ஆதவன் 🌞 857🌻 ஜூன் 03, 2023 சனிக்கிழமை
இந்தியாவின் வடஎல்லை இமய மலைத் தொடர்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. மலைகள் இயற்கை பாதுகாப்பு அரண்கள். எதிரிகளிடமிருந்து அவை நம்மைப் பாதுகாக்கின்றன. மேலும், பெரு வெள்ளமோ, புயலோ மலைகளை நகர்த்திட முடியாது. அவை உறுதியாக என்றென்றும் நிலைத்திருப்பவை. நமது நாட்டின் இமயமலையைப் போல இஸ்ரவேல் நாட்டில் சீயோன் மலை சிறப்புவாய்ந்த மலையாக உள்ளது. இந்தமலை ஜெருசலேம் நகரைச் சுற்றி மதில்போல அமைந்துள்ளது. எனவேதான் அடுத்த வசனம் கூறுகிறது:-
"பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்." ( சங்கீதம் 125 : 2 )
கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சுற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார். இன்று பிரபல அரசியல்வாதிகளும் தலைவர்களும் தங்களைப் பாதுகாக்க கறுப்புப் பூனைப் படை வீரர்களை வைத்துள்ளனர். அதற்காகக் கோடிக்கணக்கானப் பணத்தையும் செலவழிக்கின்றனர். ஆனால் ஒருவனைக் கர்த்தர் பாதுகாக்காவிட்டால் எந்தப் பாதுகாப்பும் அவனைப் காக்க முடியாது. "கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலர் விழித்திருக்கிறது விருதா " (சங்கீதம் - 127:2).
நம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களது மரணம் எப்படி சம்பவித்தது தெரியுமா? தனது பாதுகாப்புக்காக அவர் வைத்திருந்த ஒரு ராணுவ வீரன்தான் அவரைச் சுட்டுக் கொன்றான். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாதுகாப்பு வீரனே அவரைச் சுட்டுக் கொன்றான். ஆம் மனிதன் நம்பும் பாதுகாப்பு இப்படித்தான் விபரீத பாதுகாப்பாக இருக்கும்.
நமது தேவன் நம்முடைய தாழ்மையிலும் நம்மை நினைகின்றவர். நாம் வறுமையிலோ, நோயிலோ, அல்லது எதிரிகள் குறித்த பயத்தாலோ பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நமக்கு நிச்சயம் விடுதலை உண்டு. மனிதர்கள் நாம் செல்வந்தர்களையும் நல்ல வசதி படைத்தவர்களையும்தான் நமது நினைவில் வைத்திருப்போம். யாராவது நம் வீட்டிற்கு அடிக்கடி பிச்சைக் கேட்டு வரும் பிச்சைக்காரரை நினைவில்வைத்துக் கொண்டிருப்போமா? அவர்கள் பிச்சைக் கேட்கும்போது கொடுத்துவிட்டு அப்படியே அவர்களை மறந்து விடுவோம்.
ஆனால் தேவன் அப்படியல்ல. அவர் நமது எந்தவித தாழ்மையிலும் நம்மை நினைகின்றவர். நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. ( சங்கீதம் 136 : 23 ) என வேதம் கூறவில்லையா? தேவன் நம்மை நினைப்பதால், அவரோடு நெருங்கிய தொடர்பில் நாம் இருப்போமானால் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்போம். எந்த விதப் பிரச்சனைகள், துன்பங்கள், நோய்கள், வந்தாலும் நமது உள்ளம் கலங்காது , அசையாது.
சீயோன் மலையை இரண்டு விதமாக இன்றைய தியான சங்கீதம் வசனம் குறிப்பிடுகின்றது.
1. எருசலேமைச் சுற்றிலும் மலையானது பாதுகாப்பாக இருப்பதுபோல கர்த்தர் நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்;
2. கர்த்தரை நம்பி நாம் வாழும்போது மலை எந்தப் பேரிடருக்கும் அசையாமல் இருப்பதுபோல அசையாமல் இருப்போம்.
கர்த்தரையே நம்புவோம்; அசையாமல் உறுதியுடன் பாதுகாப்பாக இருப்போம்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
No comments:
Post a Comment