ஆதவன் 🔥 864🌻 ஜூன் 10, 2023 சனிக்கிழமை
"என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" ( எரேமியா 7 : 23 )
எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்." ( மத்தேயு 9 : 13 )
பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று கூறிய இயேசு கிறிஸ்து இன்னுமொரு இடத்தில் "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறுகின்றார்.
இன்றைய வசனத்தின் முந்தின வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்றப் பலிகளைக்குறித்தும் நான்அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும் என் வாக்குக்குச் செவிகொடுங்கள்." ( எரேமியா 7 : 22 )
சில வீடுகளில் மகன் தாய் தகப்பனுக்கு ஏற்பில்லாத செயல்பாடுகளில் ஈடுபடும்போது வேண்டிய உறவினர்களை வைத்துப் பேசிப்பார்ப்பார்கள். அதற்கும் மகன் கீழ்ப்படியாமல் தாய் தகப்பனுக்கு விரோதமாகச் செயல்பட்டால் அந்தத் தாயும் தகப்பனும் மனம் வெதும்பி, "நீ என் மகனுமில்லை; நான் உனக்குத் தாயுமில்லை" எனக் கூறுவதுண்டு. அதுபோலவே தேவனும் கூறுகின்றார், "என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" என்று. செவிகொடுக்கவில்லையானால் நீங்கள் எனது மக்களல்ல என்று பொருள்.
அன்பானவர்களே,இன்றும் இயேசு கிறிஸ்துவின் காலத்து நிலைதான் தொடர்கின்றது. பலகிறிஸ்தவ சபைகளில் வருமானத்தில் பத்தில் ஒன்று காணிக்கைக் கொடுப்பது வலியுறுத்தப்படுவதன் அளவுக்கு இயேசு கிறிஸ்து கூறிய தேவனுக்குக் கீழ்படிவதைக்குறித்துப் போதிப்பதில்லை. இரக்கம், நீதி இவற்றைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பது கிடையாது.
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் என தேவன் கூறுவது நாம் அனைவருக்கும் ஒரு அறிவுரையாக இருக்கட்டும். அவர் இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கூறினார். ஒன்று எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பது, இரண்டாவது தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிப்பது.
கிறிஸ்துவின் இந்த கட்டளைகளுக்கு முரணான வாழ்க்கை, அன்பற்ற போதனைகள் நாம் தேவ ஜனமாக இருக்கத் தடையானவைகள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். . ஆம் அன்பானவர்களே, பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நாம் அறிந்துகொண்டால் பிறரைக் குற்றப்படுத்தமாட்டோம். கட்டளைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனித நேயத்துக்குக் கொடுப்போம். தேவன் காட்டிய அன்பு வழியில் நடப்போம். அதுவே கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வழி.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
No comments:
Post a Comment