கிறிஸ்துவை அறிகிற அறிவின் வாசனை

ஆதவன் 🔥 858🌻 ஜூன் 04, 2023  ஞாயிற்றுக்கிழமை


"கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்". ( 2 கொரிந்தியர் 2 : 16 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியும் அறிவினை நல்ல வாசனைக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார் அப்போஸ்தலரான பவுல் அடிகள். இதனை இன்றைய வசனத்துக்கு இரண்டு வசனங்களுக்கு முன்பு குறிப்பிடுகின்றார். "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." ( 2 கொரிந்தியர் 2 : 14 ) என்று.

கிறிஸ்துவை பிரதிபலிக்கும்போது நாம் அவரது வாசனையை உலகிற்கு வீசுகின்றோம். இயேசு கிறிஸ்துவை பலர்  வெறுக்கக் காரணம் அவர்களது பாவ உணர்வு. இதனையே இயேசு கிறிஸ்து, பொல்லாங்கு செய்பவன் எவனும் ஒளியைப் பகைக்கின்றான்  என்று குறிப்பிட்டார்.  

"பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்."( யோவான் 3 : 20 ). பாவிகளது பாவ வாழ்க்கை வெளிச்சத்திடம் வரும்போது வெளியரங்கமாகிவிடும் எனவே அவர்கள் கிறிஸ்துவிடம் நெருங்கிவரத் தயங்குகின்றார்கள்.   அவரை அறியும் வாசனையை வெறுக்கிறார்கள். அது அவர்களுக்குத் துர்நாற்றமாகத் தெரிகின்றது.

இப்படி, "கெட்டுப்போகிறவர்களுக்கு மரணத்திற்கேதுவான மரணவாசனையாக" இருக்கிறார் கிறிஸ்து. "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை" என்று ஒரு தமிழ் பழமொழி உண்டு. ஆம், கழுதைபோல வாழ விரும்புகிறவர்களுக்கு ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாக கிறிஸ்து இருக்கிறார் என்று புரியாது. 

சாக்கடையில் புரண்டு மலத்தைத் தின்று வாழும் பன்றிக்கு அந்த துர்நாற்றம் நறுமணமாகத் தெரியும். அதுபோல உலக ஆசையிலும் பாவத்திலும் வாழ்பவர்களுக்கு அதுவே நறுமணமாகத் தெரியும். அவர்கள் மெய்யான நறுமணமான கிறிஸ்துவை அறியமாட்டார்கள்.

ஆனால் அதற்காக பாவத்தில் வாழும் மனிதர்களை உணர்வூட்டாமல் தேவ வசனத்தைப் பலரும் புரட்டிக் கலப்பாய் பேசுவதைப்போல நாங்கள் பேசுவதிலை என்கிறார் அப்போஸ்தலரான பவுல். "அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 17 ) என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ; அவர்களுக்கு கிறிஸ்துவை விசுவாசிக்கும் நாம் துர்நாற்றமாகத் தெரிந்தாலும் கவலைப்படாமல் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கலப்பில்லாமல் பேசுவோம் வாழ்வாக்குவோம். அப்போது, கெட்டுப்போகிறவர்களுக்கு மரணத்திற்கேதுவான மரணவாசனையாக இருந்தாலும்  இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு நாம்  ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாக இருப்போம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்