ஆதவன் 🖋️ 521 ⛪ ஜுலை 02, 2022 சனிக்கிழமை
"அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்." ( எபேசியர் 3 : 3 )
யூதர்கள் மேசியா, அவர் அளிக்கும் மீட்ப அனுபவம் இவை எல்லாம் தங்களுக்கு மட்டுமே உரிமை என்று எண்ணிக்கொண்டார். ஆனால் கிறிஸ்து இயேசு தனது சுய இரத்தத்தால் உண்டாக்கிய மீப்பு அனுபவம் யூதர்களுக்கு மட்டுமல்ல, அவரை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும் சொந்தமாகும். இதனையே தனக்கு வெளிப்படுத்தப்பட்ட ரகசியம் என்கின்றார் பவுல் அடிகள்.
ஆனால், "இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை."( எபேசியர் 3 : 6 )
கிறிஸ்துவின் மீட்பினை எல்லா மனிதர்களும் பெறவேண்டும் என்பதுதான் தேவனுடைய சித்தம். "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." ( 1 தீமோத்தேயு 2 : 4 )
இப்படி மீட்பு அனுபவம் பெற்றவர்கள் அனைவரும் உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களும் கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்கள்.
இன்று கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் அனைவருமே யூதர்கள்தான்; ஆவிக்குரிய யூதர்கள். கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெறாதவர்கள் புறஜாதிகள். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் மீட்பினைப் பெறும்போது நம்மோடுகூட பங்காளிகளாகின்றனர். அதாவது நமக்கு தேவனிடமுள்ள அதே அளவு உரிமை அவர்களுக்கும் சொந்தமாகின்றது.
இதனால் நாம் யாரையும் அற்பமாக எண்ணாதிருப்போம். இன்று புறஜாதியாயிருப்பவர்கள் நாளையே நமது பங்காளிகளாக மாறிடும் வாய்ப்பு இருக்கின்றது. கிறிஸ்துவே அதனை அவர்களுக்கு வழங்குவார். எனவே அனைவரையும் மதிப்போம்; அனைவருக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்து நமது சொந்தமாக்குவோம்.
No comments:
Post a Comment