ஆதவன் 🔥 887🌻 ஜூலை 03, 2023 திங்கள்கிழமை
"அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக் கொள்ளேன். " ( ஆதியாகமம் 14 : 22 ) என்றான்.
சோதோமின் ராஜாவும் அவனோடு வேறு சில ராஜாக்களும் சேர்ந்து ஆபிராமின் (ஆபிரகாம்) சகோதரனது மகனாகிய லோத்துவையும் அவனது உடைமைகளையும் கைபற்றிச் சென்றுவிட்டனர். ஆபிராம் அதனைக் கேள்விப்பட்டபோது தனது ஆட்களுடன் சென்று போரிட்டு எதிரி ராஜாக்களை வென்று லோத்துவையும் அவனது சொத்துக்களையும் மீட்டுக்கொண்டார். எதிரி நாட்டு ராஜாவின் சொத்துக்களையும் அந்நாட்டின் மக்களையும் சிறைபிடித்துக்கொண்டார்.
அப்போது சோதோமின் ராஜா ஆபிராமிடம், எங்களிடமிருந்து நீர் கைப்பற்றிய பொருட்களை வேண்டுமானால் வைத்துக்கொள்ளும் ஆனால் நீர் கைதுசெய்துள்ள எங்களது நாட்டு மக்களை திருப்பித் தந்துவிடும் என்று கேட்கிறான்.
இந்தச் சூழ்நிலையில் ஆபிராம் கர்த்தரை முன்னிறுத்திப் பார்க்கின்றார். சோதோமின் ராஜா கூறுவதுபோல கைப்பற்றிய பொருட்களை வைத்துக்கொண்டால் ஒருவேளை பிற்காலத்தில் , " நான்தான் ஆபிராமைச் செல்வந்தனாக்கினேன்; அவனிடமுள்ளவையெல்லாம் எனது சொத்துக்களே " என்று சோதோமின் ராஜா கூறுவான். அப்படிக் கூறுவது கர்த்தரை அவமதிப்பதுபோலாகிவிடும். ஏனெனில் கர்த்தர், "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்." ( ஆதியாகமம் 12 : 2 ) என்று ஆபிரகாமுக்கு ஏற்கெனவே ஆசீர்வாதத்தைக் வாக்களித்திருந்தார்.
எனவே, "ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்." என்று அந்தச் சொத்துக்களை ஆபிராம் மறுத்துவிட்டார்.
அன்பானவர்களே, இன்று நாங்கள் ஆவிக்குரிய மக்கள் என்றும் ஆவிக்குரிய ஆராதனை செய்கின்றோம் என்றும் கூறிக்கொள்ளும் பலர், அரசாங்க பதவியில் இருந்துகொண்டு கைக்கூலி, லஞ்சம், ஏமாற்று வழிகளில் பொருள்சேர்த்து பின்னர் , "கர்த்தர் எங்களை ஆசீர்வதித்துள்ளார்" எனச் சாட்சியும் கூறுகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளின்போது இவர்கள் சிக்கிக்கொள்கின்றனர். இது கிறிஸ்துவை அவமானப்படுத்துவதல்லவா?
ஆபிரகாமின் வாழ்வில் பல விசுவாச அறிக்கைகளும் செயல்களும் இருந்தன. இதனாலேயே ஆபிரகாமை நாம் விசுவாசத்தின் தந்தை என்கின்றோம். அவரது வாழ்வு நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. ஆம் அன்பானவர்களே, ஆபிரகாமைப்போல உண்மையான ஒரு வாழ்வு வாழ்வோம். குறுக்கு வழியில் முயலாமல், கர்த்தர் நம்மை உயர்த்தும்படி அவரது பலத்தக் கரங்களுக்குள் அடங்கி இருப்போம். அப்போதுதான் நமது வாழ்வு ஒரு சாட்சியுள்ள வாழ்வாக இருக்கும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment