ஆதவன் 🔥 878🌻 ஜூன் 24, 2023 சனிக்கிழமை
"நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." ( எபிரெயர் 10 : 36 )
நான் சந்திக்கும் சிலர் என்னிடம் சிலவேளைகளில் கூறுவது, "என்ன பிரதர், எத்தனை வருஷமாய் ஜெபிக்கிறேன், ஒண்ணும் நடக்கமாட்டேன்கிறது. உண்மையிலேயே ஆண்டவர் நான் ஜெபிப்பதைக் கேட்கிறாரா என்றே சந்தேகமாயிருக்கிறது ...."
பொதுவாக நாம் அனைவருமே நமது ஜெபத்துக்குத் தேவன் உடனடியாகப் பதிலளிக்கவேண்டுமென்று எண்ணுகின்றோம். ஆனால், தேவனது சித்தத்துக்கு நாம் பொறுமையோடு காத்திருப்பதில்லை. அப்போஸ்தலரான பவுல் அடிகள் தனது உடலிலிருந்த ஒரு நோய்க்காக (உடலில் இருந்த முள் என்று அதனைக் கூறுகின்றார்) மூன்று முறை ஜெபித்தார். அதனை, "அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்." ( 2 கொரிந்தியர் 12 : 8 ) என்று கூறுகின்றார்.
அதாவது முதலில் அதற்காக ஜெபித்திருப்பார், தேவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மீண்டும் இரண்டாம் முறையாக ஜெபித்தார். அப்போதும் எந்த பதிலையும் தேவன் கொடுக்கவில்லை. மீண்டும் மூன்றாம் முறையாக ஜெபித்தார். ஆனால் தேவன் அவரது நோயினை குணமாக்காமல், "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று பதில் கூறிவிட்டார். இப்படி தேவன் தரும் எதிர்மறையான பதிலையும் நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.
அன்பானவர்களே, பவுல் அடிகளுக்கு தேவன் அவரது ஊழியத்தைக்குறித்து வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருந்தார். அதுபோல நமக்கும் தேவன் ஒருவேளை சில வாக்குறுதிகளைத் தனிப்பட்ட முறையில் தந்திருக்கலாம். அல்லது வேதாகமத்திலுள்ள வாக்குறுதிகளை நாம் விசுவாசித்து ஜெபிக்கலாம். ஆனால் தேவனது பதிலைப் பெறுவதற்கு நாம் காத்திருக்கவேண்டியது அவசியம். இதனையே, "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வசனத்தில் முதற்பகுதியில் "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து" என்ற வார்த்தைகள் வருவதை நாம் கவனிக்கவேண்டும். வெறுமனே ஜெபிப்பதல்ல, அவருடைய சித்தத்தின்படி நமது செயல்கள் இருக்கவேண்டியது அவசியம். அப்படி தேவ சித்தத்தின்படி செய்து பொறுமையோடு காத்திருக்கவேண்டும் என்று இன்றைய வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.
நாம் சோர்ந்துபோகாமல் எப்போதும் ஜெபம் பண்ணவேண்டும் என்பதற்காக இயேசு கிறிஸ்து, தேவனுக்குப் பணியாதவனும் மனிதரை மதிக்காதவனுமான அநீதியுள்ள ஒரு நீதிபதியைக் குறித்த உவமையைக் கூறினார். அந்த உவமையின் இறுதியில் அவன் தன்னிடம் முறையிட்ட பெண்ணுக்கு நீதிவழங்குகின்றான். இந்த உவமையைக் கூறிய இயேசு கிறிஸ்து இறுதியில் கூறுகின்றார், "அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?" ( லுூக்கா 18 : 7 )
அன்பானவர்களே, சோர்ந்துபோகவேண்டாம். நிச்சயமாக நமது ஜெபத்துக்குத் தேவன் பதிலளிப்பார். ஆனால், தேவ பதிலையும் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கு பொறுமை நமக்கு வேண்டியதாயிருக்கிறது.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment