ஆதவன் 🔥 869🌻 ஜூன் 15, 2023 வியாழக்கிழமை
"விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்." ( எபிரெயர் 11 : 22 )
இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தது தேவனது மிகப்பெரிய திட்டத்தினால்தான். அந்தத் திட்டத்தை அவர் ஆபிரகாமுக்குத் தெரிவித்திருந்தார். "உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்." ( ஆதியாகமம் 15 : 13, 14 )
ஆபிரகாம் இதனைத் தனது மகன் ஈசாக்குக்கு அறிவித்திருந்தார். ஈசாக்கு தனது மகன் யாக்கோபுக்கும் அவர் தனது மகன் யோசேப்புக்கும் தெரிவித்திருந்தனர். தேவனது வார்த்தைகளை அவர்கள் முழுவதுமாக நம்பியிருந்தனர். அந்த விசுவாசத்தினால்தான் யோசேப்பு தான் மரணமடையுமுன் தனது எலும்புகளைக்குறித்து பேசினார். "தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்." ( ஆதியாகமம் 50 : 25 ) என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது தான் உயிரோடிருந்த நாளில் கானான் தேசத்தைச் சுதந்தரிக்க முடியவில்லை என்றாலும் நிச்சயமாக தேவன் குறித்த காலத்தில் தனது மக்களைச் சந்தித்து கானானுக்குக் கொண்டு செல்வார் என்று யோசேப்பு முழு நிச்சயமாக நம்பினார். எனவேதான் தனது எலும்புகளைக்குறித்து இப்படி ஒரு கட்டளையினைக் கொடுத்தார்.
தேவன் சொன்னபடி இஸ்ரவேலரை விடுவித்தார். ஆம், "இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்." ( யாத்திராகமம் 12 : 40 ) நானூற்று முப்பது ஆண்டுகள் முடிவடைந்த அந்த நாளில்தான் இஸ்ரவேல் மக்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டனர்.
"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) ஆம் யோசேப்பு இப்படி தனது முன்னோர்களுக்குத் தேவன் கூறிய வார்த்தைகளின்மேல் உறுதியான விசுவாசமுள்ளவராய் இருந்தார். அதனால் அவரது பெயர் விசுவாச வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அன்பானவர்களே, யோசேப்பு தனது முன்னோர்களுக்குத் தேவன் கூறியதை விசுவாசித்தார். இன்று நமக்குத் தேவன் தனது குமாரனான இயேசு கிறிஸ்துமூலம் பல வாக்குறுதிகளைத் தந்துள்ளார். அதனை அவரோடு இருந்த சீடர்கள் நமக்காக எழுதி வைத்துள்ளனர். அவற்றை நாம் விசுவாசிக்கவேண்டியது எவ்வளவு முக்கியம்!! பாவ மன்னிப்பு, பாவத்திலிருந்து விடுதலை, உடலின் உயிர்ப்பு, நித்தியஜீவன் இவையெல்லாம் நமது கர்த்தரான இயேசு கிறிஸ்து வாக்களித்தவை.
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளை நாம் விசுவாசிக்கும்போது நாம் பரம கானானுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். கானான் தேசத்துக்கு மோசே யோசேப்பின் எலும்புகளைத் தூக்கிச் சென்றார். (யாத்திராகமம் 13:19) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது அவர் நம்மையே தன்னுடன் சேர்த்துக்கொள்வார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment