Wednesday, July 20, 2022

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுவோம்.

 

ஆதவன் 🖋️ 541 ⛪ ஜுலை 22, 2022 வெள்ளிக்கிழமை


"நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்." ( கொலோசெயர் 3 : 1, 2 )

கிறிஸ்துவுடன் கிறிஸ்துவுக்காக மரித்து (அதாவது பாவத்துக்கு மரித்து) அவருடன் எழுந்திருப்பதே நாம் இரட்சிக்கப்பட்டுளோம் என்பதற்கு அடையாளம். அப்படி இரட்சிப்பு அனுபவத்தைப் பெற்றவர்கள் கிறிஸ்துவைப்போல மேலான எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள்.

அதனையே,    "நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்" என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். ஒருவர் கிறிஸ்துவுக்குள் மரித்து உயிர்த்த அனுபவம் உள்ளவரென்றால் (அதாவது இரட்சிக்கப்பட்டவரென்றால் ) இப்படி மேலானவைகளைத் தேடுபவராக இருப்பார்.

தேவனுடைய வலது பாரிசத்தில் இருப்பவை இந்த பூலோகத்திலுள்ளவைகளல்ல. அந்த பரலோக மகிமை காரியங்கள் பவுல் அடிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டது.  அதனையே பவுல் அடிகள், "அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம்...."( 2 கொரிந்தியர் 12 : 7 ) என்று கூறுகின்றார்.

ஆனால் இந்த உலகத்தில் பெரும்பாலான கிறிஸ்தவ பிரசங்கிகளும் தங்களைக் ஆவிக்குரிய சபைகள் என்று  கூறிக்கொள்ளும் சபைகளும்  இந்த அனுபவத்தையோ, இதுபற்றிய தெளிவோ இல்லாமல் நூறு சதவிகிதம் உலக காரியங்களையே பிரசங்கித்து மக்களை இருளுக்கு நேராக நடத்துகின்றனர். இவர்கள் நூதனமான சுவிசேஷத்தை அறிவிக்கின்றனர்.

"நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்களானால் கிறிஸ்துவிடம் உங்கள் எல்லா உலகத்  தேவைகளையும் கேளுங்கள். கிறிஸ்து வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளையல்ல பூமியிலுள்ளவைகளையே  நாடுங்கள். அதற்கு அதிக காணிக்கைகளைக் கொடுங்கள். பத்தில் ஒருபங்கு வருமானத்தை எங்களுக்குத் தாருங்கள்; நீங்கள் கொடுப்பது பலமடங்காக உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும்." என்பதே இவர்களது நூதன சுவிசேஷம். 

அன்பானவர்களே, ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பிரபல பிரசங்கிகளால் வஞ்சிக்கப்படுகின்றார்கள். மக்களது காணிக்கைப் பணத்தால் இவர்களால் துவக்கப்பட்ட பத்திரிகைகளும் டெலிவிஷன்களும் இருளுக்கு நேராக மக்களை வழிநடத்தவே பயன்படுகின்றன.  

நாம் நம்மைக் காத்துக்கொள்வோம். கிறிஸ்துவுடன்கூட எழுந்த நாம், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளையேத் தேடுவோம். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுவோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

No comments: