ஆதவன் 🔥 861🌻 ஜூன் 07, 2023 புதன்கிழமை
".....................தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதனால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்." ( நீதிமொழிகள் 30 : 8, 9 )
இன்றைய தியான வசனம் வாழ்வின் எதார்த்தத்தை உலகக் கண்ணோட்டத்தில் பார்த்து கூறப்பட்ட வசனமாகும். செல்வமும் வேண்டாம், தரித்திரமும் வேண்டாம், கர்த்தர் நம்மோடு இருந்தால் போதும் என்று நமக்கு ஒரு சிந்தனையினைத் தருகின்றது.
அதிக அளவு செல்வம் எனக்குக் கிடைத்துவிட்டால் செல்வத்தின் செருக்கில் நான் கர்த்தரை மறுதலித்து, கர்த்தரா அவர் யார்? என்று ஒருவேளைச் சொல்லிவிடுவேன். அதுபோல தரித்திரம் அடைந்துவிட்டேனென்றால், நான் ஒருவேளைத் திருடுவேன் கர்த்தரது பெயரை வீணாகக் கூறி பொய் ஆணையிட்டு கார்த்தரைவிட்டுத் தூரமாய்ப் போய்விடுவேன். எனவே அன்றன்றுள்ள உணவின் படியை எனக்கு அளந்து என்னைத் திருப்தியாக்கும் என்று வேண்டுகின்றார் இந்த நூலின் ஆசிரியர்.
சாலமோன் அரசரால் அக்காலத்தில் வழக்கத்திலிருந்த முறைமைகளைப்பார்த்து எழுதப்பட்ட சில நீதிமொழிகளும் இதர ஞானிகளால் எழுதப்பட்ட நீதி போதனைகளும் கலந்த தொகுப்புதான் நீதிமொழிகள் நூல். கர்த்தரைவிட்டுப் பின்மாறிய சாலமோனின் தொகுப்பான இந்த நூலில் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முரணான பல நீதிமொழிகள் உள்ளன. இன்றைய வசனம் அத்தகையவற்றுள் ஒன்று.
ஆம், இந்த வசனம் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்த்தால் முற்றிலும் எல்லோரது வாழ்விலும் சரியாக இருக்க முடியாது. காரணம், அரசர்களாக இருந்து நாட்டை ஆட்சிசெய்த தாவீது, எசேக்கியா போன்றவர்கள் செல்வச் செருக்கடைந்து கர்த்தரை மறுதலிக்கவில்லை. அதுபோல அப்போஸ்தலரான பவுல் போன்றவர்கள் ஒன்றுமில்லாத நிலையிலும் கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்தனர்.
அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுகின்றார், "............நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு."( பிலிப்பியர் 4 : 11, 12, 13 )
ஆம், செல்வம் இருப்பதும் இல்லாமலிருப்பதும் பெரிய காரியமல்ல, கர்த்தர் நம்மோடு இருப்பதே முக்கியம். "பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்று பவுல் அடிகள் கூறுவதுபோல அதிக செல்வமிருந்தாலும் நம்மைப் பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவினால் நாம் கர்த்தரை மறுதலிக்காத வாழ்க்கை வாழ முடியும்; வறுமை, இல்லாமையிலும் நாம் உண்மையுள்ள வாழ்க்கை வாழமுடியும்.
எனவே நாம் கார்த்தரைவிட்டு எந்த நிலையிலும் பின்மாறிடாமல் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். நம்மைப் பெலப்படுத்துகின்ற கர்த்தரால் எல்லாவற்றையும் நம்மால் செய்யமுடியும். அவர் நம்மோடு இருப்பாரானால் எந்தச் சூழ்நிலையும் நம்மைச் சேதப்படுத்தாது.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment