Tuesday, May 30, 2023

தேவன் உண்டென்று பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன

ஆதவன் 🌞 854🌻 மே 31, 2023  புதன்கிழமை      


        
"நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே". (கலாத்தியர் 3:26)

கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது எவ்வளவு மேலான காரியம் பாருங்கள். நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு வாழும்போது கடவுளின் மக்களாகின்றோம். நாம் மட்டுமல்ல, எத்தனைபேர்கள் எந்த மத, இன, ஜாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரும் இப்படி கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது கடவுளின் பிள்ளைகளாகின்றோம். 

இதனையே, "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." ( யோவான் 1 : 12 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலனாகிய யோவான். 

இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறுவது வாயினால் கூறுவது மட்டுமல்ல, செயலிலும்  நாம் நமது விசுவாசத்தைக் காட்டுவது. அதாவது, அவரை விசுவாசித்து, அவருக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழவேண்டும். வெறும் விசுவாசம் மட்டும் போதாது. ஏனெனில் பிசாசுகளும் கடவுள் ஒருவர் உண்டு என்று விசுவாசிக்கின்றன.

"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டாமோ?" ( யாக்கோபு 2 : 19, 20 ) என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

அன்று யூதர்கள் கடவுளை விசுவாசித்தனர். ஆனால் அவர்களது செயல்பாடுகள் பிசாசின் செயல்பாடுகளாக இருந்தன. எனவேதான் இயேசு கிறிஸ்து அவர்களைப்பார்த்து கூறினார், "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; ....................."  ( யோவான் 8 : 44 ) என்று.

கடவுளை நாம் அன்பு செய்கின்றோமென்றால் இயேசு கிறிஸ்துவை அன்புசெய்வோம்.  "இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்." (யோவான் 8:42) என்று கூறினார். இயேசுவை அன்பு செய்வது என்பது  அவரது கட்டளைகளைக் கைக்கொள்வதே. 

அன்பானவர்களே, நாம் வெறுமனே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு அவருக்கு ஏற்பில்லாத வாழ்க்கை  வாழ்வோமென்றால் நாம் பிசாசின் பிள்ளைகளாயிருப்போம். எனவே கிறிஸ்துவின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவரை அன்புசெய்து வாழவேண்டியது அவசியமாயிருக்கிறது. அப்படி வாழ்வதுதான் அவரை விசுவாசிப்பது. 

அப்படி நாமெல்லாம் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் வாழ்வோமானால் இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுவதுபோல தேவனுடைய புத்திரராயிருப்போம்.  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Monday, May 29, 2023

ஜெபங்களின் பாணியை மாற்றுவோம்

ஆதவன் 🌞 853🌻 மே 30, 2023  செவ்வாய்க்கிழமை       

"நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,

சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்......அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்." ( கொலோசெயர் 1 : 9, 10, 11 )

இன்று பலரும் பொதுவாக ஆராதனை எனும் பெயரில் ஆலயத்துக்கு வந்து ஒருமணி அல்லது ஒன்றரைமணி நேரம் செலவிட்டுவிட்டு தங்கள் கிறிஸ்தவ கடமை நிறைவேறிவிட்டது என்று திருப்தியடைந்துகொள்கின்றனர். அன்பானவர்களே, தேவன் நம்மை வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கவில்லை. அதனையே இன்றைய வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல் எழுதுகின்றார். அவர் தனது சபை மக்களுக்காக எதற்காகவெல்லாம் ஜெபிக்கின்றார் என்பதை இங்குக் குறிப்பிடுகின்றார். அவை என்னவென்றால்:- 

1. தேவனது சித்தத்தை அறியும் அறிவால் நிரப்பப்படவேண்டும்; 
2. சகலவிதமான நற்கிரியைகளின் கனிகளைத் தரவேண்டும்;
3. தேவனை அறியும் அறிவில் விருத்தியடையவேண்டும்;
4. கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளவேண்டும்.;
5. கர்த்தருடைய எல்லா வல்லமையிலும் பலப்படவேண்டும்              

அதாவது ஒரு சிறந்த கிறிஸ்தவன், மேற்குறிப்பிட்ட ஐந்து தகுதிகளிலும் தினமும் வளரவேண்டும்.

அன்பானவர்களே, ஏதோ கடமைக்கு நாமும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. 

தேவ சித்தத்தை அறியும்போதுதான் நாம் நம்மைக்குறித்தும் நம்மைச் சார்ந்துள்ளவர்களைக்குறித்தும் தெளிவு பெற முடியும். கனியுள்ள ஒரு வாழ்க்கைதான் பிறருக்குக் கிறிஸ்துவை அறிவிக்க உதவும். தேவனை அறியும் அறிவில் வளரும்போதுதான் தேவனைப்பற்றி ஒரு  தெளிவு கிடைக்கும். இல்லையானால் நாம் அறியாததைத் தொழுதுகொள்பவர்களாகவே இருப்போம். கர்த்தருக்குப் பிரியமாக நடக்கவேண்டுமென்று எண்ணும்போது பாவத்துக்கு விலகி வாழ்வோம். இவை அனைத்தும் இருக்கும்போது கர்த்தரது வல்லமை நம்மில் வெளிப்படும்.

இங்கு அப்போஸ்தலரான பவுல் வெறுமனே வல்லமை என்று குறிப்பிடாமல், "எல்லா வல்லமையாலும் பலப்படவும்" என்று கூறுகின்றார். அதிசயம் அற்புதம் செய்யும் வல்லமை மட்டுமல்ல,  மாறாக பாவத்தை மேற்கொள்ளும் வல்லமை. பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளும் வல்லமை. 

நமது அன்றாட ஜெபங்களில் நாம் பெரும்பாலும் உலகத் தேவைகளுக்காகவே ஜெபிக்கின்றோம். மேலான ஆவிக்குரிய தேவைகளை விட்டுவிடுகின்றோம். நமக்கு இன்றைய வசனம் மூலம் அப்போஸ்தலரான பவுல் தெளிவான வழி காட்டுகின்றார். இங்கு அப்போஸ்தலரான பவுல் தனக்காக ஜெபிக்கவில்லை. மாறாக, தான் வழிகாட்டி நடத்தும் சபை மக்களுக்காக ஜெபிக்கின்றார். 

இன்று நமக்காக இப்படி முயற்சியெடுத்து ஜெபிக்க எந்த ஊழியரும் இல்லை. எனவே நாம்தான் ஜெபிக்கவேண்டும். நமது அன்றாட ஜெபங்களின் பாணியை மாற்றுவோம். உலகத் தேவைகளைவிட்டு ஆவிக்குரிய தேவைகளுக்காக ஜெபிப்போம். அதுவே தேவனுக்கு ஏற்புடைய ஜெபமாக இருக்கும். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Sunday, May 28, 2023

வேதனையைக் கூட்டாத ஆசீர்வாதமே கர்த்தர்தரும் ஆசீர்வாதம்.

ஆதவன் 🌞 852🌻 மே 29, 2023  திங்கள்கிழமை       



             

"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்." ( பிலிப்பியர் 4 : 19 )

இந்த உலகத்தில் தேவனிடத்தில் விசுவாசம்கொண்டு வாழும் எல்லோரும் செல்வந்தர்களல்ல. வறுமை, குறைச்சல், பெரும்பான்மை மனிதர்களுக்குள்ள பலவித செல்வங்கள் இல்லாமை. இவைதான் ஆவிக்குரிய பல மக்களுக்கு இருக்கும் உண்மை நிலைமை. ஆனால் கர்த்தர்மேலுள்ள விசுவாசத்தால் அவர்கள் இந்த  உலகத்தில் வாழ்கின்றனர். கர்த்தரையே நம்பி வாழ்கின்றனர்.

இந்த உலகினில் வறுமையில் வாழும் மக்களை நாம் இரு பிரிவாகப் பிரிக்கலாம்:- 

1. வறுமையில் வாழும் உலக மக்கள். இவர்கள் எந்த மதத்தினராகவும் இருக்கலாம். கிறிஸ்தவர்களில்கூட, கிறிஸ்துவை பெயரளவில் மட்டும் அறிந்த பெயர் கிறித்தவர்களாக இருக்கலாம். 
2. கிறிஸ்துவின் அன்பை ருசித்து கிறிஸ்துவுக்குள் வாழும் ஆவிக்குரிய அனுபவமுள்ள கிறிஸ்தவர்கள்.

இன்றைய தியானத்துக்குரிய வசனம் இரண்டாம் வகை மனிதர்களுக்குக் கூறப்பட்ட வசனமாகும். கிறிஸ்துவுக்குள் நாம் வாழ்வோமென்றால், தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி நமது குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். காரணம் இத்தகைய ஆவிக்குரிய மக்கள் உலக வாழ்வில் தரித்திரராக இருந்தாலும் தேவனின் பார்வையில் விசுவாசத்தில் ஐசுவரியவான்கள்.

"என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள்ளவில்லையா?" ( யாக்கோபு 2 : 5 ) என்கின்றார் அப்போஸ்தலராகிய யாக்கோபு. ஆம், இதுதான் இன்றைய வசனம் கூறும் கிறிஸ்துவுக்குள் மகிமையில் நிறைவாக்குதல். அதாவது தேவன் வாக்களித்த பரலோக ராஜ்யத்தின் சுதந்திரவாளிகள்.

'மறுமையில் நிறைவு கிடைக்குமென்றும்,  பரலோக ராஜ்யத்தின் சுதந்திரவாளிகள் என்றும் கூறிக்கொண்டு இந்த உலக வாழ்க்கை முழுவதும் தரித்திரத்தில் கழிக்கமுடியுமா?' என்று சிலர் எண்ணலாம். அப்படியல்ல, தேவன் நினைக்கும்போது, அல்லது அவரது காலம் வரும்போது உலக ஆசீர்வாதங்களினாலும் நம்மை நிரப்புவார். 

"ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்." ( 1 நாளாகமம் 29 : 12 ) என்று நாம் வாசிக்கின்றோம்.

மேலும், உலக செல்வ ஆசீர்வாதம் படைத்தவர்கள் என்று நாம் கருதும் பலர் பல்வேறு துன்பங்களிலும், இக்கட்டுகளிலும், நோய்களிலும், சமாதானக் குறைவிலும் தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கர்த்தர் ஒருவரை ஆசீர்வதிக்கும்போது முற்றுமுடிய ஆசீர்வதிப்பார். வேதனையில்லாத ஆசீர்வாதம்; மன சமாதானத்தோடுகூடிய ஆசீர்வாதம். எனவேதான் வேதம் கூறுகின்றது, "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 ) ஆம், வேதனையைக் கூட்டாத ஆசீர்வாதமே கர்த்தர்தரும் ஆசீர்வாதம். 

ஆம் அன்பானவர்களே, "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி என்  குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள்  நிறைவாக்குவார்." என அப்போஸ்தலரான பவுல் விசுவாசத்தோடு கூறுவதுபோல நாமும் விசுவாச அறிக்கையிடுவோம். நமது எந்தக் குறைவையும் நிறைவாக்கி நடத்த அவர் வல்லவராயிருக்கிறார்.  

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Friday, May 26, 2023

இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்

ஆதவன் 🌞 851🌻 மே 28, 2023  ஞாயிற்றுக்கிழமை  

"கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 )

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தை நாம் பெறும்போது ஆவிக்குரிய வாழ்வின் முதல் படியினை அடைகின்றோம். அந்த நிலையினில் நாம் அன்றாடம் வளர்ச்சியடையவேண்டும். இப்படி ஆவிக்குரிய வாழ்வில் நாம் வளரும்போது பழைய  நியாயப்பிரமாண கட்டளைகள் நம்மை நடத்தாமல்  பரிசுத்தஆவியானவரே நடத்துவார். 

ஆம், நாம் பழைய கட்டளைகள் எனும் எழுத்தின்படியல்ல புதுமையான ஆவியின்படியே தேவனுக்குமுன் நடப்போம். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்." ( ரோமர் 7 : 6 ) என்கின்றார். அதாவது ஆவியின்படி நடக்கும்போது கட்டளைகளுக்கு விடுதலையாகி ஆவியானவரின் வழிநடத்தலுக்கு உட்பட்டவர்களாகின்றோம். 

இப்படி நாம் நடக்கும்போது, அந்த ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நம்மை  பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்குகின்றது.

மரணம் என்று இங்குக் குறிப்பிடப்படுவது ஆத்தும மரணத்தையே. ஏனெனில் உலகினில் பிறந்த அனைவருக்குமே சரீர மரணம் பொதுவானது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 23 ) என்று குறிப்பிடுகின்றார்.   ஆவிக்குரிய வாழ்வில் கிறிஸ்துவின் பிரமாணம் நம்மை ஆத்தும மரணம், பாவம் இவைகளிலிருந்து விடுதலையாக்குகின்றது. மட்டுமல்ல நாம் முடிவில்லா வாழ்வு எனும் நித்திய ஜீவனுக்குத்  தகுதியுள்ளவர்களாகின்றோம். 

அன்பானவர்களே நாம் பரிசுத்த ஆவியானவரை வாழ்வில் பெறவேண்டியதன் அவசியம் இதுதான். பாவத்துக்கு அடிமையாகி சாவுக்கேதுவாகவுள்ள நமது சரீரங்களையும் கிறிஸ்துவை உயிர்பித்ததுபோல ஆவியானவர் உயிர்ப்பிப்பார். இதனையே, "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) என்கின்றார் பவுல் அடிகள். 

இந்த அனுபவத்தைப் பெறும்போதே நாம் அவரது சொந்த பிள்ளைகளாகின்றோம். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு உள்ளாகின்றோம்.  இப்படி கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நம்மை பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்குக்கின்றது. மட்டுமல்ல, நாம் நம்மை முற்றிலுமாக ஆவியானவரின் வழிநடத்தலுக்கு ஒப்புக்கொடுத்து வாழும்போது நித்திய ஜீவனுக்கும் தகுதியுள்ளவர்களாகின்றோம்.
 
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

ஆரோனின் கோல்

ஆதவன் 🌞 850🌻 மே 27, 2023  சனிக்கிழமை     

           

"மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடுப்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது." ( எண்ணாகமம் 17 : 8 )

நமது தேவன் அதிசயமான முறையில் தான் தெரிந்துகொள்பவர்களை நடத்துபவர். மனித அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாத அதிசயங்களை செய்து தனக்கு ஏற்புடையவர்களாக வாழ்பவர்களை அவர் மற்றவர்களிலிருந்து வேறுபிரித்து உயர்த்துகின்றார். 

இஸ்ரவேல் மக்கள் கூட்டத்தார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். அதாவது அந்த மக்கள் மோசேயும் ஆரோனும் தங்களாகத் தங்களை உயர்த்தி மற்றவர்களுக்குத் தங்களைத் தலைவர்களாக ஏற்படுத்த முயல்வதாக எண்ணிக்கொண்டனர். தேவனது கட்டளையின்படியே மோசேயும் ஆரோனும் செயல்பட்டனர் என்பதை அவர்கள் நம்பவில்லை. 

அப்போது கர்த்தர் மோசேயிடம்,  இஸ்ரவேல் கோத்திரத்துத் தலைவர்கள் பன்னிரண்டுபேரிடமும் ஆளுக்கொரு கோலை கொண்டுவரச்செய்து அதில் அவர்களது பெயரை  எழுதவும், லேவி கோத்திரத்துக்குரிய கோலில் ஆரோனின் பெயரை எழுதி கர்த்தரது சமூகத்தில் வைக்கவும் சொன்னார். "அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்." ( எண்ணாகமம் 17 : 5 ) என்றார்.

மோசே அப்படியே செய்தான். அந்த ஒரே இரவில் அற்புதம் நிகழ்ந்தது. லேவியின் குடுப்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது.

அன்பானவர்களே, இது பல்வேறு பிரச்சனைகள், தோல்விகள், துன்பங்களால் துவண்டுபோயிருக்கும் நமக்குத் தேவனது வல்லமையினை உணரவும் நமது எந்தப் பிரச்சனையையும் அவரால் ஒரு நொடியில் மாற்றமுடியும் எனும் விசுவாசத்தைத்  தரக்கூடியதாகவும்  இருக்கின்றது. 

நமது வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவும், நமது எந்த நோயையும் பிரச்சனைகளையும் மாற்றிடவும் தேவனுக்கு அதிக நாட்களோ நேரமோ தேவையில்லை. காய்ந்துபோல ஒரு மரக்கோலை  ஒரே இரவில் துளிர்த்து, பூத்து, காய்த்து கனிகளைக் கொடுக்கத்தக்கதாக  மாற்ற தேவனால் கூடுமென்றால் காய்ந்து பட்டுப்போன நமது வாழ்வையும் அவரால் ஒரே நொடியில் மாற்றிட முடியும். ஆரோனின் கோல்போல நமது வாழ்வையும் அவர் துளிர்விடச் செய்வார். இஸ்ரவேல் மக்கள் கூட்டத்தார்முன் மோசேயும் ஆரோனும் உயர்த்தப்பட்டதுபோல நம்மையும் அவர் உயர்த்துவார். 

மோசே உலர்ந்துபோன கோலை தேவ சமூகத்தில் வைத்ததுபோல நமது உலர்ந்த வாழ்வையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் ஒப்படைத்து ஜெபிப்போம். அவர் ஒரே நொடியில் சாதாரண தண்ணீரை சுவைமிக்கத் திராட்சைரசமாக்கி மகிழச்செய்யவில்லையா? ஒரே வார்த்தையால் மரித்து நான்கு நாட்களான லாசரை உயிர்ப்பிக்கவில்லையா? ஆம், தேவனால் எல்லாம் கூடும். மனிதர்களாகிய நமக்குத்தான் காலமும் நேரமும். அவரோ காலங்களைக் கடந்தவர். நமது விசுவாசம் தளர்ந்திடாமல் இருப்போம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, May 25, 2023

சாத்தான் இருதயத்தில் விதைத்தப் பொருளாசை

 ஆதவன் 🌞 849🌻 மே 26, 2023  வெள்ளிக்கிழமை  

                  

"மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள்." ( சங்கீதம் 4 : 2 )

கர்த்தருக்கு நாம் செலுத்தவேண்டிய மகிமையைச் செலுத்தாமல் இருப்பது அவரை அவமானப்படுத்துவதாகும். உலகப் பொருட்களுக்கும் தேவனுக்கும் நாம் செலுத்தவேண்டிய முக்கியத்துவம் வெவேறானவை. உலகப் பொருட்களா தேவனா என்று பிரச்னை வரும்போது நாம் தேவனுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுக்காமலிருப்பது அவரை அவமானப்படுத்துவதாகும். 

உலகப் பொருட்களுக்கு இன்றைய வசனம் இரண்டு பெயர்களைக் கொடுத்துள்ளது. அவை வீணானவை, பொய்யானவை என்பனவாகும். இப்படி வீணானவைகளையும் பொய்யானவைகளையும் விரும்பி எதுவரை என் மகிமையை அவமானப்படுத்துவீர்கள்? என்று இன்றைய வசனம் கேள்வி எழுப்புகின்றது.    

இந்த உலகத்தில் மற்றவர்களைத் திருப்திப்படுத்தவேண்டுமென்று சிலவேளைகளில் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்கத் தவறிவிடுகின்றோம். இது சுய லாபத்துக்காகவோ பயத்தினாலோ இருக்கலாம். 

மோசே மலையிலிருந்து இறங்கிவர காலதாமதம் ஏற்பட்டபோது இஸ்ரவேல் மக்கள் ஆரோனிடம், " எங்களை எகிப்திலிருந்து அழைத்துகொண்டுவந்த மோசேக்கு என்ன நேர்ந்ததோ என்று அறியோம்...நீர் எங்களுக்காக எங்கள்முன் செல்லும் தேவனை எங்களுக்குத் தாரும்" என்று கேட்டனர். அவர்களுக்குப் பயந்த  ஆரோன் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கி அவர்கள்முன் வைத்து, எகிப்திலிருந்து உங்களை வரவழைத்துக்  கொண்டுவந்த தேவன் இவரே" என்று கூறினான்.  

மட்டுமல்ல, "ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான். மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்கதகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்." ( யாத்திராகமம் 32 : 5, 6 )

இப்படி, "ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான்." ( யாத்திராகமம் 32 : 25 ) என்று வாசிக்கின்றோம். ஆம், கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய ஆராதனையை நாம் பிறருக்குச் செலுத்தும்போது நாமும் அவமானமடைந்து கர்த்தரையும் அவமானப்படுத்துகின்றோம்; நிர்வாணிகளாகின்றோம். 

"நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்." ( ஏசாயா 42 : 8 ) என்கின்றார் பரிசுத்தர். விக்கிரகங்கள் என்பது சிலைகள் மட்டுமல்ல, தேவனைவிட்டு வேறு உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் குறிக்கும். பொருளாசை மிகப்பெரிய விக்கிரக ஆராதனை. "விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. " ( எபேசியர் 5 : 5 ) என்று பவுலடிகள் கூறுகின்றார்.

நமது இரட்சிப்பின் ஆடையினை உரிந்து நம்மை அவமானப்படுத்திட சாத்தான் பொருளாசையினை நமது இருதயத்தில் விதைக்கின்றான்.  எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். இயேசு கிறிஸ்துவோடு பன்னிருவருள் ஒருவனாக இருந்த யூதாஸ் சாத்தான் இருதயத்தில் விதைத்தப்  பொருளாசையால் இரட்சிப்பை இழந்து அவமானடைந்து தற்கொலை செய்துகொள்ளவில்லையா? 

எனவே அன்பானவர்களே, கர்த்தரது மகிமையை அவமானப்படுத்திடாமல், வீணானதை விரும்பி, பொய்யை நாடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம். இதற்காக நமது அன்றாட ஜெபங்களில் மன்றாடவேண்டியது அவசியம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Wednesday, May 24, 2023

மீகாள் நமக்கு ஒரு எச்சரிக்கை

ஆதவன் 🌞 848🌻 மே 25, 2023  வியாழக்கிழமை  

         

"தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்." ( 2 சாமுவேல் 6 : 14 )


தேவனை ஆராதிப்பதில் ஒவ்வொருவரும் ஒரு முறையினைப் பின்பற்றுகின்றனர். ஆராதனையின் முறைமைகளைத் தேவன் பார்ப்பதில்லை. மாறாக ஆராதிப்பவர்களின் இதயத்தையே பார்க்கின்றார். இன்று அமைதியாக தேவனை ஆராதிக்கும் சபைகளும் உண்டு ஆர்ப்பரித்து உற்சாகமாக ஆராதிக்கும் சபைகளும் உண்டு. ஆர்ப்பரித்து ஆராதிப்பவர்கள் அமைதியாக ஆராதிப்பவர்களை செத்த சபையினர் என்றும் , அமைதியாக ஆராதிப்பவர்கள் ஆர்ப்பரித்து ஆராதிப்பவர்களை கூத்தாடி சபைகள் என்றும் விமர்சிக்கின்றனர்.

இப்படி ஒருவர் செய்யும் ஆராதனையைக் குறைகூற யாருக்கும் அதிகாரம் இல்லை. தேவனே இருதயங்களை நோக்கிப்பார்க்கின்றவர். அவருக்கே யார் தன்னை உண்மையாக ஆராதிக்கிறார்கள் என்று தெரியும். தேவன் ஆராதனையினை இப்படித்தான் செய்யவேண்டுமென்று எந்தக் கட்டளையும் தரவில்லை. இருதய சுத்தத்திற்கே தேவன் முன்னுரிமை கொடுக்கின்றார்.

தாவீது இஸ்ரவேலின்மேல் ராஜாவானபின்பு அதுவரை கிபியாவிலிருந்த கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.   "தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்.." ( 2 சாமுவேல் 6 : 3 ) அப்போது தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.

ஒரு பெரிய ராஜா சணல் ஆடையினை உடுத்திக்கொண்டு தெருவில் நடனமாடியது சவுலின் குமாரத்தியாகிய தாவீதின் மனைவி மீகாளுக்கு  கேவலமான காரியமாகத் தெரிந்தது. "கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்." ( 2 சாமுவேல் 6 : 16 )

அன்பானவர்களே, இப்படி இருதயத்தில் தாவீதை அவமதித்ததற்கு தேவன் கொடுத்தத் தண்டனை மிகக் கொடியது. ஆம், "அதனால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது." ( 2 சாமுவேல் 6 : 23 ) என்று கூறப்பட்டுள்ளது. 

"ஆதவன்" தியானங்களில் சில வேளைகளில் பிறரை விமரிசிப்பதுபோல உங்களுக்குத் தெரியலாம், ஆனால் அவை வேத சத்தியங்களை அவர்கள் மீறி அதற்கு முரணாக பிரசங்கிப்பதை தவறு என்று காட்டவேதவிர அவர்களது ஆராதனை முறைகளை விமரிசிப்பதற்கு அல்ல. வேத சத்தியங்களை புரட்டிப் பேசுவதை நாம் விமரிசிக்கலாம்.  காரணம், தவறான போதனைகள் மனிதர்களை நரகத்தின் மக்களாக்கிவிடும் என்பதால்.

மற்றவர்கள் செய்யும் ஆராதனைகள், பிற சபைகளை,  தனி நபர்களது ஆராதனை முறைமைகளை விமரிசனம் செய்வதை நாம் விட்டுவிடுவது நல்லது. சவுலின் மகள் மீகாள் நமக்கு ஒரு எச்சரிக்கை.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Sunday, May 21, 2023

வேதத்தை நேசிப்போம், வாசிப்போம்

  ஆதவன் 🌞 847🌻 மே 24, 2023  புதன்கிழமை  

".............நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்." ( ஓசியா 4 : 6 )


இன்றைய தியானத்துக்குரிய வசனம் நாம் தேவனுடைய வேதத்தின்மேல் பற்றுக்கொண்டு அதனை நேசித்து நமது வாழ்வை அதற்கு ஏற்றாற்போல மாற்றி வாழவேண்டியதன் அவசியத்தைக் குறிக்கின்றது. தேவன் ஆதிகாலமுதல் பல்வேறு தீர்க்கதரிசிகள், பக்தர்கள் மூலம் தனது வார்த்தைகளை வெளிப்படுத்தி அவற்றை மக்கள் மறந்திடாமல் இருக்க அவர்களைக்கொண்டு பதிவுசெய்தும்  வைத்துள்ளார். தோள்சுருள்கள், கற்பலகைகள், சுட்ட மண் பலகைகள், போன்றவற்றில் தேவனுடைய வார்த்தைகள் பதிவுசெய்யப்பட்டு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

வேதத்தை இந்த உலகத்திலிருந்து அழிக்க முயன்ற மனிதர்கள் அழிந்தார்களேதவிர வேதம் என்றும் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றது. தேவன் அற்புதமாக இப்படித் தனது வார்த்தைகளைப் பாதுகாப்பதன் நோக்கம் தனது மக்கள் அவற்றைப் படித்து உணர்ந்து தனக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகவே.  ஆனால் வேதத்தை உண்மையான ஆர்வத்துடன் படிப்பவர்கள் வெகு சொற்பமே. இதனையே தீர்க்கத்தரிசி ஓசியா முலம் தேவன், "என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்." ( ஓசியா 8 : 12 ) என்று கூறுகின்றார்.

இருளில், அந்தகாரத்தில் வசிக்கும் மக்களுக்கு விளக்கும் வெளிச்சமும் வேதமே.  "கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி." ( நீதிமொழிகள் 6 : 23 ) என்று வசனம் கூறுகின்றது. 

அன்பானவர்களே, இன்றைய வசனம் வேதத்தை மறப்பவர்களின் பிள்ளைகள் தேவனால் மறக்கப்பட்டுவிடுவார்கள் என்று ஒரு எச்சரிக்கையினை விடுக்கின்றது. தேவனால் மறக்கப்படுதல் எவ்வளவு அவலமானது என்று எண்ணிப்பாருங்கள். நாம் ஒருவேளை இன்று இந்த உலகத்தில் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம்  ஆனால் நமது பிள்ளைகளது எதிர்காலம் நமது கையில் என்பதை மறந்துவிடக்கூடாது. உலகத்தில் சொத்து சுகங்களை நமது பிள்ளைகளுக்காகச் சேர்த்துவைக்க முயலும் நாம் அவர்களுக்கான தேவ ஆசீர்வாதங்களுக்காகவும் முயலவேண்டியது அவசியம். 

வேதாகமத்தை அந்நிய காரியமாக எண்ணாமல் ஆர்வமுடன் வாசித்து அதன் மகத்துவங்களை உணர்ந்து விசுவாசத்தில் வளரவேண்டியது அவசியம். சொத்து சுகங்கள், அதிக ஆஸ்திகள் சம்பாதிக்க உடல் பலமில்லாதவர்களும், பெரிய படிப்பு பதவிகள் இல்லாதவர்களும் இந்த ஆசீர்வாதத்தை நமது பிள்ளைகளுக்காகச் சேர்த்திட முடியும்.  

வேதத்தை  நேசிப்போம், வாசிப்போம் வாழ்வாக்குவோம்.

"கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." ( சங்கீதம் 1 : 2, 3 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

பரத்திலிருந்து வருகிற ஞானம்

ஆதவன் 🌞 846🌻 மே 23, 2023  செவ்வாய்க்கிழமை    

"பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. " (யாக்கோபு 3:17)


இந்த உலகத்தில் சில காரியங்களில் வல்லவர்களாக விளங்குபவர்களை ஞானிகள் என்று கூறுகின்றனர். இப்படி  உலகத்தில் இசை ஞானி, கலை ஞானி, நடனகலா ஞானிகள் உள்ளனர். உலகத்துக்கு இந்த கலைஞர்கள் ஞானிகளாக இருந்தாலும் தேவனது பார்வையும் அவர் ஞானம் என்று கருதுவதும் வேறு விதமானது.  

உலக மனிதர்களது ஞானம் அவர்களை அகந்தையுள்ளவர்களாக மாற்றுகின்றது.  இத்தகைய உலக ஞானிகள் மற்றவர்களை அற்பமாக எண்ணுபவர்களாகவும், பிறரை மதிக்காதவர்களாகவும், பரிசுத்த வாழ்கைக்குத் தூரமானவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

எனவே, தேவன் தனக்குப் பயப்படுபவர்களையே ஞானிகளாக எண்ணுகின்றார். உலகத்துக்கு அவர்கள் பேதைகளாக இருக்கலாம், ஆனால் தேவனது பார்வையில் அத்தகைய மனிதர்களே ஞானிகள். எனவேதான் நீதிமொழிகள் நூல் கூறுகின்றது, "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" ( நீதிமொழிகள் 1 : 7 ) என்று. 

சங்கீதம் 111 இல் நாம் வாசிக்கின்றோம், "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு" ( சங்கீதம் 111 : 10 ) என்று. 

நாம் இந்த உலகத்தில் சிறந்த திறமையோ அறிவோ இல்லாதவர்களாக இருக்கலாம். பள்ளிப் படிப்பு படிக்க வாய்ப்பற்று எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகக்கூட இருக்கலாம். ஆனால் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு வாழ்வோமானால் நாமே அவரது பார்வையில் ஞானமுள்ளவர்கள்.  

பள்ளிப்படிப்பு படிக்காத , இரண்டு கண்களும் தெரியாத ஒரு பாட்டியைக்குறித்து நான் கேள்விப்பட்டதுண்டு. ஆவிக்குரிய வரங்களால் நிறைந்த அந்தப் பாட்டியிடம் ஜெபித்து ஆசீர்வாதம்பெற பிரபல மருத்துவர்கள், பொறியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் வந்து காத்திருப்பதுண்டு. ஆம், அவர்கள் உலகத்தைப் பொறுத்தவரை படிக்காத ஒரு பெண், ஆனால் தேவனது பார்வையில் ஞானி. உலகத்துக்குத் தெரியாத பல விஷயங்களை தேவன் அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்கின்றார்.  

அன்பானவர்களே, நாம் பல்வேறு பட்டங்கள் பெற்றவர்களாக இருக்கலாம், தேவனுக்குமுன் அவை போதாது. நாம் தேவ ஞானத்தால் நிரப்பப்படவேண்டும். அதற்குக் கர்த்தருக்குப் பயப்படும் பயம் - அதாவது கர்த்தருக்கு ஏற்புடைய ஒரு வாழ்வு வாழவேண்டுமென்று முடிவெடுத்து நம்மை அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். அப்படி நாம் கர்த்தருக்குப் பயந்த வாழ்க்கை வாழும்போது நம்மை அவர் பரலோக ஞானத்தால் நிரப்புவார். 

அப்போது நாம் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளவர்களாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்தவர்களாகவும், பட்சபாதமில்லாதவர்களாகவும், மாயமற்றவர்களாகவும் இருப்போம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, May 20, 2023

நீதியின் கிரீடம்

ஆதவன் 🌞 845🌻 மே 22, 2023  திங்கள்கிழமை    

"நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில்  பங்குள்ளவர்களாயிருப்போம்." ( எபிரெயர் 3 : 14 )

இன்று நாம் அரசியலில் பல விசித்திரங்களைக்காண  முடியும்.  பதவிக்காக கொள்கைகளையும் தலைவர்களையும் மாற்றும் மனிதர்கள் அதிகம். எனவே சிலர் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்தில் மந்திரிப்பதவி பெற்றுவிடுகின்றனர். அரசியல் தலைவர்களும் எதிர்காலத்தில் குறிப்பிட்ட  ஜாதி மக்களது  ஓட்டுக் கிடைக்கவேண்டும் என்பதற்காக  இத்தகைய கட்சிமாறிகளை ஆதரிக்கின்றனர். மொத்தத்தில், அரசியல் தலைவர்களும் கட்சிமாறிகளும்  மக்களது நன்மையினையல்ல, மாறாகத் தங்களது சுய நலனையே நாடுவதால் இப்படிச் செய்கின்றனர். 

ஆனால் இத்தகைய தகிடுதத்தம் தேவனிடம் எடுபடாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் கொண்டவர்களாக இருப்போமானால் அந்த விசுவாசத்தில் இறுதிவரை நிலைத்து நிற்கவேண்டும். அங்கே  கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்பது தேவனுக்குப் பிரியமில்லாதது. தேவனைப் பொறுத்தவரை ஒரே எஜமானுக்குத்தான் நாம் ஊழியம்செய்ய முடியும். அரசியல்வாதிகளைப்போல சுய லாபம் கருதி மாறிமாறித் தலைவனை மாற்ற முடியாது. 

இயேசு கிறிஸ்துக்  கூறினார்,  "இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." ( மத்தேயு 6 : 24 )

ஒரே வழி, ஒரே தலைவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். அவர்மேல் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். இதற்கு மாறாக, பதவி, பணம், புகழ் இவற்றுக்காக கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் குறைவுபடுவோமானால் அவரோடு நமக்கு எந்தப் பங்கும் இருக்காது. 

இன்றைய வசனம், ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில் என்று கூறுகின்றது. அதாவது இந்தப்பூமியில் நாம் வாழும் இறுதிநாள்வரை என்று பொருள். இறுதி நாள்வரை நாம் கிறிஸ்துவின்மேலுள்ள நமது விசுவாசத்தில் தளர்வடையாக்கூடாது. இப்படி ஆரம்பத்தில் கொண்ட  விசுவாசத்தைக் இறுதிவரைக் காத்துக்கொள்பவர்களே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவ கிரீடத்தைப் பெறுவார்கள்.  

அன்பானவர்களே, அப்போஸ்தலராகிய பவுல் கூறுவதுபோல நாமும் கூறத்தக்க ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்." ( 2 தீமோத்தேயு 4 : 8 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Friday, May 19, 2023

கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ?

ஆதவன் 🌞 844🌻 மே 21, 2023  ஞாயிற்றுக்கிழமை      

".... கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?"  ( மீகா 2 : 7 )


பொதுவாக மனிதர்களாகிய நாம் பலவேளைகளில் கர்த்தரது வல்லமையையும் பராக்கிரமத்தையும் உணர மறந்துவிடுகின்றோம். குறிப்பாக நமக்கு ஒரு மாபெரும் இக்கட்டு நேரும்போது நமக்கு அவிசுவாசம் வந்துவிடுகின்றது. கர்த்தரது ஆவியின் வல்லமையினை நாம் உணர மறந்துவிடுகின்றோம். 

இன்றைய வசனத்தின் பிற்பகுதி, "செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?" என்று கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது, நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்வோமென்றால் நிச்சயமாக அதிசயமான வழிகளில்  நமது இக்கட்டு, பிரச்சனைகளிலிருந்து அவர் நம்மை விடுவித்து நடத்துவார் என்றுபொருள். 

இஸ்ரவேல் மக்களை கானானுக்கு வழிநடத்திய மோசேக்கு எதிராக அந்த மக்கள் கிளர்ச்சி செய்தனர்.  மன்னாவைத்தவிர உண்பதற்கு வேறு எதுவும் இல்லை. எங்களுக்கு உண்பதற்கு இறைச்சி வேண்டுமென்று கூப்பாடுபோட்டனர். அந்த மக்களின் எண்ணிக்கை இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும் 6,03,550. அப்படியானால் அதற்கு குறைந்த வயதுள்ள ஆண்கள், மொத்தப் பெண்கள் எவ்வளவு இருந்திருக்கவேண்டும்!!! ஆனால் மோசே தேவனை நோக்கி முறையிட்டபோது தேவன் அந்த மக்களின் விருப்பப்படி இறைச்சி தருவதாக வாக்களித்தார். 

ஒருநாள் இரண்டுநாள் மட்டுமல்ல, ஒரு மாதமளவும் இறைச்சியை உண்பீர்கள்  என்றார் தேவன். இதனைப் பெரிய மக்கள் கூட்டத்துக்கு ஒருமாதமளவு இறைச்சி எப்படிக் கொடுக்கமுடியுமென்று  மோசே கேட்க, "அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்." ( எண்ணாகமம் 11 : 23 ) அப்படியே இஸ்ரவேல் மக்கள் இறைச்சியை உண்டார்கள். 

புதிய ஏற்பாட்டிலும்கூட, இயேசு கிறிஸ்து போதனை செய்துமுடித்து அங்கிருந்த மக்களுக்கு உணவு அளிக்க விரும்பினார். இந்த மக்களுக்கு சாப்பிடக்கொடுக்க அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று பிலிப்புவிடம் கேட்டார். ஒவ்வொருவனும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டாலும் இருநூறு பணத்துக்கு அப்பம் வாங்கினாலும் போதாதே என்று கைவிரித்த பிலிப்பு கூறுவதைப் பாருங்கள், "இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்" ( யோவான் 6 : 9 ) எம்மாத்திரம் என்று கூறப்பட்ட அந்த ஐந்து வாற்கோதுமை அப்பத்தையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐயாயிரம் பேர் உண்ணவும் மிச்சமாக 12 கூடைகள் நிறையும்படியும் செய்தார் இயேசு கிறிஸ்து.

அன்பானவர்களே,  "கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?" என்று வேதம் நம்மைத் திடப்படுத்தும் வசனத்தைத் தருகின்றது. நாம் நேர்மையான, தேவன் விரும்பும் வழியில் நடக்கிறவர்களென்றால் கர்த்தரின் ஆவி குறுக்கிடாமல் நமது வாழ்விலும் மாபெரும் அதிசயங்களைச் செய்யும். கலங்காதிருங்கள். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

தேவனால் அறியப்படுதல்

ஆதவன் 🌞 843🌻 மே 20, 2023  சனிக்கிழமை          


"தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்." ( 1 கொரிந்தியர் 8 : 3 )

ஒருமுறை இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை வேதாகமத்தில் வாசித்துவிட்டு என்னிடம், "கடவுள்தான் உலகத்திலுள்ள எல்லோரையும் அறிந்திருக்கின்றாரே? பின்னர் எப்படி நாம் , தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான் என்று கூறமுடியும்? இந்த உலகத்திலுள்ள கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், வேறு தெய்வ வழிபாடுகளைச் செய்பவர்கள் அவர்களைக் கடவுள் அறியவில்லையா?" என்று கேட்டார். அவருக்கு நான் கூறிய பதிலினை விளக்கமாக இன்றைய தியானமாகத் தருகின்றேன்.

இங்கு தேவனால் அறியப்படுதல் என்பது, தேவனால் தனி அக்கறையோடு நடத்தப்படும் அனுபவத்தைக் குறிக்கின்றது.  கோடிக்கணக்கான மக்கள் உலகத்தில் வாழ்ந்தாலும் குறிப்பிட்டச் சிலரை மட்டும் தேவன் தனிப்பட்ட முறையில் உயர்த்துகின்றாரே அது அவர்களை அவர் அறிந்திருப்பதால்தான்.  அப்போஸ்தலரான யோவான், பேதுரு, பவுல் போன்றவர்கள், ஏன்..... சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சாது சுந்தர்சிங் மற்றும் இன்று நம்மிடையே வாழும் பலர் இவர்களைத் தேவன் தனி அக்கறையோடு நடத்துவதற்கு காரணம் அவர்கள் இப்படி தேவனால் அறியப்பட்டவர்களாக வாழ்வதால்தான்.  

ஒரு தகப்பனுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மூத்த மகன்  குடித்து, எந்த பொறுப்புமற்று ஊதாரியாகத் திரிகின்றான். மற்றவன் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து அவர் துவங்கிய தொழிலையும்  சிறப்பாக நடத்துகின்றான். தகப்பன் இரண்டு மகன்களையும் நேசித்தாலும் எந்த குடும்ப சம்பந்தமான முடிவுகளையும் தொழில் முடிவுகளையும் இளைய மகனிடம் பேசியே எடுக்கின்றான். காரணம் தகப்பன் இளைய மகனை அறிந்திருக்கின்றான். இப்படியே தேவனில் அன்புகூருகிறவன் தேவனால் அறியப்பட்டிருக்கின்றான் 

தேவனால் அறியப்பட்டவர்களது வாழ்க்கை வித்தியாசமானதாக இருக்கும். வெளிப்பார்வைக்கு அவர்கள் மற்றவர்களைப்போலவும் அல்லது மற்ற மனிதர்களைவிட தாழ்ந்தவர்களாகவும் தெரியலாம். ஆனால் தேவனது பார்வையில் அவர்கள் உயர்ந்தவர்கள். அது உடனே தெரியாது, ஆனால் வெளியே தெரியும்போது பலரை ஆச்சரியப்படவைக்கும். 

இன்றைய வசனம் கூறும் , "தேவனில் அன்புகூருதல்" என்பதன் பொருளை அப்போஸ்தலரான யோவான் பின்வருமாறு கூறுகின்றார், "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான்  5 : 3 )

அவருடைய கற்பனைகள் பாரமானவைகள் அல்ல என்கின்றார் யோவான். காரணம்,  எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பதும், தன்னைத்தான் நேசிப்பதுபோல மற்றவர்களையும் நேசிப்பதும் தான் அவரது கட்டளை 

"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்." ( 1 யோவான்  5 : 2 ) ஆம், நாம் மற்றவர்களிடம் காண்பிக்கும் அன்புச்  செயல்களே நாம் அவரையும் அன்புசெய்வதற்கு அடையாளம். கிறிஸ்து இயேசுவை வாழ்வில் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போதுதான் நமது இருதயம் மாறுதல் அடைந்து எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும். 

எனவேதான் வசனம் சொல்கிறது, "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 ) குமாரனாகிய கிறிஸ்துவை இருதயத்தில் வரும்படி அழைப்போம். அப்போதுதான் நாம் அவரதுக் கட்டளைகளைக் கடைபிடிக்கமுடியும். அப்போது அவர் நம்மை அறிந்துள்ளதை அன்றாட தனிப்பட்ட அனுபவங்களால்  நாம் அனுபவபூர்வமாக உணர முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Tuesday, May 16, 2023

உடலாகிய ஆலயம்

 ஆதவன் 🌞 842🌻 மே 19, 2023  வெள்ளிக்கிழமை            



"தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?" ( 2 நாளாகமம் 6 : 18 )

தேவனுக்கென்று ஆலயம் எழுப்பிய சாலமோன் அதன் பிரதிஷ்டையின்போது ஜெபித்த ஜெபத்தின் ஒரு பகுதிதான் இன்றைய தியான வசனம். இந்த வசனத்தில் சாலமோன்,  தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? என்று கேள்வி எழுப்புகின்றார்.  இந்தக் கேள்வியின் உண்மையான பொருள், தேவன்  அப்படி மனிதர்களோடு வாசம்பண்ண மாட்டார் என்பதே. ஆனால்,  இந்தக் கேள்விக்கு மாறாகக்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகினில் மனிதனாக வந்து மனிதர்களோடு வாழ்ந்தார். வானங்களும், வானாதி வானங்களும்  தாங்க முடியாத தேவன் சாதாரண மனிதனைப்போல ஆனார்.  

அப்போஸ்தலரான யோவான் இதனைக்குறித்து, "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை." ( யோவான் 1 : 10 ) என்று எழுதுகின்றார். 

மேலும் ஆச்சரியமான காரியம் என்னவென்றால்,  பூமியில் தேவன் வாசம்பண்ணுவாரோ என்றும் வானங்களும் வானாதி வானங்களும் தாங்கக்கொள்ளாதே என்றும் கூறப்பட்ட வல்லவரான தேவன் மனிதர்களது சின்ன இதயத்துக்குள்ளே வந்து தங்குகின்றார்.  இது ஆச்சரியமல்லவா?

இப்படி தேவன் வந்து தங்கும் இடமாக மனிதர்களது இருதயம் இருப்பதால் தான் நாமே தேவனது ஆலயமாக இருக்கின்றோம்.  

"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"
( 1 கொரிந்தியர் 3 : 16 )

"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்ல வென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 )

பூமியிலே மனிதர்களோடு தங்குவாரோ என சந்தேகத்தோடு சாலமோன் விண்ணப்பம் பண்ணினார். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதர்களோடு மட்டுமல்ல, மனிதர்களுக்குளேயே வந்து தங்கிவிட்டார். அன்பானவர்களே, அப்படியானால் நாம் எவ்வளவு பேறுபெற்றோர் என்று எண்ணிப்பாருங்கள். இத்தகைய தேவன் வந்து தங்கும் நமது உடலாகிய ஆலயத்தை நாம் எவ்வளவு தூய்மையாக பாதுகாக்கவேண்டும்!!!

எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள், "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) எனக் கூறுகின்றார். 

நமது உடலாகிய ஆலயத்தைக் கெடுக்காமல்  தேவன் விரும்பும்வண்ணம் பரிசுத்தமாகக்  காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com