ஆதவன் 🔥 877🌻 ஜூன் 23, 2023 வெள்ளிக்கிழமை
"அப்பொழுது திதிமு எனப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றார்."( யோவான் 11 : 16 )
கிறிஸ்துவோடுகூட சாகவும் துணிந்த அப்போஸ்தலரான தோமாவின் விசுவாச அறிக்கைதான் இன்றைய தியானத்துக்குரிய வசனம்.
யூதேயாவிலுள்ள பெத்தானியா ஊர் மார்த்தா, மரியா, லாசர் குடும்பத்தின்மேல் இயேசு தனி அன்பு கொண்டிருந்தார். லாசர் பெரிய வியாதியுற்று மரணத்திற்கு ஏதுவான நிலையிலிருந்தான். இயேசு கிறிஸ்து தனது சீடர்களோடு யோர்தானுக்கு மறுகரையில் இருந்தார். அப்போது லாசரின் சகோதரிகள் இயேசுவுக்கு ஆளனுப்பி விபரத்தைக் கூறி தங்களிடம் வருமாறு அழைத்தனர். ஆனால் இயேசு கிறிஸ்து உடனேயே புறப்படாமல் இரண்டு நாட்கள் தாமதப்படுத்தினார். அதற்குள் லாசர் இறந்துவிட்டான்.
எனவே இயேசு கிறிஸ்து யூதேயாவுக்குச் செல்ல முடிவெடுத்தார். ஆனால் அதற்குமுன்புதான் யூதேயாவிலிருந்த யூதர்கள் அவர்மேல் கல்லெறிய முயன்றிருந்தனர். இயேசு கிறிஸ்து லாசர் இறந்ததை நேரடியாக சீடர்களிடம் கூறாமல் முதலில், அவன் நித்திரையடைந்திருக்கிறான் நான் எழுப்பப் போகின்றேன் என்று கூறினார். பின்னர் அவன் இறந்துவிட்டான் எனும் உண்மையைக்கூறினார்.
சீடர்களெல்லாம் யூதேயாவுக்குச் செல்லப் பயந்தனர்.ஏனெனில் அங்கு சென்றால் யூதர்கள் அவர்மேல் கல்லெறிவார்கள், நாமும் கல்லடிபடவேண்டமென்று நினைத்தனர். ஆனால் அப்போஸ்தலரான தோமா இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து சாகவும் துணிந்து, "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்" என்று சகசீடர்களை அழைக்கின்றார். அதாவது தோமா, இயேசு கிறிஸ்து யூதர்களால் கல்லடிபட்டுச் சாகப்போவது நிச்சயம் என்று நம்பினார். அனால் அப்படிச் செத்தால் நாமும் அவரோடுகூடச் சாவோம் வாருங்கள் என்று மற்றச் சீடர்களையும் அழைக்கின்றார்.
அன்பானவர்களே, அங்கு இயேசு கிறிஸ்துவுடன் தலைமை அப்போஸ்தலர் பேதுரு, இயேசு கிறிஸ்துவின் அன்புச் சீடரான யோவான், யாக்கோபு எல்லோரும் இருந்தனர். எவரும் கூறத்துணியாத வார்த்தைகளை அப்போஸ்தலரான தோமா கூறினார். அந்த அளவுக்கு அவர் கிறிஸ்துவை அன்பு செய்தார். கிறிஸ்து இல்லாமல் வாழ்வதைவிட அவரோடுகூட சாவதுமேல் என்று உறுதிகொண்டார் என்பதையே இது காண்பிக்கின்றது.
நாம் இன்று கிறிஸ்துவுக்காக சாகவும் தயாராக இருக்கவேண்டுமென்று நான் கூறவரவில்லை. ஆனால் அது மேலான இரத்தசாட்சிகளின் விருப்பமாக இருந்தது. இன்று குறைந்தபட்சம், கிறிஸ்து இல்லாத வாழ்க்கை நமக்கு வேண்டாம் எனும் முடிவாவது நாம் எடுக்கலாமல்லவா? கிறிஸ்து விரும்பாத காரியங்களை நாம் செய்யும்போது கிறிஸ்துவைவிட்டு நாம் அந்நியமாகின்றோம். அதாவது அவர் நம்மோடு கூட வருவதையோ நாம் அவரோடு இருக்க வேண்டுமென்பதையோ நாம் விரும்பவில்லை என்பதே அதன் பொருள்.
இந்த வசனம் பாவத்துக்கு மரிக்கும் வாழ்க்கையையே இன்று குறிக்கின்றது. கிறிஸ்துவோடு பாவத்துக்கு மரித்த ஒரு வாழ்வோம். ஆம், அவரோடுகூட பாவத்துக்குச் சாவோம். கிறிஸ்துவுக்காக நாம் பாவத்துக்கு மரிக்கும்போது அவர் வரும்போது நம்மை அவருடனேகூட எழுப்புவார். தோமாவைப்போல நாமும் சொல்லுவோம், "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்!!!"
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment