ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தின ....


 ஆதவன் 🖋️ 538 ⛪ ஜுலை 19, 2022 செவ்வாய்க்கிழமை

"பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்." ( மத்தேயு 11 : 25 ) 

ஒருவர் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு துறையில் சிறந்தவராக இருக்கலாம், ஆனால் அதனால் அவர் எல்லாம் தெரிந்தவரோ பெரிய மேதையோ என அர்த்தமல்ல. அவருக்கு ஏதோ பலவீனம் இருக்கும். அவரோடு நெருங்கிப் பழகினால்தான் அது தெரியும்.

இந்த உலகத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக புகழப்பட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.  இவர் விஞ்ஞானத்தில் மேதையாக இருந்தாலும் அவரது அறிவு கடவுளை அறிந்திடத் தடையாகவே இருந்தது. 

இந்த உலக வரலாற்றில் இதுவரைப் பிறந்தவர்களில் அதிக அளவு மூளைத்திறன் உள்ளவராக இருந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.  அவரது அறிவினைக்கண்டு வியந்த விஞ்ஞானிகள் அவர் மரித்தபின் அவரது மூளையைப் பாதுகாத்து  எப்படி இந்த மனிதனது மூளை இப்படி சிந்தித்தது , இவரதுமூளை மற்ற மனிதர்களது மூளையிலிருந்து எப்படி வேறுபட்டதாயிருக்கின்றது ஆராய்ச்சி செய்தனர்.

ஆனால், அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நம்மை வியக்கவைக்கும். ஒருமுறை அவர் ஏதோ காரியமாக ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். ரயிலின் டிக்கெட் பரிசோதகர் அவரிடம் வந்து டிக்கெட்டை காண்பிக்குமாறு கூறினார். ஐன்ஸ்டின் தனது மேல்சட்டை, கால்சட்டை, மேலே அணிந்திருந்த கோட் பாக்கெட் என அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தார். டிக்கெட் கிடைக்கவில்லை.

அவரையே பார்த்துக்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர், "டாக்டர் ஐன்ஸ்டின் அவர்களே, எனக்கு உங்களைத் தெரியும். நீங்கள் நிச்சயமாக டிக்கெட் வாங்கியிருப்பீர்கள். பரவாயில்லை, உங்களைப்போன்ற மேதைகளால் நமது நாட்டுக்கே பெருமை. நியாயப்படி அரசாங்கம் உங்களுக்கு இலவச பயண வசதி செய்துகொடுத்திருக்க வேண்டும்...அமர்ந்துகொள்ளுங்கள் " என்று கூறியபடி நகர்ந்தார்.

அவர் அடுத்த பெட்டியைநோக்கி நகரவும் ஐன்ஸ்ட்டின் கீழே குனிந்து தனது இருக்கையின் அடியில் டிக்கெட்டைத் தேடத் துவங்கினார். அதனைக் கவனித்தத் டிக்கெட் பரிசோதகர், "டாக்டர் ஐன்ஸ்டின் அவர்களே, பரவாயில்லை, எனக்கு அது தேவையில்லை" என்றார். அதற்கு ஐன்ஸ்டின் மறுமொழியாக, " சார், உங்களுக்கு அது தேவையில்லாமல் இருக்கலாம், எனக்கு அது தேவைப்படுகின்றது. நான் எங்கே செல்கிறேன் என்பது அதனைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும்" என்றார்.  

மிகப்பெரிய மேதை என உலகத்தால் புகழப்பட்ட மனிதன் இந்த உலகத்தில் தான் எங்கு செல்கிறேன்  என்று தெரியாமலே பயணம் செய்தது ஆச்சரியமாயில்லையா? தனது இந்த உலக பயணமே தெரியாதபோது மறுவுலகம் பற்றிய சிந்தனை அவருக்கு வேடிக்கையான கதையாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை. 

மேதை எனப் புகழப்பட்ட ஐன்ஸ்டின் ஒருமுறைக் கூறினார், " 'கடவுள்' என்ற வார்த்தை என்னைப் பொறுத்தவரை மனித பலவீனங்களின் வெளிப்பாடு மற்றும் விளைவுகளே தவிர வேறொன்றுமில்லை, பைபிள் மரியாதைக்குரிய, ஆனால் இன்னும் பழமையான சிறுபிள்ளைத்தனமான  கதைகளின் தொகுப்பாகும். இவற்றை நியாயப்படுத்த எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள முடியாது " 

ஆம், மேதையாய் இருப்பதால் எல்லாம் தெரிந்தவர் என எண்ணிவிடக்கூடாது. எனவேதான் இயேசு கிறிஸ்து, "பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்." ( மத்தேயு 11 : 25 ) என்றார். 

அன்பானவர்களே, இதுபோல நமது அறிவும் படிப்பும் தேவனை அறிந்திடத் தடையாக இருக்கலாம். அப்படி இராதபடி பார்த்துக்கொள்வோம். "ஆண்டவரே, நான் புழுதியும் குப்பையுமானவன், என் பாவங்களை எனக்கு மன்னித்து உம்மை நான் அறிந்திட கிருபை செய்யும்" என வேண்டுதல் செய்வோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்