ஆதவன் 🔥 880🌻 ஜூன் 26, 2023 திங்கள்கிழமை
"ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்." ( ரோமர் 7 : 21 )
நல்லவர்களாக வாழவேண்டும் எனும் எண்ணம் பொதுவாக எல்லோருக்குமே இருக்கின்றது. அதனால்தான் ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் அல்லது பிறந்தநாட்களிலும் பலரும் ஏதாவது தீய செயலை விட்டுவிடவேண்டுமென்று எண்ணி முடிவெடுக்கிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பரொருவர் கடந்த பத்து ஆண்டுகளாக, "இந்தப் புத்தாண்டுமுதல் குடியை விட்டுவிடப்போகிறேன் என்று முடிவெடுத்துள்ளேன்" என்று கூறிக்கொண்டிருகிறார். அவரது அந்த முடிவின்படி ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்கள் மட்டுமே குடிக்காமல் இருக்கிறார்.
சென்றமுறை இரண்டு மாதங்கள் குடிக்காமல் இருந்தார். பிறகு திடீரென்று குடித்துவிட்டு வந்துவிட்டார். அவரிடம் கேட்டால், "எனது மச்சினன் மகன் திருமணம் போன வாரம் நடந்தது. அப்போது ஒரு சந்தோஷத்துக்காகக் குடித்தேன். இப்போ பழையபடி கதை தொடருகிறது" என்கிறார். அன்பானவர்களே, இதுபோல பல கெட்டச் செயல்களைப் பலரும் விட்டுவிட நினைக்கின்றனர். ஆனால் அவர்களால் அது முடிவதில்லை. காரணம் நன்மைசெய்ய விரும்புகிற அவர்களிடம் தீமையென்ற ஒரு பிரமாணம் இருக்கின்றது.
இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது." ( ரோமர் 7 : 23 ) பவுல் அடிகள் குடியைக்குறித்து இப்படிச் சொல்லவில்லை. மாறாக, தேவனுக்கேற்ற பரிசுத்தமாக வாழவேண்டும் என எண்ணும் அவரிடம் அப்படி வாழ ஏதோ தடையாக இருப்பதைக் குறிப்பிடுகின்றார்.
எனவே அவர் கூறுகின்றார், "நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?" ( ரோமர் 7 : 24 )
அன்பானவர்களே, பவுல் அடிகள் ஏங்குவதைப்போல ஒரு ஏக்கம் நமக்கு வேண்டும். இந்தப் பாவப் பழக்கவழக்கத்திலிருந்து என்னை யார் விடுவிப்பார்? கட்டளைகள் நம்மை விடுதலையாக்காது. கட்டளைகள் எது பாவம் எது பாவமல்ல என்பதைகூறுமே தவிர அவை நம்மை விடுதலை ஆக்க மாட்டாது. மாறாக, கர்த்தரது ஆவியானவரின் பிரமாணத்துக்குள் நாம் வரும்போது மட்டுமே நமக்கு விடுதலைக் கிடைக்கும். ஆம், எனவேதான் "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்கின்றார் பவுல் அடிகள்.
அன்பானவர்களே, பாவத்திலிருந்து விடுதலை பெற நமது சுய பலத்தால் முடியாது. பாவத்திலிருந்து விடுபடவேண்டும் எனும் ஆசையோடு நம்மை தேவனுடைய ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். அப்படி தேவ ஆவியானவர் நம்மை நடத்தும்போதுதான் நாம் நமது உடல் பலயீனங்களை மேற்கொள்ள முடியும்.
"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 ) ஆம், நாம் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்த ஒப்புக்கொடுக்கவேண்டும். அப்படி தேவனுடைய ஆவி நம்மில் வாசமாயிருந்தால், நாம் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குரியவர்களாக இருப்போம். அப்போதுதான் நம்மால் பாவத்தை மேற்கொண்டு ஆவிக்குரிய மேலான வாழ்க்கை வாழ முடியும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment