அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம்

 ஆதவன் 🖋️ 535 ⛪ ஜுலை 16, 2022 சனிக்கிழமை


"அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்."( யோவான் 11 : 16 )

இந்தியாவின் அப்போஸ்தலர் தோமாவைக்குறித்து நாம் அதிகம் எண்ணுவதில்லை. தோமாவின் வாழ்வின் செயல்பாடுகள், அவர் கிறிஸ்துவுக்காகக் காட்டிய வைராக்கியம் இவை நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இப்போதுள்ளதுபோன்ற பிரயாண வசதிகள் கிடையாது. தவிர, நீண்ட கடல் பயணங்கள் ஆபத்தானவை. ஆனால் கிறிஸ்துவின்மேலுள்ள அன்பினால், தனது சொந்த மக்கள், குடும்பம், உணவுப் பழக்கம், காலசூழ்நிலை இவை அனைத்தையும்விட்டு,  மீண்டும் அங்கு சென்று தான் விட்டுவந்த எல்லோரையும் பார்க்க முடியுமா என்ற நிச்சயமில்லாமல் கிறிஸ்துவை அறிவிக்க இந்தியாவுக்கு வந்தார் அவர். 

கிறிஸ்துவோடு இருக்கும்போதே கிறிஸ்துவுக்காக அவரோடு உயிரை விடத் தயாராக இருந்தார் அவர். யூதேயாவுக்குச் செல்ல இயேசு புறப்பட்டபோது, அவரோடு அங்கு சென்றால் யூதர்கள் கல்லெறிந்து இயேசு கிறிஸ்துவைக் கொன்றால், நாமும் சாகநேரிடும் என மற்ற சீடர்கள் அஞ்சியபோது, "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்" என சக அப்போஸ்தலரையும் அவர் அழைக்கின்றார். 

கிறிஸ்துவோடு கிறிஸ்துவாக நமது பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டு மரிப்பதுதான் கிறிஸ்தவ வாழ்வு. இதனை தீர்க்கதரிசனமாக தோமா கூறுவதாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம். அப்போஸ்தலரான பவுல் இதனை, "நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 6 : 6 ) என்று கூறுகின்றார்.

இன்று உடலளவில் நாம் ஒருவேளை கிறிஸ்துவுக்காக மரிக்காமல் இருக்கலாம். ஆனால் அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல பாவத்துக்கு நாம் மரிக்க முடியும். நமது பாவ சரீரம் கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்படவேண்டும்.

அப்போஸ்தலரான தோமா மற்ற சீடர்களை அழைத்ததுபோல "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்" என நாம் நமது சமூகத்தில் உள்ள மற்றவர்களை அழைக்கக் கடமைப்பட்டுள்ளோம். 

மேலும், அப்படித் துணிந்து தோமா நடந்தபோதுதான் மிகப்பெரிய அற்புதத்தைக் காண முடிந்தது. ஆம், மரித்து நான்கு நாட்களான லாசருவை கிறிஸ்து உயிரோடு எழுப்பினார்.   அன்பானவர்களே, நாமும் நமது பாவ சரீரங்களை கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறைய ஒப்புக்கொடுப்போம்.  அப்போது நமது வாழ்விலும் கிறிஸ்து செய்யும் அதிசயங்களைக் கண்டு மகிழ முடியும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்