ஆதவன் 🖋️ 533 ⛪ ஜுலை 14, 2022 வியாழக்கிழமை
"இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." ( யோவான் 16 : 32 )
தனித்திருத்தல் என்பது மிகுந்த துன்பம் தரக்கூடியது. இந்தத் துன்பம் அனைவருக்குமே ஏதோ ஒரு காலத்தில் வரக்கூடும். எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவும் இந்தத் தனித்திருத்தலை அனுபவித்தார்.
அதனையே அவர், "நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது". என்று குறிப்பிட்டார். உலக மனிதர்கள் இந்தத் தனித்திருத்தலை எளிதில் தாக்கிக்கொள்ளமுடியாது. மகன் இறந்த துக்கம், மனைவி இறந்த துக்கம், கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்வதுண்டு. நாம் பத்திரிகைச் செய்திகளில் பல நேரங்களில் இதனை வாசித்திருக்கலாம்.
ஆனால் இயேசு கிறிஸ்து எல்லோராலும் கைவிடப்பட்டவராக, தனித்திருப்பவராக, உலகத்துக்குத் தெரிந்தாலும் அவர் உண்மையில் தனித்திருக்கவில்லை. அவரோடு பிதாவாகிய தேவன் எப்போதும் இருந்தார். எனவேதான் "நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." என்று கூறுகின்றார். எல்லோராலும் கைவிடப்பட்டாலும் பிதா அவரைக் கைவிடவில்லை.
அன்பானவர்களே, இன்று ஒருவேளை உலகப்பிரகாரமான தனித்திருத்தலில் இதை வாசிக்கும் நீங்கள் இருக்கலாம். பெற்ற பிள்ளைகள் ஒருவேளை கைவிட்டு இனி என்ன செய்வது எனக் கலங்கிக்கொண்டிருக்கலாம். கை பிடித்தக் கணவன் கைவிட்டிருக்கலாம். ஆனால் நம்மைப் படைத்து நம்மோடு இருக்கும் தேவன் நம்மைத் தனித்திருக்க விடமாட்டார். அவர் கூடவே இருக்கிறார் என்று விசுவாசியுங்கள்.
"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." ( ஏசாயா 41 : 10 ) என்கிறார் கர்த்தராகிய தேவன்.
"நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்" என்று இயேசு கிறிஸ்துவுக்கு வந்ததுபோல நமக்கும் ஒரு காலம் வரும் என்பதால் தேவனோடு நாம் எப்போதும் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது நாமும் இயேசுவைப்போல துணிவுடன் கூறலாம், "நான் தனித்திரேன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னுடனேகூட இருக்கிறார்" என்று.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment