ஆதவன் 🔥 873🌻 ஜூன் 19, 2023 திங்கள்கிழமை
"சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்". ( யோவான் 18 : 37 )
தான் இந்த உலகத்தில் மனிதனாகப் பிறக்க ஒரு காரணத்தை இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார். அதாவது, உண்மைக்குச் சான்றுபகரவே நான் வந்தேன் என்கின்றார்.
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே என்று கூறியவர் தான் கூறியபடி சத்தியத்துக்குச் சான்று கூற இந்த உலகினில் வந்தார். சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்". ( யோவான் 18 : 37 ) என்று இயேசு கிறிஸ்து கூறியபோது, பிலாத்து அவரிடம் ," சத்தியம் என்றால் என்ன?" என்று கேட்டான். அவனுக்கு இயேசு கிறிஸ்து பதில் கூறவில்லை.
சில காரியங்களை வளர்ந்த மனிதர்களுக்கு ஒன்றுமறியாத சிறு பிள்ளைகளுக்கு விளக்குவதுபோல விளக்கம் கூறிக்கொண்டிருக்கமுடியாது. உதாரணமாக, ஒரு அறுபது வயது மனிதன் "பசும்பால் என்றால் என்ன?" என்றோ "எண்ணெய் எப்படி இருக்கும்?" என்றோ கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவனுக்கு விளக்கம்கூற முடியுமா? அவன் பொய்யன் அல்லது அறிவிலி என்று அவனுக்குப் பதில் பேசாமல் இருப்பதே மேல். எனவேதான் உண்மை என்றால் என்ன என்பதை பொய்யிலேயே பிறந்து வளர்ந்த பிலாத்துவுக்கு இயேசு விளக்கவில்லை.
ஆனால், தனது சீடர்களோடு அமர்ந்திருந்து ஜெபிக்கும்போது "உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17 : 17 ) அதாவது, தேவனுடைய வார்த்தையே சத்தியம் என்று கூறி ஜெபித்தார். ஆம், உண்மையான அந்த தேவ வார்த்தைகளுக்குச் சான்றுகூற நான் வந்தேன் என்கின்றார் இயேசு கிறிஸ்து.
மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது, "சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்" என்று. அதாவது, நாம் உண்மையுள்ளவர்களாக வாழ்வோமானால் தேவ சத்தத்தைக் கேட்க முடியும். ஆம், உண்மையுள்ள எவனும் கேட்கமுடியும் என்கின்றார் இயேசு கிறிஸ்து.
அன்பானவர்களே, நமது தேவன் ஊமையான ஒரு விக்கிரகமல்ல. இன்றும் பல்வேறு விதங்களில் தேவன் தனக்கு ஏற்புடையவர்களாக வாழும் மனிதர்களிடம் பேசுகின்றார். கனவுமூலமும் தரிசனங்கள் மூலமும், சிலவேளைகளில் மனிதர்கள் பேசுவதுபோல குரல்மூலமாகவும் பேசுகின்றார். பலவேளைகளில் நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது வசனங்களின்மூலம் பேசுகின்றார். ஆனால், அதனைக் கேட்கும் அறிவு நமக்கு வேண்டியது அவசியம்.
தேவன் நம்மோடு பேசி நம்மை நடத்தும் விதம் அதிசயமானது. ஆவிக்குரிய அனுபவமில்லாதவர்கள் இதனை நம்புவது அரிது. காரணம் ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவர்களால்தான் புரிந்துகொள்ளமுடியும்.
"ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்."( 1 கொரிந்தியர் 2 : 14 ) ஆம், அன்று அப்போஸ்தலரான பவுல் அடிகளிடம் கிறிஸ்து பேசினார் என்பதை யூதர்கள் மட்டுமல்ல கொரிந்து சபை மக்களே நம்பவில்லை. எனவேதான் அவர் கூறுகின்றார், "கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்." ( 2 கொரிந்தியர் 13 : 3 )
அன்பானவர்களே, பிலாத்துவைப்போல இல்லாமல் இன்றைய வசனம் கூறுவதன்படி சத்தியத்தைக்குறித்து சாட்சிகொடுக்க உலகினில் வந்த கிறிஸ்துவை அறிய முயலுவோம். சத்தியத்தின்படி வாழ்வோம்; சத்தியவான்களாக வாழ்வோம். அப்போது கிறிஸ்து கூறியதுபோல அவரது சத்தத்தை நம்மால் கேட்க முடியும். மேலான ஆவிக்குரிய அனுபவங்களைப் பெறமுடியும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment