ஆதவன் 🔥 866🌻 ஜூன் 12, 2023 திங்கள்கிழமை
"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." ( ஏசாயா 60 : 2 )
கர்த்தரால் வேறுபிரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையினை இன்றைய வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. கர்த்தரால் வரும் ஆசீர்வாதம் இதுதான். இருளான வாழ்க்கை ஒளியாக மாறுகின்றது; அவரை ஏற்றுக்கொள்ளும்போது எந்த மனிதனையும் அவர் இருளிலிருந்து ஒளிக்குள் கொண்டுவருவார். இதனையே அப்போஸ்தலரான யோவான், "உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிபிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோவான் 1:9) என்று கூறுகின்றார்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கானானை நோக்கிப் பயணித்த தனது மக்களை தேவன் ஒளியால் வழிநடத்தியது, இன்றைய புதிய ஏற்பாட்டுக்காலத்தில் பரம கானானை நோக்கி நம்மை வழிநடத்தும் ஆவிக்குரிய ஒளியாக இருக்கின்றது. பழைய ஏற்பாட்டுச் சம்பவங்கள் புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாய் இருக்கின்றன. முதன்முதலில் எகிப்து நாட்டில் தேவன் தனது ஒளியால் மக்களை வேறுபிரித்துக்காட்டும் அதிசயத்தைச் செய்தார். பார்வோன் மனது கடினப்பட்டு இஸ்ரவேலரை விடுவிக்க மறுத்தபோது மோசே மூலம் அதிசயம் செய்து தனது மக்களை வேறுபிரித்துக் காட்டினார்.
"மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று. மூன்றுநாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது." ( யாத்திராகமம் 10 : 23 ) என்று வாசிக்கின்றோம்.
மேலும், இஸ்ரவேல் மக்களை விடுவித்து அனுப்பியபின்னர் பார்வோன் மனம் கடினப்பட்டு அவர்களை அழித்து ஒழிக்க மீண்டும் தனது படைகளோடு பின்தொடர்ந்தான். அப்போது இஸ்ரவேலர் முன்னால் சென்ற கர்த்தரது தூதனானவர் விலகி அவர்களுக்குப் பின்னால் பாதுகாப்பாக வந்தார். மேகஸ்தம்பமும் விலகி அவர்களுக்குப் பின் வந்தது. "எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தன; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று." ( யாத்திராகமம் 14 : 20 )
அன்பானவர்களே, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படியே இருளான மக்கள் மத்தியில் ஒளியாக வந்தார். "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது" ( மத்தேயு 4 : 15 ) என்று வாசிக்கின்றோம். உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிபிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளியான அவரிடம் நாம் சேரும்போது பாவ இருளைவிட்டு நாம் மெய்யான ஒளியினிடம் சேர்ந்து அவரைப்போல ஒளிருவோம்.
அன்று இஸ்ரவேல் மக்களை எப்படி எகிப்தியரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அவர்களை கானானுக்கு நேராக வழி நடத்தினாரோ அதுபோல அவரை ஏற்றுக்கொள்ளும்போது பிற மக்களிடமிருந்து நம்மையும் வேறுபடுத்தி நடத்துவார்.
எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று என்று கூறப்பட்டுள்ளதுபோல, பிற மக்களிடமிருந்து அவர் நம்மை வேறுபிரிக்கும்போது நமக்கு அவரே வெளிச்சமாக இருப்பார். அந்த வெளிச்சத்தை எகிப்தியர் கண்டு ஆச்சரியப்பட்டதுபோல நம்மை அற்பமாகவும் அலட்சியமுமாக நடத்தியவர்கள் கண்முன் நமது ஒளி ஆச்சரியப்படத்தக்கதாக விளங்கும்.
கானானை நோக்கிப் பயணித்த இஸ்ரவேலர்மேல் உதித்த கர்த்தரின் ஒளி, பரம கானானை நோக்கிப் பயணிக்கும் பயணிகளாக நாம் விளங்குவோமென்றால் நம்மேலும் உதிக்கும். ஆம், நம்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை நம்மேல் காணப்படும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment