ஆதவன் 🔥 875🌻 ஜூன் 21, 2023 புதன்கிழமை
அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய வசனத்தில் முதல் மனிதனாகிய ஆதாமையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் குறிப்பிட்டுச் சில விளக்கங்களைக் கூறுகின்றார்.
முந்தின மனிதனாகிய ஆதாம் தேவனால் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். அவனுக்கு மண்ணிற்குரிய ஆசையும் எண்ணங்களுமே இருந்தன. எனவே அவன் அந்த மண்ணிற்குரிய ஆசை இச்சையினால் தேவனால் விலக்கப்பட்டக் கனியைச் சாப்பிட்டான். அதாவது நாம் ஆவிக்குரிய நிலையினை விடுத்து உலக ஆசைகளில் மூழ்கி இருப்பது ஆதாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒப்புமையாக இருக்கின்றது. ஆனால், மேலான ஆவிக்குரிய எண்ணமுடையவர்களாய் வாழ்வது வானத்துக்குரிய கிறிஸ்து வாழ்ந்த வாழ்க்கை போன்றது.
இதனையே, "மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே." ( 1 கொரிந்தியர் 15 : 48 ) என்று கூறுகின்றார் பவுல் அடிகள்.
நாம் இந்த உலக ஆசைகொண்டு நமது உடலுக்குரியவைகளையே தேடிக்கொண்டிருப்போமானால் நாம் தேவனுடைய அரசில் சேரமுடியாது. ஏனெனில் அழிவுள்ளவை அழிவில்லாத தேவனுடைய ராஜ்யத்தில் சேர்வதில்லை. "சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை." ( 1 கொரிந்தியர் 15 : 50 ) அழிவுள்ள உலக ஆசைகளையே நிறைவேற்றவேண்டுமென்று வாழ்பவர்கள் அழியாமையுள்ள தேவனுடைய அரசில் சேர்வதில்லை.
எனவே நாம் இந்த உலகத்தில் அழிவில்லாத செல்வத்தைச் சேர்க்க முயலவேண்டும். "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். " ( 1 கொரிந்தியர் 15 : 53)
அன்பானவர்களே, நமது இலக்கு நித்தியஜீவன் எனும் முடிவில்லா வாழ்வு. ஆவிக்குரிய வாழ்வில் நாம் வெற்றிபெற்று நித்தியஜீவனைப் பெறுகின்றோம். அல்லது தோல்வியுற்று நித்திய நரகத்தினுள் செல்கின்றோம். மரணத்துக்குப்பின் நாம் அழிவுறாத நித்திய ஜீவனைப் பெறுவோமானால் மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று பொருள். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்." ( 1 கொரிந்தியர் 15 : 54 ) என்று கூறுகின்றார்.
நாம் பூமியிலிருந்துண்டான முந்தின மண்ணான ஆதாமைப்போல இல்லாமல் வானத்திலிருந்து வந்த இரண்டாம் மனிதனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்போல வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். எனவே முந்தின மனிதனது உலக இச்சையைப்போல அல்லாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருக்குமிடத்திலுள்ள மேலானவைகளையே தேடுவோம். அப்போது அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்; நமது மரணம் ஜெயமாக விழுங்கப்படும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment