கர்த்தரின் நியாயத் தீர்ப்பு பயங்கரமானது

ஆதவன் 🔥 862🌻 ஜூன் 08, 2023  வியாழக்கிழமை


"அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்." ( 1 பேதுரு 1 : 17 )

இந்த உலக வாழ்க்கையுடன் நமது வாழ்வு முடிந்துவிடுவதில்லை. உடல் அழிந்தாலும் அழியாத நமது ஆன்மா இந்த உலக வாழ்க்கைக்குப்பின் நாம் செய்த செயல்களுக்கேற்ப நித்திய பரலோக பேரின்பத்துக்கோ அல்லது நித்திய நரக அக்கினிக்கோ செல்லவேண்டியிருக்கும். ஆனால் இதனைப் பெரும்பாலானோர் நம்புவதில்லை. இந்த உலகத்தில் வாழ்வதுதான் பரலோகமும் நரகமும் என்கின்றனர். இந்த உலகத்தில் செழிப்புடன் வாழ்வது பரலோக வாழ்க்கையென்றும் துன்பப்படுவது நரக வாழ்க்கையென்றும் கூறிக்கொள்கின்றனர். 

நித்திய நியாயத்தீர்ப்பையும் மறுவுலக வாழ்வையும் குறித்து இயேசு கிறிஸ்து பல உவமைகள் கூறியுள்ளார். செல்வந்தனும் ஏழை லாசரும் பற்றிய உவமை மிகத் தெளிவாக நமக்கு இதனை உணரவைக்கும். ஆனாலும் பலரும் இதனை ஒரு கதையாக எண்ணிக்கொள்கின்றனர்.  இதற்காகவே அப்போஸ்தலரான பேதுரு இன்றைய வசனத்தில்  "பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்." என்று கூறுகின்றார்.

இந்த உலகத்தில் நாமெல்லோரும் பரதேசிகள். அதாவது குடியுரிமை இல்லாதவர்கள். நமது குறியுரிமை நாம் ஏற்கனவே கூறியபடி பரலோகம் அல்லது நித்திய நரகம். எனவே இப்படி பரதேசிகளாய் இந்த பூமியில் வாழும் நாள்வரை பயத்துடன் நடந்துகொள்ளுங்கள் என்கிறார். 

நமது கர்த்தரின் நியாயத் தீர்ப்பு பயங்கரமானது; எதார்த்தமானது. அவரது கண்களுக்கு நாம் செய்யும் எந்த அநியாயச் செயலும், பேச்சும் தப்பிடாது.  அவர் மனிதர்களைப்போல கண்டபடி நியாயம் தீர்க்கமாட்டார். எதார்த்தமாய் செய்யபட்டக் காரியத்தின் உண்மை நிலையினை அறிந்து மனிதர்களை நியாயம்தீர்ப்பார்.  "கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்." ( ஏசாயா 11 : 4 )

இந்த நியாயம் தீர்க்கும் உரிமையினை பிதாவாகிய தேவன் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அளித்திருக்கிறார் என்று வேதம் கூறுகின்றது. "அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்." ( யோவான் 5 : 22 )

வேதாகமம் மட்டுமல்ல, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானிலும் ஈஸா நபி (இயேசு கிறிஸ்து) உலகத்தை நியாயம் தீர்ப்பார் என்று கூறப்பட்டுள்ளது. "பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 16 : 7 )

அன்பானவர்களே, நியாயத் தீர்ப்பு உண்மையானது, நீதியானது எனவே அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்வோம். நீதி, நியாயம், பரிசுத்தத்தோடு வாழ்வோம். "ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்." ( 2 கொரிந்தியர் 5 : 10 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்