இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, July 19, 2022

கர்த்தருடன் இணைந்த வாழ்வை வாழ்வோம்

 ஆதவன் 🖋️ 540 ⛪ ஜுலை 21, 2022 வியாழக்கிழமை


"கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு." ( சங்கீதம் 27 : 14 )


கர்த்தருக்குக் காத்திரு என்று இன்றைய வசனம் வலியுறுத்திக் கூறுகின்றது. "கர்த்தருக்கே காத்திரு" என்று கூறுவது அவருக்காக மட்டுமே காத்திரு எனும் பொருளில்தான். 

காத்திருத்தல் என்பது ஒன்றும் செய்யாமல் ஒரு பேருந்துக்கோ ரயிலுக்கோ காத்திருப்பதுபோல காத்திருப்பதையல்ல. மாறாக, பொறுமையோடு அமைதியாக கர்த்தர் செயல்படும்வரை உன் மனதில் விசுவாசத்தோடு இரு என்பதாகும். அதனைத்தான் திடமானதாயிரு என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், காத்திருத்தல் எனும் வார்த்தைக்கு மூல வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள  கிரேக்க வார்த்தை QAVAH என்பதாகும். இதற்குக்   'காத்திருத்தல்' எனும் பொருளைத் தவிர வேறு   இரண்டு அர்த்தங்களும்  கூறப்பட்டுள்ளன. ஒன்று 'பின்னுதல்' (பெண்கள் தலை முடியைப் பின்னுவதுபோல) இன்னொரு பொருள் 'இணைத்தல்' (bind). அல்லது 'ஒட்டிக்கொள்ளுதல்'. எனவே இந்த வசனத்தின் மெய்யான பொருள், கர்த்தரோடு கர்த்தராக உன்னை பின்னிக்கொள், அவரோடு அவராக ஒட்டிக்கொள்  என்பதாகும். அப்படி இருக்கும்போது அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். 

மேலும் இப்படிக் கர்த்தரோடு தங்களை இணைத்துக் கொண்டவர்களைக் குறித்து ஏசாயா, "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 ) என்று கூறுகின்றார்.

ஆவிக்குரிய வாழ்வில் நாம் நடக்கும்போது நம்மைத் திடப்படுத்தவும் நாம் அவரோடு மேலும் நெருங்கிடவும் தேவன் சில வாக்குத்தத்தங்களை நமக்குத் தரலாம். அவை நமது வாழ்வில் நிறைவேறிட காலதாமதமாகலாம். ஆனால் நாம் அவரோடுள்ள உறவில் விலகிடாமல் நெருக்கமாக இருக்கவேண்டியது அவசியம்.

ஆபிரகாம் எழுபத்தைந்து வயதுள்ளவனாய் இருந்தபோது தேவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேறிட அவர் தனது நூறு வயதுவரை காத்திருக்கவேண்டியிருந்தது. அவர் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். காரணம், தேவனோடு அவர் தன்னைப் பிணைத்துக்கொண்டார்; அவரோடு ஒட்டிக்கொண்டார். 

அன்பானவர்களே, திடமனதாய் கர்த்தருடன் இணைந்த வாழ்வை வாழ்வோம். வேதாகமத்தை வாசிப்பதும், அன்றாட ஜெபத்தில் தரித்திருப்பதும் அவருக்கேற்ற ஒரு வாழ்வை வாழ்வதும் அவரோடுள்ள நமது நெருக்கத்தை அதிகரிக்கும். அப்போது அவர் நமது இருதயத்தை உறுதிப்படுத்துவார்.  அப்போது எந்த உலகக் கவலையும் பிரச்சனைகளும் நம்மை மேற்கொள்ளாது.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

No comments: