ஆதவன் 🔥 870🌻 ஜூன் 16, 2023 வெள்ளிக்கிழமை
இந்த உலகத்தில் ஒருவருக்கு நல்ல வேலை கிடைத்திடவேண்டுமென்றால் அதற்கான படிப்பு அவசியம். ஒவ்வொரு வகுப்பாக தேர்வு எழுதி வெற்றிபெற்று, பல கட்டங்களைத் தாண்டவேண்டும். படிப்புகளையும் படித்து முடித்தபின்னர் போட்டித் தேர்வுகள், நேர்முகத்தேர்வுகள் எனப் பல படிகளைக் கடக்கவேண்டும். ஒருவர் மருத்துவராகவோ, பொறியாளராகவோ கல்லூரிப் பேராசிரியராகவோ ஆகவேண்டுமென்றால் உடனடியாக அப்படி ஆகிட முடியாது. அதற்கு அவர்கள் பல ஆண்டுகள் படித்துப் பலத் தேர்வுகளைச் சந்திக்கவேண்டும்.
ஆவிக்குரிய சிறந்த மனிதனாக மாறிட, இந்தத் தேர்வுகளைப் போலவே நமது வாழ்க்கையிலும் நாம் பல கட்டங்களைத் தாண்டவேண்டியுள்ளது. இந்தத் தேர்வுகளைப் போன்றவையே துன்பங்கள்.
ஒருவன் கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொண்டவனாக, நீதிமானாக இருப்பதால் அவனுக்குத் துன்பங்கள் வராது என வேதம் கூறவில்லை. மாறாக நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும் என்றே கூறுகிறது. துன்பங்களும் பாடுகளும் உலகத்தில் பிறந்த ஒவொருவருக்கும் உண்டு. நீதிமானுக்கு அதிகம் உண்டு. ஆனால் கிறிஸ்து அதனைத் தாங்கக்கூடிய பலத்தினை அவரை விசுவாசிப்போருக்குத் தருகின்றார். இயேசு கிறிஸ்து கூறியுள்ளார் , "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆயினும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் - 16:33)
நீதிமானுக்கு ஏன் அதிக துன்பம் என்று நாம் பார்ப்போமானால் , உலகத்திலிருந்து நீதிமான்களை தேவன் தனியே பிரித்தெடுத்து நடத்துவதால்தான். இயேசு கிறிஸ்துக் கூறினார், " நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாரா யிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது." ( யோவான் 15 : 19 ) அப்படி உலகம் பகைப்பதால் தான் நீதிமானுக்குத் துன்பங்கள் அதிகம்.
நான் இவ்வளவு ஜெபித்தும் , தேவனிடம் பற்றுதலாயிருந்தும் ஏன் எனக்கு இதனைத் துன்பங்கள் எனக் கலங்கிடவேண்டாம். உபாத்திரவத்தின் வழியே சென்று ஒரு ஜெயம் உள்ள வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தேவன் நமது உபத்திரவத்தை நாம் மேற்கொள்ள உதவாமல் கைவிட்டுவிடுவதில்லை. 1 கொரிந்தியர் -10:13 கூறுகிறது, உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு இடம்கொடாமல் சோதனையைத் தாங்கத் தக்கதாக சோதனையோடுகூட அதற்கு தப்பிக்கொள்ளும் போக்கையும் உண்டாக்குவார்.
ஆம்,"நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்." ( சங்கீதம் 34 : 17 ) மேலும் வேதம் கூறுகிறது, "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது." சங்கீதம் 34 : 15 )
தாவீது சிறு வயது துவங்கி தேவனால் நடத்தப்பட்டவர். ஆரம்பம் முதல் பல சோதனைகளைக் கடந்து வந்தவர். சவுல் பல முறை அவரைக் கொல்ல முயன்றும் தேவன் அவரை சவுலின் கைகளுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. மேலும் அவர் ராஜாவாக இருந்து பல பொருளாதார நிலையிலிருந்த மக்களைக் கண்டிருக்கிறார். அவரது அனுபவத்தால் துணிந்து பின்வருமாறு கூறுகின்றார்...
"நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை." ( சங்கீதம் 37 : 25 )
ஆம், தேவன் நீதிமான்களை சோதித்தாலும் ஒரேயடியாக கைவிட்டுவிடமாட்டார். முதிர்வயதுவரை நமது அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவிராது. நமது சந்ததியினையும் தேவன் ஆசீர்வதிப்பார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment