ஆதவன் 🌞 854🌻 மே 31, 2023 புதன்கிழமை
"நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே". (கலாத்தியர் 3:26)
கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது எவ்வளவு மேலான காரியம் பாருங்கள். நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு வாழும்போது கடவுளின் மக்களாகின்றோம். நாம் மட்டுமல்ல, எத்தனைபேர்கள் எந்த மத, இன, ஜாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரும் இப்படி கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது கடவுளின் பிள்ளைகளாகின்றோம்.
இதனையே, "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." ( யோவான் 1 : 12 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலனாகிய யோவான்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறுவது வாயினால் கூறுவது மட்டுமல்ல, செயலிலும் நாம் நமது விசுவாசத்தைக் காட்டுவது. அதாவது, அவரை விசுவாசித்து, அவருக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழவேண்டும். வெறும் விசுவாசம் மட்டும் போதாது. ஏனெனில் பிசாசுகளும் கடவுள் ஒருவர் உண்டு என்று விசுவாசிக்கின்றன.
"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டாமோ?" ( யாக்கோபு 2 : 19, 20 ) என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு.
அன்று யூதர்கள் கடவுளை விசுவாசித்தனர். ஆனால் அவர்களது செயல்பாடுகள் பிசாசின் செயல்பாடுகளாக இருந்தன. எனவேதான் இயேசு கிறிஸ்து அவர்களைப்பார்த்து கூறினார், "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; ....................." ( யோவான் 8 : 44 ) என்று.
கடவுளை நாம் அன்பு செய்கின்றோமென்றால் இயேசு கிறிஸ்துவை அன்புசெய்வோம். "இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்." (யோவான் 8:42) என்று கூறினார். இயேசுவை அன்பு செய்வது என்பது அவரது கட்டளைகளைக் கைக்கொள்வதே.
அன்பானவர்களே, நாம் வெறுமனே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு அவருக்கு ஏற்பில்லாத வாழ்க்கை வாழ்வோமென்றால் நாம் பிசாசின் பிள்ளைகளாயிருப்போம். எனவே கிறிஸ்துவின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவரை அன்புசெய்து வாழவேண்டியது அவசியமாயிருக்கிறது. அப்படி வாழ்வதுதான் அவரை விசுவாசிப்பது.
அப்படி நாமெல்லாம் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் வாழ்வோமானால் இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுவதுபோல தேவனுடைய புத்திரராயிருப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment