ஆதவன் 🔥 865🌻 ஜூன் 11, 2023 ஞாயிற்றுக்கிழமை
"ஆனால் கர்த்தரால் சுமரும் பாரம் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவனவன் வார்த்தையே அவனவனுக்குப் பாரமாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்." ( எரேமியா 23 : 36 )
ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் சபைகளில் ஊழியர்களும் சரி விசுவாசிகளும் சரி துன்பங்கள் பிரச்னைகள் ஏற்படும்போது, "கர்த்தர் தண்டித்துவிட்டார்", "கர்த்தருக்கு விரோதமாய் என்ன செய்தீர்கள் என்று எண்ணிப்பாருங்கள், மன்னிப்புக் கேளுங்கள்" என்று கூறுவதுண்டு. இது தேவனை சாதாரண மனிதனைப்போல எண்ணி பேசுவதாகும். ஒரு பள்ளி ஆசிரியரைப்போல கையில் பிரம்புடன் தேவன் காத்து நிற்பதுபோலவும் தவறு செய்தவுடன் நம்மை அடித்துவிடுவார் என்று கூறுவதுபோலவும் உள்ளது.
"கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 23 : 34 ) என்கிறார் எரேமியா.
ஆனால், நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நமது சிறு தவறுகள், குற்றங்களுக்குத் தேவன் சிறிய தண்டனை தருவார். அது தாய் தகப்பன் பிள்ளைகளைத் திருத்துவதற்குத் தரும் சிறு தண்டனைகள் போன்றவை. இவை பாரமல்ல, மாறாக தேவ அன்பின் தண்டனை. "கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 6, 7 ) என்கின்றார் பவுல் அடிகள்.
மனிதர்களது இயல்பான குணம் தனது தவறை உணராமல் இருப்பது. நெருப்பு சுடும் என்பது தெரிந்தும் நெருப்பில் கையை வைத்துவிட்டு சுட்டவுடன் கடவுள் தண்டித்துவிட்டார் என்று கூறமுடியுமா? நமது தவறான செயல்களே பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமாகிவிடுகின்றது.
இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்." ( யாக்கோபு 1 : 13, 14 ) என்று கூறுகின்றார்.
இதனை உணராமல் மக்கள் பேசுவதால்தான், "கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்".
அன்பானவர்களே, நமது வழிகளை ஆவியானவருக்கு ஒப்புவித்து நாம் வாழவேண்டும். அவர் நம்மை நடத்துவதற்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். ஒரு பிரச்சனை, துன்பம் ஏற்படும்போது தேவனைக் குற்றம் சொல்வதைவிட்டு நாம் செல்லும் வழி தவறானால் திருத்திக்கொண்டு வாழ்வதே அறிவுடைமை.
ஆவிக்குரிய வாழ்வு வாழும்போதுதான் நமக்குத் தேவன் தரும் அன்புத் தண்டனைக்கும் நமது தவறான செயல்பாடுகளால் உண்டான பாரமான பிரச்சனைகளுக்கும் வித்தியாசம் தெரியும். அன்புத் தண்டனைகளை ஏற்றுக்கொண்டு நம்மைத் திருத்திக்கொள்வோம். பாரமான பிரச்சனைகளுக்கு முடிவு வேண்டுமானால் நமது மொத்த வாழ்வின் வழியினையும் மாற்றி தேவனுக்கேற்ற வழிக்குத் திரும்பிடவேண்டும்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment