Friday, May 26, 2023

ஆரோனின் கோல்

ஆதவன் 🌞 850🌻 மே 27, 2023  சனிக்கிழமை     

           

"மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடுப்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது." ( எண்ணாகமம் 17 : 8 )

நமது தேவன் அதிசயமான முறையில் தான் தெரிந்துகொள்பவர்களை நடத்துபவர். மனித அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாத அதிசயங்களை செய்து தனக்கு ஏற்புடையவர்களாக வாழ்பவர்களை அவர் மற்றவர்களிலிருந்து வேறுபிரித்து உயர்த்துகின்றார். 

இஸ்ரவேல் மக்கள் கூட்டத்தார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். அதாவது அந்த மக்கள் மோசேயும் ஆரோனும் தங்களாகத் தங்களை உயர்த்தி மற்றவர்களுக்குத் தங்களைத் தலைவர்களாக ஏற்படுத்த முயல்வதாக எண்ணிக்கொண்டனர். தேவனது கட்டளையின்படியே மோசேயும் ஆரோனும் செயல்பட்டனர் என்பதை அவர்கள் நம்பவில்லை. 

அப்போது கர்த்தர் மோசேயிடம்,  இஸ்ரவேல் கோத்திரத்துத் தலைவர்கள் பன்னிரண்டுபேரிடமும் ஆளுக்கொரு கோலை கொண்டுவரச்செய்து அதில் அவர்களது பெயரை  எழுதவும், லேவி கோத்திரத்துக்குரிய கோலில் ஆரோனின் பெயரை எழுதி கர்த்தரது சமூகத்தில் வைக்கவும் சொன்னார். "அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்." ( எண்ணாகமம் 17 : 5 ) என்றார்.

மோசே அப்படியே செய்தான். அந்த ஒரே இரவில் அற்புதம் நிகழ்ந்தது. லேவியின் குடுப்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது.

அன்பானவர்களே, இது பல்வேறு பிரச்சனைகள், தோல்விகள், துன்பங்களால் துவண்டுபோயிருக்கும் நமக்குத் தேவனது வல்லமையினை உணரவும் நமது எந்தப் பிரச்சனையையும் அவரால் ஒரு நொடியில் மாற்றமுடியும் எனும் விசுவாசத்தைத்  தரக்கூடியதாகவும்  இருக்கின்றது. 

நமது வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவும், நமது எந்த நோயையும் பிரச்சனைகளையும் மாற்றிடவும் தேவனுக்கு அதிக நாட்களோ நேரமோ தேவையில்லை. காய்ந்துபோல ஒரு மரக்கோலை  ஒரே இரவில் துளிர்த்து, பூத்து, காய்த்து கனிகளைக் கொடுக்கத்தக்கதாக  மாற்ற தேவனால் கூடுமென்றால் காய்ந்து பட்டுப்போன நமது வாழ்வையும் அவரால் ஒரே நொடியில் மாற்றிட முடியும். ஆரோனின் கோல்போல நமது வாழ்வையும் அவர் துளிர்விடச் செய்வார். இஸ்ரவேல் மக்கள் கூட்டத்தார்முன் மோசேயும் ஆரோனும் உயர்த்தப்பட்டதுபோல நம்மையும் அவர் உயர்த்துவார். 

மோசே உலர்ந்துபோன கோலை தேவ சமூகத்தில் வைத்ததுபோல நமது உலர்ந்த வாழ்வையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் ஒப்படைத்து ஜெபிப்போம். அவர் ஒரே நொடியில் சாதாரண தண்ணீரை சுவைமிக்கத் திராட்சைரசமாக்கி மகிழச்செய்யவில்லையா? ஒரே வார்த்தையால் மரித்து நான்கு நாட்களான லாசரை உயிர்ப்பிக்கவில்லையா? ஆம், தேவனால் எல்லாம் கூடும். மனிதர்களாகிய நமக்குத்தான் காலமும் நேரமும். அவரோ காலங்களைக் கடந்தவர். நமது விசுவாசம் தளர்ந்திடாமல் இருப்போம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: