ஆதவன் 🌞 852🌻 மே 29, 2023 திங்கள்கிழமை
"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்." ( பிலிப்பியர் 4 : 19 )
இந்த உலகத்தில் தேவனிடத்தில் விசுவாசம்கொண்டு வாழும் எல்லோரும் செல்வந்தர்களல்ல. வறுமை, குறைச்சல், பெரும்பான்மை மனிதர்களுக்குள்ள பலவித செல்வங்கள் இல்லாமை. இவைதான் ஆவிக்குரிய பல மக்களுக்கு இருக்கும் உண்மை நிலைமை. ஆனால் கர்த்தர்மேலுள்ள விசுவாசத்தால் அவர்கள் இந்த உலகத்தில் வாழ்கின்றனர். கர்த்தரையே நம்பி வாழ்கின்றனர்.
இந்த உலகினில் வறுமையில் வாழும் மக்களை நாம் இரு பிரிவாகப் பிரிக்கலாம்:-
1. வறுமையில் வாழும் உலக மக்கள். இவர்கள் எந்த மதத்தினராகவும் இருக்கலாம். கிறிஸ்தவர்களில்கூட, கிறிஸ்துவை பெயரளவில் மட்டும் அறிந்த பெயர் கிறித்தவர்களாக இருக்கலாம்.
2. கிறிஸ்துவின் அன்பை ருசித்து கிறிஸ்துவுக்குள் வாழும் ஆவிக்குரிய அனுபவமுள்ள கிறிஸ்தவர்கள்.
இன்றைய தியானத்துக்குரிய வசனம் இரண்டாம் வகை மனிதர்களுக்குக் கூறப்பட்ட வசனமாகும். கிறிஸ்துவுக்குள் நாம் வாழ்வோமென்றால், தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி நமது குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். காரணம் இத்தகைய ஆவிக்குரிய மக்கள் உலக வாழ்வில் தரித்திரராக இருந்தாலும் தேவனின் பார்வையில் விசுவாசத்தில் ஐசுவரியவான்கள்.
"என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள்ளவில்லையா?" ( யாக்கோபு 2 : 5 ) என்கின்றார் அப்போஸ்தலராகிய யாக்கோபு. ஆம், இதுதான் இன்றைய வசனம் கூறும் கிறிஸ்துவுக்குள் மகிமையில் நிறைவாக்குதல். அதாவது தேவன் வாக்களித்த பரலோக ராஜ்யத்தின் சுதந்திரவாளிகள்.
'மறுமையில் நிறைவு கிடைக்குமென்றும், பரலோக ராஜ்யத்தின் சுதந்திரவாளிகள் என்றும் கூறிக்கொண்டு இந்த உலக வாழ்க்கை முழுவதும் தரித்திரத்தில் கழிக்கமுடியுமா?' என்று சிலர் எண்ணலாம். அப்படியல்ல, தேவன் நினைக்கும்போது, அல்லது அவரது காலம் வரும்போது உலக ஆசீர்வாதங்களினாலும் நம்மை நிரப்புவார்.
"ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்." ( 1 நாளாகமம் 29 : 12 ) என்று நாம் வாசிக்கின்றோம்.
மேலும், உலக செல்வ ஆசீர்வாதம் படைத்தவர்கள் என்று நாம் கருதும் பலர் பல்வேறு துன்பங்களிலும், இக்கட்டுகளிலும், நோய்களிலும், சமாதானக் குறைவிலும் தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கர்த்தர் ஒருவரை ஆசீர்வதிக்கும்போது முற்றுமுடிய ஆசீர்வதிப்பார். வேதனையில்லாத ஆசீர்வாதம்; மன சமாதானத்தோடுகூடிய ஆசீர்வாதம். எனவேதான் வேதம் கூறுகின்றது, "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 ) ஆம், வேதனையைக் கூட்டாத ஆசீர்வாதமே கர்த்தர்தரும் ஆசீர்வாதம்.
ஆம் அன்பானவர்களே, "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி என் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்குவார்." என அப்போஸ்தலரான பவுல் விசுவாசத்தோடு கூறுவதுபோல நாமும் விசுவாச அறிக்கையிடுவோம். நமது எந்தக் குறைவையும் நிறைவாக்கி நடத்த அவர் வல்லவராயிருக்கிறார்.
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment