ஆதவன் 🔥 881🌻 ஜூன் 27, 2023 செவ்வாய்க்கிழமை
"மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்." ( நீதிமொழிகள் 19 : 21 )
பொதுவாக மனிதர்களாகிய நாம் அனைவருமே நமது எதிர்காலம், நமது குழந்தைகளது எதிர்காலம், நமது தொழில், வேலைவாய்ப்புகள் இவைகுறித்து பல்வேறு எண்ணங்களைக் கொண்டுள்ளோம். நாம் சிந்திப்பது எல்லாமே நமது நன்மைக்காகவே. எனவே நாம் எப்போதும் நமக்கு நல்லதே நடக்கவேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். யாரும் தங்களது வாழ்வு அல்லது தங்கள் குழந்தைகளின் வாழ்வு மோசமானதாகப் போகவேண்டுமென்று எண்ணுவதில்லை.
நாம் நமக்குரிய வருமானத்தில் என்னவெல்லாம் செய்யலாமென்று திட்டமிடுகின்றோம். ஆனால் அவை பொதுவாக நாம் எண்ணியபடி எப்போதுமே நிறைவேறுவதில்லை. எதிர்பாராத செலவினங்கள் நமது திட்டத்தை மாற்றியமைக்க வைத்துவிடுகின்றன. இதனையே இன்றைய வசனம் கூறுகின்றது, "மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்." என்று. நாம் எண்ணுவதும் திட்டமிடுவதுமல்ல, கர்த்தரது எண்ணமே நமது வாழ்வில் நிறைவேறும்.
இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." ( யாக்கோபு 4 : 13, 14 ) என்கின்றார்.
அதற்காக நாம் திட்டமிடுவதோ, எதிர்காலத்தைக்குறித்து சிந்திப்பதோ கூடாது என்று பொருளல்ல. யாக்கோபு அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4 : 15 ) சில ஆவிக்குரிய மனிதர்கள் இப்படிக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். " பிரதர், கார்தருக்குச் சித்தமானால் நாம் அடுத்த வாரத்தில் ஒருநாள் கூடி இதுகுறித்து பேசுவோம்" என்பார்கள்.
மேலும் நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையும்போது, தேவனோடுள்ள நமது தொடர்பு அதிகரிக்கும்போது அவரே நமது உள்ளத்தில் சில விருப்பங்களைத் தோன்றச்செய்வார். அல்லது நம்மை ஒரு செயலைச் செய்யும்படித் தூண்டுவார். அத்தகையைச் செயல்களை நாம் செய்யும்போது அவை வெற்றியாக முடிவடையும். அதாவது பல்வேறு விதங்களில் மனித அறிவால் சிந்தித்துத் திட்டமிடுவதுபோலல்ல இது. திடீரென்று நமக்குள் தோன்றும் ஒரு விருப்பம். அதை செய்வதற்கான பெலன். இதுவே தேவன் நடத்துவது.
இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்." ( பிலிப்பியர் 2 : 13 ) என்று கூறுகின்றார். தேவனே நம்மில் இந்த விருப்பத்தையும் செயலையும் செய்வதால் நாம் எளிதாக அந்தச் செயலைச் செய்துமுடித்துவிடுவோம்.
எனவே அன்பானவர்களே, நமது சிந்தனை செயல்கள் அனைத்தையும் தேவனே ஆளும்படி அவரிடம் ஒப்படைத்திடுவோம். நமது இருதயத்தின் எண்ணங்கள் பலவாக இருந்தாலும் அது தேவனுக்கு உகந்ததாக அவரது யோசனையாகவும் இருக்குமானால் அது நமது வாழ்வில் நிச்சயம் நிறைவேறும்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment