ஆதவன் 🔥 874🌻 ஜூன் 20, 2023 செவ்வாய்க்கிழமை
"நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்." ( யூதா 1 : 20, 21 )
அப்போஸ்தலரான யூதா தனது நிரூபத்தை பிதாவாகிய தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கும் இயேசு கிறிஸ்துவினால் காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கும் எழுதுவதாக ஆரம்பிக்கின்றார். அதாவது கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுக்கு என்று பொருள்.
நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வினைச் சுதந்தரித்துக்கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தைப் பெறவேண்டும்; அதற்கு நாம் காத்திருக்கவேண்டும் என்கின்றார். எப்படி காத்திருப்பது என்பதற்கு மூன்று காரியங்களைக் கூறுகின்றார்.
1. விசுவாசத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்
2. பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணவேண்டும்.
3. தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.
இங்கு, விசுவாசம் என்று வெறுமனே கூறாமல், மகா பரிசுத்தமான விசுவாசம் என்று கூறுகின்றார். அதாவது அசைக்கமுடியாத, கொஞ்சமும் குறைவில்லாத விசுவாசமுள்ளவர்களாய் நாம் இருக்கவேண்டும். உதாரணமாக, ஆபிரகாமைப் போன்ற விசுவாசம் என்று கூறலாம்.
இரண்டாவது பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணவேண்டும். ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரிய காரியங்களுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். நாம் பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணும்போது உலக ஆசைத் தேவைகளை மட்டுமே வேண்டி நாம் ஜெபிக்கமாட்டோம். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளிருந்து ஜெபங்களைத் தூண்டுவார். அப்படி ஆவிக்குரிய ஜெபம் செய்பவர்களாக நாம் இருக்கவேண்டும்.
மூன்றாவதாக, தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். தேவனுக்குச் சித்தமில்லாத காரியங்களை நம்மைவிட்டு அகற்றி அவரது மனம் மகிழும்படி வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும்; அப்படி வாழவேண்டும். இப்படி நாம் வாழும்போது நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தால் அவர் வாக்களித்த நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வுக்குத் தகுதியாகின்றோம். அவரது அந்த இரக்கத்தைப் பெறுவதற்கு நாம் காத்திருக்கவேண்டியது அவசியம் என்று இன்றைய வசனம் கூறுகின்றது.
அன்பானவர்களே, இந்த மூன்று காரியங்களிலும் நாம் எப்படி இருக்கின்றோம்? நமது விசுவாசம், நமது ஜெபம், நமது ஆவிக்குரிய அன்றாட வாழ்க்கை இவை எப்படி இருக்கின்றன? வெறும் உலக காரியங்களையே நமது ஜெபங்களில் கேட்டு அவை கிடைக்குமென்று விசுவாசித்து வாழ்வதல்ல ஆவிக்குரிய வாழ்க்கை.
அப்போஸ்தலரான யூதா கூறும் அறிவுரையின்படி நாம் வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். விசுவாசம், ஜெபம், தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொண்டு வாழும் ஆவிக்குரிய வாழ்க்கை இவைகளை நாம் கடைபிடித்துக் காத்திருக்கும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாக்களித்த நித்தியஜீவனை அவர் நமக்குத் தந்தருள்வார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment