ஆதவன் 🔥 882🌻 ஜூன் 28, 2023 புதன்கிழமை
"என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்." ( சங்கீதம் 119 : 36 )
பணம் சம்பாதித்தல் என்பது வேறு, பொருளாசை என்பது வேறு. நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு பணம், உலகப் பொருட்கள் தேவையாக இருக்கின்றன. எனவே இவற்றை சம்பாதிக்க நாம் உழைக்கவேண்டியது அவசியம். "ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே." ( 2 தெசலோனிக்கேயர் 3 : 10 ) என்கிறார் பவுல் அடிகள். எனவே நாம் உழைத்து சம்பாதித்து உண்ணவேண்டியது அவசியம்.
ஆனால், பொருளாசை என்பது வேறு. மேலும் மேலும் பொருள் சேர்க்கும் ஆசையில் சிலர் குடும்பம், சக உறவுகள், இவற்றைவிட பணத்தையும் பொருட்களையும் இச்சித்து மனிதர்களுக்குத் துரோகம் செய்து, அல்லது ஏமாற்றி இரவும் பகலும் பணத்தையும் சொத்து சுகங்களையும் எண்ணி வெறிகொண்டு அலைவதைக் குறிக்கின்றது.
இத்தகைய மனிதர்கள் நல்லவர்களாக இருக்கமுடியாது. பணம் சம்பாதிக்கவேண்டி என்னென்ன தீய வழிகள் உண்டோ அந்த வழிகளிலெல்லாம் முயலத் தயங்கமாட்டார்கள். நாம் பத்திரிக்கைச் செய்திகளைப் படிக்கும்போது இது புரியும். பல அநியாய காரியங்களான திருட்டு, கொலை, விபச்சாரம், வேசித்தனம், போன்ற செயல்களின் பின்னணியில் இருப்பது பண ஆசை அல்லது பொருளாசை. எனவேதான் வேதம் கூறுகின்றது, "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." ( 1 தீமோத்தேயு 6 : 10 )
ஆம், மேற்படி வசனம் கூறுகின்றது, சாதாரண மக்கள் மட்டுமல்ல விசுவாச வாழ்க்கை வாழும் பலர் கூட பொருளாசை அல்லது பண ஆசையால் தங்கள் விசுவாசத்தை விட்டுவிடுகின்றார்கள். அப்படி விசுவாசத்தை விட்டு விலகும் மக்கள் பின்பு அதனால் வரும் வேதனைகளால் காலம் முழுவதும் அவஸ்தைப்படுகின்றனர்.
பொருளாசைபற்றி இயேசு கிறிஸ்து கூறினார், "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல ." ( லுூக்கா 12 : 15 ) ஆம், எவ்வளவு சொத்து சுகங்கள் இருந்தாலும் அவை ஒரு மனிதனை நரகத்துக்குத் தப்புவிக்காது. அது அவனுக்கு ஜீவனல்ல; அது ஆத்தும மரணமே. நித்திய நரக அக்கினிக்குநேராக அது நம்மைக் கொண்டு சென்றுவிடும்.
எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை." ( 1 கொரிந்தியர் 6 : 10 ) என்று கூறுகின்றார். இதனாலேயே இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் சங்கீத ஆசிரியர் தேவனே, "என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்." ( சங்கீதம் 119 : 36 ) என்று ஜெபிக்கின்றார்.
இந்த ஜெபத்தையே நாமும் ஜெபிக்கவேண்டியது அவசியம். நாம் பணத்தையல்ல, தேவனுடைய பரிசுத்த சாட்சிகளின் - புனிதர்களின் வாழ்க்கை வழிகளைச் சார்ந்துகொள்ளும்படி வேண்டுதல் செய்யவேண்டும். அப்போது தேவனுடைய ஆவியானவர் அப்படி ஒரு வாழ்க்கை வாழ நமக்கு உதவிடுவார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment