ஆதவன் 🔥 867🌻 ஜூன் 13, 2023 செவ்வாய்க்கிழமை
"நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்."(எரேமியா 15:19)
ஒரு சிலரது வாழ்க்கை எந்தவிதச் சிக்கல்களுமின்றி நன்றாகச் சென்றுகொண்டிருக்கும். ஆனால் திடீரென்று வாழ்க்கையில் பெரிய சறுக்குதல் ஏற்பட்டு அவர்கள் நிலைகுலைந்துபோவதுண்டு. இந்தச் சறுக்குதலுக்குக் காரணம் என்னவென்று அவர்கள் குழம்பிச் சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுண்டு. வாஸ்து வல்லுனர்களையும் ஜோசியர்களையும் நாடி பரிகாரங்கள் செய்வதும், மற்றவர்களால்தான் தங்களுக்கு இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என எண்ணி மேலும் மேலும் தங்களுக்குத் துன்பத்தை வருவித்துக்கொள்வதுமுண்டு. "பொறாமைக் கண்கள்" "கண்திருஷ்டி", "என் வளர்ச்சியைப்பார்த்து யாரோ எனக்குச் செய்வினை வைத்துவிட்டார்கள்' இப்படித்தான் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்வின் சறுக்குதலுக்குக் காரணம் கண்டுபிடிக்கிறார்கள்.
அன்பானவர்களே, சிலவேளைகளில் தேவன் நாம் அவரிடம் திரும்பி வரவேண்டும் என்பதற்காகச் சில துன்பங்களையும் சறுக்குதல்களையும் நமது வாழ்வில் ஏற்படுத்துகின்றார். நமது துன்பங்களுக்குப் பிறரைக் குற்றம் சாட்டுவதைவிட்டுவிட்டு நாம் மனம்திரும்பி கர்த்தரிடம் வரவேண்டுமென்று இன்றைய வசனம் மூலம் கர்த்தர் பேசுகின்றார்.
நமது தவறான வழிகளைவிட்டு மனம்திரும்பி கர்த்தரிடம் வந்தோமென்றால் நம்மைத் திரும்பவும் சீர்படுத்துவேன் என்று இன்றைய வசனத்தில் கர்த்தர் நமக்கு நல்ல செய்தியைத் தருகின்றார். "நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். நீ எந்த இடத்திலிருந்து வீழ்ச்சியைச் சந்தித்தாயோ அதே இடத்துக்கு வரும்படி திரும்பச் சீர்படுத்துவேன் என்கிறார் கர்த்தர்.
மட்டுமல்ல, "நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, தீழ்ப்பான (அருவருப்பான) காரியங்களிலிருந்து விலகி விலையேறப்பெற்ற கர்த்தரது வார்த்தைகளைப் பிரித்தெடுத்து அதன்படி வாழ்வாயானால் நீ கர்த்தரது வாய்போல இருப்பாய்; உன்னை வெறுப்பவர்களிடம் அல்லது உனக்குக் கெடுதல் செய்தவர்களிடம் நீ செல்லாமல் அவர்கள் உன்னைத்தேடி வருவார்கள் என்கிறார் கர்த்தர்.
மேலும் இன்றைய வசனத்துக்கு அடுத்த வசனமாக, "உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எரேமியா 15:20) என்று கூறப்பட்டுள்ளது.
நமது தோல்விகள், சறுக்குதல்கள்,பிரச்சனைகள், துன்பங்கள் எல்லாவற்றுக்கும் பிறரைக் காரணமாக எண்ணாமல் நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். அப்படி "நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்" என வாக்களிக்கும் கர்த்தர், உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்றும் உறுதிகூறுகின்றார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment