ஆதவன் 🖋️ 544 ⛪ ஜுலை 25, 2022 திங்கள்கிழமை
"ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." ( எபேசியர் 5 : 14 )
அதிகமான தூக்கம் மனிதனின் வாழ்வை நாசமாக்கும். தூங்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து நமது அன்றாட வேலைகளைச் செய்யாமலிருந்தால் தரித்திரம்தான் நம்மைத் தொடரும். " .........................."தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்." ( நீதிமொழிகள் 23 : 21 ) என்கின்றது நீதிமொழிகள். அதாவது சோம்பலாய் தூக்கத்திலேயே நாட்டம்கொண்டு இருப்போமானால் உடுத்துவதற்கு நல்ல ஆடை கூட இல்லாத நிலைமை ஏற்பட்டு கந்தலைக் கட்டிக்கொண்டு திரியவேண்டியிருக்கும்.
ஆனால் பவுல் அடிகள் இங்குக் குறிப்பிடுவது ஆவிக்குரிய தூக்கத்தைக்குறித்து. அதாவது ஆத்தும காரியங்களைக்குறித்து எந்தவித சிந்தனையுமில்லாமல் உலக காரியங்களையே எண்ணி ஆத்மத் தூக்கத்திலேயே இருப்பதைக் குறிப்பிடுகின்றார். அத்தகைய மனிதன் செத்தவர்களுக்குச் சமம் என்று பவுல் கருதுகின்றார்.
எனவேதான், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு. செத்தவன்போல இருக்காதே, விழித்துக்கொள் என்று அறிவுறுத்துகின்றார். ஆவிக்குரிய சிந்தனையே இல்லாமல் உலக காரியங்களையே எண்ணி அவற்றுக்காகவே உழைத்துக் கொண்டிருந்தோமானால் நாமும் இருளடைந்தவர்களாக இருப்போம். நம்மைக்கொண்டு யாருக்கும் எந்த பயனுமிராது.
கிறிஸ்துவோடு நம்மை இணைத்துக்கொண்டு ஆவிக்குரிய வாழ்வில் வளருவோமானால் கிறிஸ்துவின் மெய்யான ஒளி நம்மேல் துலங்கும். இதனையே, "அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." என்கின்றார் பவுல். எனவே நாம் மற்ற உலக மக்களைப்போல இருக்கக்கூடாது. "ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 6 )
ஆவிக்குரிய வாழ்வில் விழிப்புடன் இருக்கும்போது பல்வேறு துன்பங்களும் பிரச்சனைகளும் நம்மை நெருக்கலாம். ஆனால் நாம் இப்போது தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டோம் ஆதலால், பகலுக்குரியவர்களாக மாறிவிட்டோம். எனவே, பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக் கடவோம். ( 1 தெசலோனிக்கேயர் 5 : 8 )
அன்பானவர்களே, ஆதலால் ஆவிக்குரிய தூக்கத்தில் இருக்கின்ற நாம் விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திருக்க வேண்டியது அவசியம். அப்பொழுது மட்டுமே கிறிஸ்து நம்மைப் பிரகாசிக்க முடியும். கிறிஸ்து நம்மைப் பிரகாசிக்கும்போது மட்டுமே நம்மூலம் மற்றவர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளமுடியும்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment