ஆதவன் 🔥 879🌻 ஜூன் 25, 2023 ஞாயிற்றுக்கிழமை
"நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும். துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்." ( நீதிமொழிகள் 4 : 18, 19 )
காலையில் கிழக்கில் உதிக்கும் சூரியன் நடுப்பகல்வரை வெளிச்சம் அதிகரித்து அதிகரித்து வரும். மதியத்துக்குப்பின்போ ஒளிமங்கி மங்கி கடைசியில் இருள் சூழ்ந்துகொள்ளும். எனவேதான் இன்றைய வசனம் நீதிமான்களின் பாதை நடுப்பகல்வரை அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கும் சூரியன் ஒளிபோல இருக்கின்றது என்று கூறுகின்றது. பாதை என்று இங்குக் குறிப்பிடப்படுவது அவர்களது வாழ்க்கை.
மட்டுமல்ல, உலகமே இருளில் மூழ்கினாலும், அல்லது நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களது வாழ்க்கை இருள் சூழ்ந்ததாக இருந்தாலும் நம்மை அவர் வித்தியாப்படுத்திக் காட்டுவார். நீதியின் சூரியனான கிறிஸ்துவை ஒளி நம்மேல் ஒளிரும். இதனை, "இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்." ( ஏசாயா 60 : 2, 3 ) என்று வேதத்தில் வாசிக்கலாம்.
ஆம், வெளிச்சத்தைச் சார்ந்த மக்களாக வாழும்போது நம்மை நாம் பிறருக்கு வெளிச்சம்போட்டுக் காட்டத் தேவையில்லை. தானாகவே மக்கள் நமது ஒளியை உணர்ந்துகொள்வார்கள். நம்மைத் தேடி வருவார்கள். இதனைத்தான் இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5 : 14 ) என்று.
இப்படி நாம் வெளிச்சத்தின் மக்களாக வாழ்வது நமக்கு மட்டுமல்ல, அது பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்துவதாகவும் இருக்கும். "இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." ( மத்தேயு 5 : 16 ) அதாவது, நமது ஒளியுள்ள வாழ்கையினைக் கண்டு மற்றவர்கள் பிதாவாகிய தேவனை அறிந்துகொண்டு அவரை மகிமைப்படுத்துவார்கள்.
இன்றைய வசனத்தின் பிற்பகுதி துன்மார்க்கர்களது வாழ்கையினைக் குறித்துக் கூறுகின்றது. அவர்கள் நல்ல செழிப்பான வாழ்க்கை வாழ்வதுபோல உலகுக்குத் தெரிவார்கள். ஆனால் அவர்களது பாதை (வாழ்க்கை) தேவனுக்குமுன் காரிருளைப்போலிருப்பதால் தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள். இருளான பகுதிகளில் கிடக்கும் கற்கள், முள், பள்ளங்கள் இவை கண்ணுக்குத் தெரிவதில்லை. எனவே அவர்கள் இடறுகின்றனர்.
அன்பானவர்களே, ஒரு நீதியுள்ள வாழ்க்கை வாழ நம்மைத் தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம். வெறும் உலக நீதியல்ல; பரிசுத்த ஆவியின் நீதி பாதையில் நடக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். ஏனெனில் உலகத்தின் நீதியெல்லாம் அழுக்கான கந்தையைப் போல இருக்கிறது. "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ( ஏசாயா 64 : 6 )
தேவ நீதியில் வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். அப்போது நமது பாதை (வாழ்க்கை) நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment