ஆதவன் 🔥 884🌻 ஜூன் 30, 2023 வெள்ளிக்கிழமை
"கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்." ( சங்கீதம் 25 : 8 )
நமது தேவன் பாவத்தை வெறுக்கிறாரேத் தவிர பாவிகளை நேசிக்கிறார். பாவிகள் அழிந்து நரக அக்கினிக்கு நேராகச் செல்வது தேவனது விருப்பமல்ல. அவர் நல்லவரும் உத்தமருமாய் இருக்கிறபடியால் பல்வேறு வழிகளில் தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அவர்கள் தங்கள் பாவ வழியைவிட்டு மனம்திரும்பி வரவேண்டுமென்று காத்திருக்கின்றார். அப்படி பாவிகள் மனம் திரும்பும்போது மகிழ்ச்சியடைகின்றார்.
இதனையே இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார். "உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18 : 12, 13 )
மனிதர்கள் தங்கள் சுய செயல்பாடுகளால் தேவனைவிட்டுத் தடம் மாறிச் செல்லும்போது தேவன் பல்வேறு விதங்களில் அவர்களோடு இடைப்படுகின்றார். தோல்விகள், பிரச்சனைகள் இவைகள் மனிதர்கள் தங்களை நிதானித்துப் பார்க்கத் தேவன் கொடுக்கும் சந்தர்ப்பங்கள். சில வேளைகளில் வழி விலகும்போது தனது ஊழியர்களைக்கொண்டு சரியான வழியினைக் காட்டுகின்றார். ஆனால் பல மனிதர்கள் தங்கள் வழிகளைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை.
ஆனால், கர்த்தரது குரலுக்குச் செவிகொடுக்கும்போது அதாவது கர்த்தரைக்குறித்த பயம் உள்ளத்தில் ஒருவனுக்கு ஏற்படும்போது அவனுக்குச் சரியான வழியைக் காட்டுகின்றார். இதனையே தாவீது, "கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்." ( சங்கீதம் 25 : 12 ) என்று கூறுகின்றார்.
ஆணடவரது இரண்டாம் வருகை ஏன் தாமதிக்கின்றது என்பதைக் கூறவரும்போது அப்போஸ்தலரான பேதுரு, "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 )
ஆம், கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறபடியால் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று நீடிய பொறுமையோடிருக்கின்றார்.
"கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்." எனும் வசனம் தாவீது தனது அனுபவத்தில் கண்டது. பத்சேபாளிடம் விபச்சாரப் பாவத்தில் விழுந்து அதன் தொடர்ச்சியாக கொலை செய்தார். கர்த்தர் நல்லவரும் உத்தமருமாய் இருந்ததால் நாந்தான் தீர்க்கதரிசி மூலம் அவருக்கு வழியைத் தெரிவித்தார்.
அன்பானவர்களே, சிலவேளைகளில் நமது வாழ்க்கையிலும் நாம் வழி தவறலாம். அப்படி வழி தவறும்போது கர்த்தர் பல்வேறு விதங்களில் நம்மை உணர்த்துவார். அந்தச் சத்தத்துக்கு நாம் செவிகொடுக்க வேண்டும். நமது வழிகள் தவறு என்றால் திருத்திக்கொள்ளவேண்டும். அப்போது கிறிஸ்து கூறியதுபோல சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது (பாவமே செய்யாத) ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், நம்மைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment