும் கடினமான தண்டனை தந்து என்னை அழிந்துவிடாமல் மட்டாய்த் தாண்டியும் என்கின்றார்.
நமது எண்ணங்கள், செயல்பாடுகள் வெற்றிபெறவேண்டுமானால் தேவனது கிருபை அவசியமாய் இருக்கின்றது. நமது வழிகள் நம்மால் ஆவதில்லை. நமது செயல்கள் அனைத்தும் நமது முயற்சியால் வெற்றிபெறுவதில்லை. அதற்கு தேவனுடைய கிருபை தேவையாய் இருக்கின்றது. இப்படி தேவனது கிருபையினைப் பெறுவதற்கு நமது பாவங்களும் தகாத செயல்பாடுகளும் தடையாக இருக்கின்றன.
இப்படித் தனது செயல்பாடுகள் இருந்துவிடக் கூடாது அப்படி இருக்குமானால் அவற்றுக்கு மட்டான ஒரு தண்டனையினைத் தந்து எனது வழி வாய்க்கும்படிச் செய்யும் என்கின்றார் எரேமியா. இதனையே இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் கூறுகின்றார், "கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்." ( எரேமியா 10 : 23 )
அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்தும் நமக்குத் துன்பங்கள் வருமானால் நாம் சோர்ந்துபோகக்கூடாது என்று நாம் எபிரெயர் நிருபத்தில் வாசிக்கின்றோம். அத்தகைய துன்பங்கள் "சிட்சை" அல்லது "தண்டனை" என்று கூறப்பட்டுள்ளது. "அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்." ( எபிரெயர் 12 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம்.
தகப்பன் தன் பிள்ளையை நேசிப்பதால்தான் தண்டிக்கின்றானேத்தவிர ஒரேயடியாக அழித்துவிடவேண்டுமென்று தண்டிப்பதில்லை. "நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 7 )
எனவே, இன்றைய தியான வசனத்தில் எரேமியா ஜெபித்ததுபோல நாமும் ஜெபிக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. காரணம், நம்மிடம் தேவனுக்கு ஏற்பில்லாத பல செயல்பாடுகள் உள்ளன. அத்தகைய செயல்பாடுகளுக்கு தேவ மன்னிப்பு பெறும்போது மட்டுமே நமது வழிகள், நமது திட்டங்கள் தேவ கிருபையால் வெற்றிபெறும். "கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்." என்று வேண்டுதல் செய்து முதலில் தேவ மன்னிப்பைப் பெறுவோம்.
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 25, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,294
"என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்."(லுூக்கா 9 : 26 )
இன்றைய தியான வசனத்தில் தன்னைக்குறித்து வெட்கப்படுதலைப்பற்றி இயேசு கிறிஸ்து கூறுவது ஒரு பெண் வெட்கப்படுவதுபோல வெட்கப்படுவதையல்ல; மாறாக, பிறர் மத்தியிலும் இக்கட்டான நேரங்களிலும் அவரது பெயரை வெளிப்படுத்தவும், அவர் கூறிய வசனங்களை குறிப்பிட்ட நேரங்களில் புறக்கணிப்பதையும் நாம் அவரை ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்டையாகக் கூறத் தயங்குவதையும் குறிக்கின்றது.
இன்று பல கிறிஸ்தவர்கள் இப்படியே இருக்கின்றனர். வேலைபார்க்கும் இடங்களில் அல்லது மற்ற மதத்தினரோடு ஒரே இடத்தில சேர்ந்து தங்க நேரிடும்போது தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதனை வெளிப்படுத்தத் தயங்கி அவர்களைப்போன்ற செயல்பாடுகளைச் செய்வதைக் குறிக்கின்றது.
மற்றவர்களோடு நாம் ஒற்றுமையாகவும் நண்பர்களாகவும் வாழவேண்டியது அவசியம். ஆனால், ஆவிக்குரிய காரியங்களில் நாம் நமது தனித் தன்மையினை விட்டுவிடக்கூடாது. அப்படி விட்டுவிடுவது கிறிஸ்துவைக்குறித்து வெட்கப்படுவதாகும்.
மேலும், கிறிஸ்துவைக்குறித்தும் அவரது வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படுவது என்பது அவரது வார்த்தைகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவது. இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் ஆலய வழிபாடுகளைத் தவிர மற்ற எந்த விதத்திலும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதில்லை. சாதாரண மனிதர்களைவிடக் கீழானவர்களாக பல வேளைகளில் செயல்படுகின்றனர்.
கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலர் கூட ஏமாற்று, லஞ்சம், கொலை, விபச்சாரம், பதுக்கல், பணம் சம்பாதிக்கக் கையாளும் பல்வேறு குறுக்கு வழிகள், சைபர் கிரைம் (cyber crime) போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபடுவதை நாம் செய்தித்தாட்களில் வாசிக்கின்றோம். இவை போன்ற செயல்பாடுகள் செய்யும்போது நாம் கிறிஸ்துவை வெட்கப்படுத்துகின்றோம்
இப்படி "என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்." என்கின்றார் இயேசு கிறிஸ்து. அவர் வெட்கப்படுவார் என்பது மணப்பெண்போல வெட்கப்படுவார் என்று பொருளல்ல; இப்படிச் செய்பவர்களை அருவெறுத்து புறம்பே தள்ளுவார் என்று பொருள்.
ஆம் அன்பானவர்களே, எனவே இதுபோல கிறிஸ்துவைக்குறித்து வெட்கபடாமலும் கிறிஸ்துவை வெட்கப்படுத்தாமலும் வாழ்வோம். அதனையே அவர் விரும்புகின்றார்.
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 26, 2024. 💚திங்கள்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,295
"அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்." ( சங்கீதம் 30 : 5 )
மனிதர்களுடைய பலவீனம் தேவனுக்குத் தெரியும். அவர் எப்போதும் மனிதர்கள்மேல் கோபம் கொள்வதில்லை. எனவே, நமது தப்பிதங்களுக்கு அவர் தண்டனை கொடுத்தாலும் ஒரு தாய் தவறு செய்த குழந்தையை மீண்டும் சேர்த்துக்கொள்வதுபோல அணைத்துச் சேர்த்துகொள்கின்றார். "நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." ( ஏசாயா 57 : 16 ) என்று கூறுகின்றார் தேவனாகிய கர்த்தர்.
இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்." என்று வாசிக்கின்றோம். ஒரு இரவு முடிந்து பகல் விடிவதைப்போல நமது துக்கங்கள் துயரங்களை அவர் மாற்றுவார். காரணம், "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 ) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது நாம் தேவனுக்கு பயப்படும் ஒரு வாழ்க்கை வாழும்போது இது சாத்தியமாகின்றது.
இதனையே நாம் மேலும் ஏசாயா நூலில் வாசிக்கின்றோம், "அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 8 ) ஆம் அன்பானவர்களே, "அவருடைய இரக்கங்கள் மகா பெரியது" (1 நாளாகமம் 21:13) அவரது கோபமோ அற்பகாலம்தான்.
இன்று ஒருவேளை பல்வேறு துன்பங்கள் நம்மை நெருக்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமல்ல. தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோமானால் அவரது இரக்கங்கள் நமக்கு நிச்சயம் உண்டு. மனம்திரும்பிய ஒரு வாழ்க்கை வாழ விரும்புவோமானால் அவரது இரக்கம் நமக்கு நிச்சயம் உண்டு.
இஸ்ரவேல் மக்கள் பல்வேறு முறை தேவனுக்கு எதிராக செயல்பட்டு எதிரி இராஜாக்களிடம் அடிமைகளாக ஒப்புக்கொடுக்கப்பட்டபோதும் அவர்கள் மனம் திரும்பியபோது தேவன் அவர்களை விடுவித்து இரட்சித்தார். அதுபோலவே, இன்று நமது பாவ வாழ்க்கை நமக்குப் பல்வேறு துன்பங்களை வாழ்வில் கொண்டு வந்திருக்கலாம். "அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை" என்று இன்றைய தியான வசனம் சொல்வதற்கேற்ப நாம் மனம்திரும்பும்போது நமது ஆயுள் காலம்வரை நமக்கு அவர் இரக்கம் காட்டுவார்.
தகப்பன் தன் பிள்ளையை நேசிப்பதால்தான் தண்டிக்கின்றானேத்தவிர ஒரேயடியாக அழித்துவிடவேண்டுமென்று தண்டிப்பதில்லை. ஆம் அன்பானவர்களே, தேவனிடம் திரும்புவோம். அப்போது சாயங்காலத்தில் அழுகை தங்கினாலும் விடியற்காலத்திலே நமது வாழ்வில் களிப்புண்டாகும்.
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 27, 2024. 💚செவ்வாய்க்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,296
"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 )
எரேமியா மிகப்பெரிய தீர்க்கதரிசி, அதே வேளையில் மிகப்பெரிய துன்பங்களையும் வாழ்வில் அனுபவித்தவர். புதைகின்ற சேறு நிறைந்த கிணற்றில் போடப்பட்டு அதில் அழுந்தி பரிதபித்தவர். ஆனால் அவர் தனது அனுபவத்தில் கண்டறிந்த உண்மை தான், "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." என்பது. இது வெற்று வார்த்தையல்ல.
மட்டுமல்ல, அவர் தனது அனுபவத்தின்மூலம் துணிந்து கூறுகின்றார், "கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்". ( புலம்பல் 3 : 24, 25 ) சிறிய சிறிய துன்பங்களை அனுபவித்தவர்; அவற்றிலிருந்து தேவன் அவரை விடுவித்த வல்லமையினை அனுபவித்தவர்; எனவே, பெரிய துன்பம் வந்தபோது கூறுகின்றார், "அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்" என்று.
வேதாகமத்தில் நாம் இத்தகைய வாசகங்களை பல இடங்களில் பல பரிசுத்தவான்கள் அறிக்கையிடுவதை வாசித்திருக்கின்றோம். இத்தகைய வசனங்கள் நமக்கு நம்பிக்கையும் தேவனுக்குக் காத்திருக்கும் பெலத்தையும் அளிக்கின்றன. காரணம், இந்த உலகத்தில் நமக்கு துன்பங்களும் சோதனைகளும் உண்டு என்று இயேசு கிறிஸ்துவே கூறியிருக்கின்றார். ஆம், "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." ( யோவான் 16 : 33 ) அவர் உலகத்தை ஜெயித்ததைப்போல நாமும் ஜெயிக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்; அதற்கான பலத்தையும் நமக்குத் தருகின்றார்.
சில ஆசீர்வாத ஊழியர்கள் பொய்யாகக் கூறுவதுபோல, மனம்திரும்பி இயேசு கிறிஸ்துவிடம் வந்தவுடன் அனைத்துத் துன்பங்களும் மறைந்துவிடும் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. ஆனால், ஒன்று நிச்சயம், "ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்." ( புலம்பல் 3 : 31, 32 ) இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை.
ஆம் அன்பானவர்களே, நமது தேவன் கிருபை நிறைந்தவர். எனவே, "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 ) என்று கூறுகின்றார் எரேமியா.
இதனை வாசிக்கும் அன்பு சகோதரனே, சகோதரியே, இன்று ஒருவேளை நீங்கள் துன்பத்தையும் பாடுகளையும் பிரச்சனைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவை நிரந்தரமல்ல. எந்நேரமும் கர்த்தரது கிருபையைச் சார்ந்துகொள்ளவேண்டியதே நாம் செய்யவேண்டியது. அப்படி நாம் தேவ கிருபையினைச் சார்ந்து வாழும்போது நமது பலவீனத்தில் நாம் தேவ பெலனை அனுபவிக்கமுடியும்.
"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று அப்போஸ்தலனாகிய பவுலிடம் கிறிஸ்து கூறவில்லையா? எனவே அவர் கூறுவதுபோல, கிறிஸ்துவின் வல்லமை நம்மேல் தங்கும்படி, நம் பலவீனங்களைக்குறித்து நாம் சந்தோஷமாய் பெருமைகொள்வோம்.
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 28, 2024. 💚புதன் கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,297
"எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்." ( ஏசாயா 26 : 13 )
மனம்திரும்பாத வாழ்க்கை வாழும்போது நாம் பல்வேறு உலக பொருள்களுக்கும் பாவங்களுக்கும் அடிமைகளாக இருக்கின்றோம். அதாவது இவைகள் நம்மை ஆண்டுவருகின்றன என்று பொருள். அப்போது நாமும் தேவனாகிய கர்த்தரைத் தேடாமலும் அவர் நம்மை ஆட்சிசெய்ய விடாமலும் வாழ்ந்து வருகின்றோம். இதனையே, "எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்" என்று இன்றைய வசனத்தில் வாசிக்கின்றோம்.
ஆனால் நாம் கிருபையால் தன்னை அறிந்துகொள்ள தேவன் கிருபை செய்தார். வேறு ஆண்டவன்மார்களுக்கு அடிமைகளாக வாழ்ந்த நம்மைத் தேவன் விடுவித்துத் தனக்கு அடிமைகளாக்கினார்.
இப்படி வேறு ஆண்டவன்மார் தங்களை ஆண்டபோது இஸ்ரவேல் மக்கள் பல்வேறு துன்பங்களுக்குள்ளானதை நாம் நியாயாதிபதிகள் மற்றும், அரசர்கள் நூல்களில் வாசிக்கின்றோம். அதுபோல, அந்த மக்கள் தங்கள் பாவங்களுக்கு மனம்திரும்பி மன்னிப்பு கேட்டபோதெல்லாம் தேவன் அவர்களை மன்னித்து விடுவித்ததையும் பார்க்கின்றோம். "தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம்." ( யோசுவா 24 : 18 ) என்று இஸ்ரவேல் மக்கள் அறிக்கையிட்டதையும் பார்க்கின்றோம்.
"நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்." ( யோசுவா 24 : 15 ) என்கின்றார் யோசுவா.
அன்பானவர்களே, இன்று நம்மை அடிமைப்படுத்த உலக அரசர்கள் வருவதில்லை. மாறாக, உலகப் பொருளாசை, புகழாசை, பதவியாசை இவையே அடிமைப்படுத்த முயல்கின்றன. இவற்றுக்கு நாம் அடிமைகளாகின்றபோது நாம் இவை நம்மை ஆட்சிசெய்யும்படி ஒப்புக்கொடுக்கின்றோம் என்று பொருள். இப்படி இவை நம்மை ஆளவிடாமல் தேவனாகிய கர்த்தரே நம்மை ஆளும்படி ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று இன்றைய வசனம் மூலம் நாம் அறிகின்றோம்.
ஏசாயா கூறுவதைப்போல, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம் என்று நம்மை நாம் முற்றிலும் தேவனுக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுக்க வேண்டியது அவசியம்.
இப்படி நாம் பாவங்களுக்கும் அசுத்தமான வாழ்க்கைக்கும் விலகி கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று அப்போஸ்தலராகிய பவுல் நமக்கு அறிவுரைகூறுகின்றார். ஆம், "அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 )
இப்படி நமது உடலை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுக்கும்போது நாம் இதுவரை நம்மை ஆண்டுவந்த வேறே ஆண்டவன்மார்களை விட்டு விலகுகின்றோம் என்று பொருள். கர்த்தர் நம்மை ஆளும்படி ஒப்புக்கொடுத்த நாம் இனி கர்த்தரையேச் சார்ந்து அவருடைய நாமத்தை மட்டுமே பிரஸ்தாபப்படுத்துவோம்.
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 29, 2024. 💚வியாழக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,298
"இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்." ( ஏசாயா 38 : 17 )
தேவன் எசேக்கியா ராஜாவின் நோயைக் குணமாக்கி அவரது வாழ்நாட்களை பதினைந்து ஆண்டுகள் நீட்டிக்கொடுத்தபோது எசேக்கியா எழுதிவைத்த வார்த்தைகளே இன்றைய தியான வசனம்.
இங்கு எசேக்கியா தனது நோய் குணமானதைவிட தேவன் தனது பாவங்களை மன்னித்ததையே முக்கியமாக கருதுகின்றார். எனவேதான் அவர் கூறுகின்றார், "தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்." என்று.
மனிதர்களுக்கும் தேவனுக்குமுள்ள முக்கிய வித்தியாச மனநிலையினை இந்த வசனத்தில் நாம் பார்க்கின்றோம். மனிதர்கள் நாம் ஒருவரை மன்னித்தாலும் அவர்கள் நமக்கு எதிராகச் செய்த தவறையும் குற்றத்தையும் நாம் எளிதில் மறந்துவிடுவதில்லை. ஆனால் தேவன் அப்படியல்லாமல் நமது பாவங்களை மன்னிப்பதுடன் அவற்றை தனது முதுகுக்குப் பின்னாக எறிந்து விடுகின்றார் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவற்றை அவர் திரும்பிப் பார்க்கமாட்டார்.
இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து எசேக்கியா கூறுகின்றார், இப்படிப் பாவங்களை மன்னிக்கும் மகிமையான தேவனாக அவர் இருப்பதால் அவரது நாமத்தை நான் துதித்துக்கொண்டிருப்பேன். மட்டுமல்ல, இப்படிப் பாவ மன்னிப்பு பெற்றவன் எவனும் தேவனுடைய இந்தச் சத்தியதைக்குறித்து தனது பிள்ளைகளுக்கும் தெரிவிப்பான் என்கின்றார். "பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்." ( ஏசாயா 38 : 18, 19 )
அன்பானவர்களே, தனது உடல்நோய் நீங்கியதைவிட பாவ மன்னிப்பு பெற்றுக்கொண்டதையே மேன்மையாகக் கருதும் எசேக்கியாவைப்போல நாம் இருக்கின்றோமா?
எசேக்கியா இப்படி பாவங்கள் மன்னிக்கப்பட்டதை மேன்மையாகக் கருத முக்கிய காரணமும் இன்றைய தியான வசனத்தில் உள்ளது. அதாவது உடல்நோய் இந்த உலகத்திலிருந்து நம்மைக் கொல்லலாம் ஆனால் பாவம் நமது ஆத்துமாவை நிரந்தரமாகக் கொல்லும். அதனால் நித்திய நரகத்துக்கு நேராக நாம் செல்லவேண்டியிருக்கும். அதனையே அவர், "தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்" என்கின்றார்.
தேவன் நமது ஆத்துமாவை அழிவின் குழிக்குத் தப்புவிக்கவே நமது பாவங்களை மன்னிக்கின்றார். அதற்காகவே பரிகார பலியாக தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நியமித்திருக்கின்றார். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிடுவோம். ஆம் அன்பானவர்களே, அப்போது எசேக்கியா ராஜா குணமானதுபோல நமது உடல்நோய்களும் ஆத்தும பாவங்களும் கழுவப்படும்.
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 30, 2024. 💚வெள்ளிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,299
"பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன்." ( லுூக்கா 12 : 49 )
இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அக்கினி அல்லது நெருப்பு பற்றி கூறுகின்றார். இந்த நெருப்பை பூமியில் போடவே தான் வந்திருப்பதாகக் கூறுகின்றார். இயேசு கிறிஸ்து கூறும் இந்த நெருப்புதான் என்ன? அது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கின்றது. நெருப்புக்குள்ள குணங்களெல்லாம் ஆவியானவருக்கு உண்டு. அந்த நெருப்பு இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன் என்று இயேசு கூறுகின்றார்.
ஆனால் தொடர்ந்து, "ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்." ( லுூக்கா 12 : 50 ) என்றும் கூறுகின்றார். அதாவது பரிசுத்த ஆவியானவரை உலகில் அனுப்ப இயேசு விரும்புகின்றார் ஆனால் அதற்குமுன் அவர் பாடுபட்டு மகிமையடையவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அதுவே பிதாவின் சித்தம். அந்தப் பாடுகளையே அவர், "நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு" என்கின்றார்.
கிறிஸ்துவின் பாடுகள் மரணம் வழியேதான் ஆவியானர் உலகிற்கு அனுப்பப்பட்டார். இதனை நாம் யோவான் நற்செய்தியில், "இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை." ( யோவான் 7 : 39 ) என்று வாசிப்பதால் அறிந்துகொள்ளலாம்.
இயேசு கிறிஸ்து கூறும் இந்த அக்கினி பாவத்தைச் சுட்டெரிக்கும் அக்கினி. தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்பவர்களையும் உலகத்துக்கு ஒத்து வாழ்பவர்களையும் பிரிக்கும் அக்கினி. ஆம், ஒரே வீட்டில் வசித்தாலும் ஆவிக்குரியவர்களும் கிறிஸ்துவை அறியாத அதே வீட்டில் வசிப்பவர்களும் பல்வேறு விதங்களில் மனதளவில் பிரிந்திருப்பர். இதனையே இயேசு கிறிஸ்து, "நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 12 : 51 ) என்கின்றார்.
"எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள்". ( லுூக்கா 12 : 52, 53 )
ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து பூமியில் போடும் அக்கினி இப்படிப் பிரிவினையுண்டாக்கும் அக்கினி. ஆனால் இந்தப் பிரிவினை நிரந்தரமானதல்ல. ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கிறிஸ்துவை அறிந்து சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது இந்தப் பிரிவினை மறைந்துவிடும். கிறிஸ்து பூமியின்மேல் போடவந்த அக்கினியை கிறிஸ்துவை அறிவிப்பதன்மூலம் இன்று நாம் உலகத்தில் போடுகின்றோம். அந்த அக்கினி உலகினில் இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புவோம்; செயல்படுவோம்.
✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 31, 2024. 💚சனிக்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,300
"நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது." ( 1 யோவான் 1 : 10 )
ஒருமுறை பிற சமயத்தைச் சார்ந்த நண்பரொருவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, "கிறிஸ்தவர்கள்தான் பாவம் பாவம் என்று எப்போதும் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.... உலகத்தில் பிறந்திருக்கும் எல்லோரும் பாவம் செய்துகொண்டா இருக்கிறார்கள்? என்று கேட்டார். அவருக்கு நான் வேதாகமம் கூறும் சத்தியத்தின் அடிப்படையில் சில விளக்கங்களை அளித்தேன்.
அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது இந்த உலகத்தில் பலரும் கருதும் தீயசெயல்கள் மட்டுமே பாவம் எனும் எண்ணம் அவருக்கு இருப்பது புரிந்தது. ஆம் அன்பானவர்களே, இன்று கிறிஸ்தவர்கள் பலரும்கூட இவரைப்போலவே இப்படி எண்ணிக்கொண்டிருக்கின்றனர். கொலை, களவு, விபச்சாரம், ஏமாற்று, கற்பழிப்பு போன்ற செயல்கள் மட்டுமே பாவம் என்றும் தாங்கள் இவைகளைச் செய்யாததால் பாவம் செய்யவில்லை என்றும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்". அதாவது நான் பாவம் செய்ததே இல்லை என்று ஒருவர் கூறுவாரென்றால் அவர் கடவுளைப் பொய்யராக்குகின்றார் என்று பொருள். மட்டுமல்ல அப்படிச் சொல்பவரிடம் கடவுளது வார்த்தை இராது.
எனவேதான் வேதம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்றது, "ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை." ( பிரசங்கி 7 : 20 ) என்று. பாவம் என்பது கொடிய பாவச் செயல்கள் மட்டுமல்ல, தீய எண்ணங்கள், மற்றவர்களை அவமதிப்பது, அற்பமாக எண்ணுவது, பிறரது பெயரைக்கெடுப்பது, பொறாமை, வஞ்சக எண்ணங்கள், இவைபோன்றவைகளும்தான். மட்டுமல்ல, தேவ சித்தம் செய்யாமலும் தேவ சித்தத்துக்கு எதிராகச் செயல்படுவதும் பாவமே.
மேலும், இச்சைதான் மிகப்பெரிய பாவம். இதுவே பாவங்களுக்கு நேராக நம்மை இழுத்துச் செல்கின்றது. பத்துக்கட்டளையின் இறுதிக்கட்டளை, இச்சையைப்பற்றி கூறுகின்றது. அதாவது மற்றவர்களது உடைமைகளின்மேல் மனதில் ஆசைகொள்வது. இதுவும் பாவமே. இதனையே அப்போஸ்தலரான பவுல், "இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே." ( ரோமர் 7 : 7 ) என்கின்றார்.
"இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்." ( யாக்கோபு 1 : 15 ) என்று வாசிக்கின்றோம். இப்படி இருப்பதால், நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. இச்சையை வெல்லும்போதே நாம் பாவத்தையும் மேற்கொண்டு வெற்றியடைகின்றோம். தேவ ஆவியானவர் அதற்கு நமக்குத் துணைசெய்கின்றார்.
எனவே நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். நம்மில் யாரும் பரிசுத்தர் அல்ல. ஆனால் தேவன் நாம் அவரைப்போல பரிசுத்தராகவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். அப்படி நாம் பாவத்தை வென்று பரிசுத்தராக நமக்கு உதவிட பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். எனவே, நான் பாவம் செய்யவில்லையென்றும் நாம் செய்த பாவங்களை நியாயப்படுத்தாமலும் தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். "மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்." ( நீதிமொழிகள் 14 : 9 ) என்று கூறும் வசனம் நமக்கு ஓர் எச்சரிப்பு. நாம் மூடர்களாக இருக்கக்கூடாது.