ஆதவன் 🖋️ 523 ⛪ ஜுலை 04, 2022 திங்கள்கிழமை
"என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என்பாவத்தையும் எனக்கு உணர்த்தும். நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?"( யோபு 13 : 23, 24 )
யோபு தேவனிடம் உரிமையோடு தனது பாவங்களுக்காக மன்றாடும் விண்ணப்பம் தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம். தனது தொடர்ந்த துன்பங்களுக்குத் தனது பாவங்கள்தான் காரணமாக இருக்குமோ என்று யோபு அஞ்சினார். ஏனெனில் அவரைப் பார்த்து ஆறுதல் கூறவந்த நண்பர்கள் எலிப்பாசும், பில்தாதும், சோப்பாரும் யோபுவைக் குற்றப்படுத்தியே பேசினர்.
நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக ஏன் எண்ணுகின்றீர் ? நான் செய்த பாவம்தான் என்ன? பாவத்தின் அளவுதான் என்ன? அதை எனக்கு உணர்த்தும். என்று யோபு தேவனிடம் கேட்கின்றார்.
யோபுவின் துன்பத்துக்குக் காரணம் அவரது பாவங்கள் அல்ல. யோபுவின் மனச்சாட்சியிலும் பாவ உணர்த்துதல் இல்லை. அவர் தேவனுக்குமுன் உத்தமனும், சன்மார்க்கனும் , தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகின்றவராகவும் வாழ்ந்துவந்தார் (யோபு - 1:1) எனவேதான் தைரியமாக தேவனிடம் கேட்கின்றார், "என்னை உமக்குப் பகைஞனாக ஏன் எண்ணுகின்றீர் ? நான் செய்த பாவம்தான் என்ன? பாவத்தின் அளவுதான் என்ன?" என்று.
அன்பானவர்களே, இன்று நம்மை நாம் நிதானித்துப் பார்ப்போம். யோபு கேட்டதுபோல நம்மால் தேவனிடம் கேட்க முடியுமா? எப்படிப் பார்த்தாலும் நாம் அனைவருமே பல்வேறு பாவங்களைச் செய்கின்றோம். எனவே நம்மால் இப்படிக் கேட்க முடியாதுதான். ஆனால், நாம் இந்த மேலான நிலைமைக்கு வரவேண்டும் எனும் உணர்வாவது நமக்கு இருக்கின்றதா என்று எண்ணிப் பார்ப்போம்.
திருமண வீடுகளிலோ அல்லது பொது இடங்களிலோ தெரிந்தவர்கள் சிலர் நம்மைக் கவனிக்காததுபோலச் செல்லும்போது "என்ன? கண்டும் காணாததுபோல செல்லுகிறீர்களே என்னை கோபம் உங்களுக்கு என்மேலே? என யோபு தேவனிடம் கேட்டக் கேள்விபோல மனிதர்கள் தங்களது சக நண்பர்களிடம் கேட்பதுண்டு.
ஆம், கர்த்தருக்கும் யோபுவுக்கும் அவ்வளவு நெருங்கியத் தொடர்பு இருந்தது. எனவேதான் கர்த்தர் யோபுவின் நண்பன் எலிப்பாசை நோக்கிக் கூறினார், "உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை." ( யோபு 42 : 7 )
என் தாசனாகிய யோபு என்று கர்த்தர் யோபுவைக் குறித்துக் கூறினார். இந்த நிலைமைக்கு நம்மை உயர்த்துவதுதான் மேலான ஆன்மீக அனுபவம். ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர்களும் தேவனிடம் அற்ப உலக ஆசீர்வாதங்களுக்காகவே ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். நாம் அவர்களைப்போலல்லாமல் மேலானவைகளையே நாடுவோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment