ஆதவன் 🔥 888🌻 ஜூலை 04, 2023 செவ்வாய்க்கிழமை
கிறிஸ்து தனது அடியார்களிடம் உறுதியான நிலையான அன்பை எதிர்பார்க்கின்றார். ஒரு சில நாட்கள் முழு விசுவாசிகளாக இருந்துவிட்டுப் பின்னர் தேவைக்கேற்ப கிறிஸ்துவைப் பயன்படுத்த விரும்புபவர்களை அவர் தனக்கு ஏற்புடையவர்களாய்க் கருதுவதில்லை.
இன்று நாம் உலகினில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பரவலாகப் பார்க்க முடியும். அதாவது தங்கள் தேவைக்காக நம்மைப் பயன்படுத்திவிட்டு பிறகு கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். பின்னர் நம்மைக்கொண்டு ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால் வெட்கமில்லாமல் மீண்டும் நம்மிடம் வருவார்கள். ஆனால் தேவன் இத்தகைய மனிதர்களை அருவெறுக்கிறார். தேவைக்காக தன்னைப் பயன்படுத்துபவர்களையல்ல, மாறாக, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்". ( யோபு 13 : 15 ) என்று அவரைவிட்டுப் பின்மாறாமல் இருப்போரை தேவன் அதிகமாக நேசிக்கிறார்.
இன்று பல இளைஞர்களும் இளம் பெண்களும் இப்படி இருக்கின்றனர். பெரும்பாலான காதலர்கள் போலியான காதலையே வளர்த்துக்கொண்டு பின்னர் அவரவர் தேவைக்கேற்ப பிரிந்து வேறு வாழ்க்கையினுள் பிரவேசிக்கின்றனர்.
இயேசு கிறிஸ்து கூறிய மேற்படி வசனத்தின்படி வாழ பழைய ஏற்பாட்டுக்காலத்திலேயே எலிசா தீர்க்கதரிசி முடிவெடுத்தார். எலியா, எலிசாவை சந்தித்தபோது எலிசா தனது வயலில் ஏர்பூட்டி உழுதுகொண்டிருந்தார். எலியா அவரை ஊழியத்துக்கு அழைத்தபோது எலிசா உடனே அவரிடம், "நான் சென்று எனது வீட்டாரிடம் விடைபெற்று வருகிறேன்" என்று கூறி தனது வீட்டிற்குச் சென்று திரும்பிவந்து மக்களுக்கு விருந்து வைக்கிறார்.
இதனை நாம் பின்வருமாறு வாசிக்கிறோம். "அப்பொழுது அவன், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்." ( 1 இராஜாக்கள் 19 : 21 )
அன்பானவர்களே, ஏர்மாடுகளும் ஏரும் இருக்குமானால் ஒருவேளை ஊழியத்தில் வரும் இடர்பாடுகளைக் கண்டு பின்மாறி மீண்டும் உழவுசெய்யச் செல்ல மனம் வந்துவிடும். எனவே முதலில் நாம் நமது ஏர்மாடுகளையும் ஏரையும் அழித்துவிடுவோம் என்று முடிவெடுத்தார் எலிசா. ஆம், கர்த்தரைப் பின்பற்றுவதில் அவர் அவ்வளவு உறுதியாக இருந்தார். எந்தவிதத்திலும் பின்மாற்றம் நமது வாழ்வில் வராது என்று அவர் உறுதியாக நம்பியதால்தான் இப்படிச் செய்தார்.
கலப்பையின்மேல் (கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தில்) தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார் இயேசு கிறிஸ்து. ஆனால் எலிசாவோ கர்த்தருக்காக தனக்கு இருந்த கலப்பையையும் மாடுகளையும் அழித்துவிட்டு கர்த்தர்மேல் வைத்த விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.
தேவன் எனக்குத் தருவதால் அவரை விசுவாசிக்கிறேன் என்பதல்ல விசுவாசம். என்னிடம் இருப்பவை அனைத்தும் போனாலும் பின்மாறாமல் அவரையே நம்புவேன் என்பதே உறுதியான விசுவாசம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment