ஆதவன் 🔥 868🌻 ஜூன் 14, 2023 புதன்கிழமை
"இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." ( யாக்கோபு 5 : 11 )
இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ள பொறுமை என்பது சாதாரணமாக நாம் கூறும் பொறுமையையல்ல; மாறாக தேவன்மேலுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருந்து தேவன் எனது காரியங்களை நலமாக முடித்துவைப்பார் என்று பொறுமையோடு காத்திருந்து நம்புவது, துன்பங்களைப் பொறுமையாகச் சகிப்பது, இவைகளையே பொறுமை என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவர் தான் நல்ல நிலையில் இருக்கும்போது பொறுமையாக இருப்பது பெரிய காரியமல்ல. மாறாக, வாழ்வில் எதிர்மறையான காரியங்கள் நிகழும்போதும் அமைதியாக, பொறுமையாக இருப்பது மகத்தான காரியமாகும். பக்தனான யோபு அப்படிதான் இருந்தார். தனது பிள்ளைகள், சொத்துக்கள், உடல்நலம் அனைத்தும் பாதிக்கப்பட்டபின்னரும் அவர் தேவன்மேல் வைத்திருந்த விசுவாசத்தில் தளர்வடையவில்லை. எல்லாத் துன்பத்துக்கும் மேலாக அவரது உயிரான மனைவியே அவரை அவமதித்துப் பேசும்போதும் யோபு பொறுமையாகப் பேசுகின்றார்.
யோபு இரண்டாம் அதிகாரத்தில் வாசிக்கும்போது, "அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்." ( யோபு 2 : 9 ) யோபின் மனைவி கூறுவதை தற்போதைய வார்த்தைகளில் கூறவேண்டுமானால், "நீர் இன்னுமா கடவுளை நம்புகிறீர்? அவரை தூஷித்துவிட்டு செத்துத் தொலையும் " என்பதுதான்.
அதற்கு யோபு கூறும் பதில், "நீ பைத்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ" ( யோபு 2 : 10 ).
இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) என்று கூறுகின்றார்.
அன்பானவர்களே, இன்றைய தியான வசனத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளது, "கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே". அதாவது, கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராய் இருப்பதால் யோபுவுக்கு வந்ததுபோன்ற ஆசீர்வாத முடிவு பொறுமையாக இருக்கும்போது நமக்கும் வரும் என்று பொருள்.
ஆம், "கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்." ( யோபு 42 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, பொறுமை இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தின் வழி.
அன்பானவர்களே, நாம் எல்லோரும் யோபுவைபோல வாழ்வது சிரமமான காரியம்தான். மனித பலத்தால் இது முடியாதுதான். ஆனால், இத்தகைய விசுவாசம் நமக்கு வேண்டுமென்று நாம் விரும்பி ஜெபிக்கலாமல்லவா? அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதுபோல நம்பிக்கையிலே சந்தோஷமும்; உபத்திரவத்திலே பொறுமையும்; ஜெபத்திலே உறுதியும் நமக்கு வேண்டுமென்று வேண்டுவோம். ஆவியானவர் அதனை நமக்குத் தந்தருள்வார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment