ஆதவன் 🔥 883🌻 ஜூன் 29, 2023 வியாழக்கிழமை
"ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்." ( ஏசாயா 48 : 18 )
இன்றைய தியானத்துக்குரிய வசனம் பழைய ஏற்பாட்டு அடிப்படையில் சொல்லப்பட்ட வசனமாக இருந்தாலும் நாம் புதிய ஏற்பாட்டுக்கால மக்கள் ஆனதால் கிறிஸ்துவின் கிருபையின் உபதேசத்துக்கு உட்பட்டவர்கள். எனவே கிறிஸ்துவின் அன்புக் கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது இந்த வசனம் நமது வாழ்வில் உறுதிப்படும்.
பழைய ஏற்பாட்டில் மோசே மூலம் தேவன் பல கட்டளைகளை இஸ்ரவேல் மக்களுக்கு அளித்திருந்தார். பத்துக்கட்டளைகளைத்தவிர சிறியதும் பெரியதுமான கட்டளைகளை நாம் மோசேயின் கட்டளைகளில் பார்க்கின்றோம். வேத அறிஞர்கள் அவற்றைக் கணக்கிட்டு 613 கட்டளைகள் உள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் இவ்வளவு கட்டளைகள் இருந்தும் அவை மனிதர்களை நல்வழிப்படுத்தக் கூடாதவைகளாகவே இருந்தன.
இந்த 613 கட்டளைகளையும் இயேசு கிறிஸ்து இரண்டே கட்டளைகளுக்குள் அடக்கிவிட்டார். "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்." ( கலாத்தியர் 5 : 14 ) நியாயப்பிரமாணம் முழுவதும் இந்த இரண்டு கட்டளைகளுக்குள் அடங்கிவிடுகின்றது.
கட்டளைகளால் கூடாததை தனது கிருபையால் செய்துமுடிக்கவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான் 5 : 3 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான யோவான்.
பழைய ஏற்பாட்டுப் பரிசேயர்கள், கட்டளைகளுக்கு முன்னுரிமை கொடுத்தனரேத் தவிர அன்பையும், நீதியையும் இரக்கத்தையும் விட்டுவிட்டனர். இயேசு கிறிஸ்து கூறினார், "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்" ( மத்தேயு 23 : 23 )
ஆம், நீதியானது கட்டளைகளைக் கடைபிடிப்பதால் வருவதில்லை. அப்படி கட்டளைகளால் நீதி வருமானால் மோசேயின் கட்டளைகளே போதுமாக இருந்திருக்கும். கிறிஸ்து உலகினில் வந்து பாடுபடத் தேவையே இருந்திருக்காது. மோசேயின் கட்டளைகள் போதுமானவையாக இல்லாததால்தான் கிறிஸ்து வந்தார். இதனையே, "நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல்.
எனவே நாம் கிறிஸ்து கூறிய "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" என்கிற ஒரே வார்த்தையான கட்டளைக்குக் கீழ்படியும்போது நியாயப் பிராமண கட்டளைகள் அனைத்தையும் நம்மையறியாமலே நிறைவேற்றி விடுகின்றோம். இப்படி நிறைவேற்றும்போது இன்றைய வசனம் கூறுவதுபோல, நமது சமாதானம் நதியைப்போலும், நமது நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும். அதாவது நமது சமாதானம் நதியைப்போல அகன்று நீண்ட ஒன்றாகவும் கடல் அலையானது எப்படி முடிவின்றி, ஓய்வின்றி இருக்கின்றதோ அதுபோல முடிவற்ற நீதியாக இருக்கும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment