ஆதவன் 🔥 872🌻 ஜூன் 18, 2023 ஞாயிற்றுக்கிழமை
"தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்." ( யோவான் 4 : 24 )
இன்றைய வசனம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம் பேசும்போது குறிப்பிட்ட வசனமாகும். தேவனை ஆராதிக்க சடங்காச்சாரங்கள் தேவையில்லை. வெறுமனே கூச்சலும் கூப்பாடும் தேவையில்லை.
வேதாகம அடிப்படையில் ஆவிக்குரிய ஆராதனை என்பது என்ன என்று முதலில் புரிந்துகொள்ளவேண்டும்; ஆவிக்குரிய ஆராதனை செய்யும் சபைகளுக்குச் செல்கின்றோம் என்று கூறிக்கொள்பவர்கள் பிற சபைகளைக் குறைகூறுவதற்குமுன் தாங்கள் உண்மையிலேயே ஆவிக்குரிய ஆராதனை செய்கின்றோமா என்று எண்ணிப்பார்த்திடவேண்டும்.
ஆவியான தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார். இதில் ஆவியோடு என்பதற்கு நாம் இரண்டு பொருள்கள் கொள்ளலாம். ஒன்று, நமது முழு ஆவியோடு தேவனை ஆராதிக்கவேண்டும் என்று பொருள். "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக" ( மத்தேயு 22 : 37 ) என்று நியாதிபதி ஒருவனுக்கு இயேசு பதில் கூறினார். இப்படி அன்புகூர்ந்து தேவனை ஆராதிக்கவேண்டும்.
ஆவியோடும் என்பதற்கு பரிசுத்த ஆவியோடு என்றும் பொருள் உண்டு. அதாவது நாம் தேவனை பரிசுத்த ஆவியோடு தொழுது கொள்ளவேண்டும். இங்குதான் பலரும் தவறுகின்றனர். துள்ளிக்குதித்து ஆராதிப்பதுதான் பரிசுத்த ஆவியோடு ஆராதிப்பது எனப் பலரும் புரிந்துகொண்டுள்ளனர். ஒருவரிடம் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பதற்கு அலறுவது அடையாளமல்ல மாறாக, ஆவியின் கனிகள் அவரிடம் இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியின் கனிகள் உள்ளவனே பரிசுத்த ஆவியை உடையவன். அத்தகைய கனிகளுடன் தேவனை ஆராதிக்கவேண்டும்.
"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கனிகளை உடையவனே பரிசுத்த ஆவியை உடையவன்.
ஆண்டவர் இயேசு மேலும் கூறினார், உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும். அதாவது, நமது வாழ்க்கையில் உண்மையாக நடந்து நாம் தேவனை ஆராதிக்கவேண்டும். உண்மை, நேர்மையற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஆராதிப்பது ஆவிக்குரிய ஆராதனையல்ல. மேலும், உண்மை என்பது தேவனது வார்த்தைகளைக் குறிக்கின்றது. "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17 : 17 ) என்றார் இயேசு கிறிஸ்து. எனவே தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்ந்து அவரை ஆராதிக்கவேண்டும்.
அன்பானவர்களே, தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க குறிப்பிட்ட சபைகளில் சென்றால்தான் முடியுமென்று எண்ணிவிடவேண்டாம். ஆவிக்குரிய ஆராதனைக்கு இதுவரைத் தவறான பொருள்கொண்டு தவறான வழிகளில் நடந்திருப்போமென்றால் நம்மைத் திருத்திக்கொள்வோம். ஆவியோடும் உண்மையோடும் தேவனை எங்கும் ஆராதிக்கலாம்.
"நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது." ( யோவான் 4 : 21 ) என்று கர்த்தராகிய இயேசு கூறவில்லையா? தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதித்து ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment