Sunday, May 21, 2023

பரத்திலிருந்து வருகிற ஞானம்

ஆதவன் 🌞 846🌻 மே 23, 2023  செவ்வாய்க்கிழமை    

"பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. " (யாக்கோபு 3:17)


இந்த உலகத்தில் சில காரியங்களில் வல்லவர்களாக விளங்குபவர்களை ஞானிகள் என்று கூறுகின்றனர். இப்படி  உலகத்தில் இசை ஞானி, கலை ஞானி, நடனகலா ஞானிகள் உள்ளனர். உலகத்துக்கு இந்த கலைஞர்கள் ஞானிகளாக இருந்தாலும் தேவனது பார்வையும் அவர் ஞானம் என்று கருதுவதும் வேறு விதமானது.  

உலக மனிதர்களது ஞானம் அவர்களை அகந்தையுள்ளவர்களாக மாற்றுகின்றது.  இத்தகைய உலக ஞானிகள் மற்றவர்களை அற்பமாக எண்ணுபவர்களாகவும், பிறரை மதிக்காதவர்களாகவும், பரிசுத்த வாழ்கைக்குத் தூரமானவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

எனவே, தேவன் தனக்குப் பயப்படுபவர்களையே ஞானிகளாக எண்ணுகின்றார். உலகத்துக்கு அவர்கள் பேதைகளாக இருக்கலாம், ஆனால் தேவனது பார்வையில் அத்தகைய மனிதர்களே ஞானிகள். எனவேதான் நீதிமொழிகள் நூல் கூறுகின்றது, "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" ( நீதிமொழிகள் 1 : 7 ) என்று. 

சங்கீதம் 111 இல் நாம் வாசிக்கின்றோம், "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு" ( சங்கீதம் 111 : 10 ) என்று. 

நாம் இந்த உலகத்தில் சிறந்த திறமையோ அறிவோ இல்லாதவர்களாக இருக்கலாம். பள்ளிப் படிப்பு படிக்க வாய்ப்பற்று எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகக்கூட இருக்கலாம். ஆனால் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு வாழ்வோமானால் நாமே அவரது பார்வையில் ஞானமுள்ளவர்கள்.  

பள்ளிப்படிப்பு படிக்காத , இரண்டு கண்களும் தெரியாத ஒரு பாட்டியைக்குறித்து நான் கேள்விப்பட்டதுண்டு. ஆவிக்குரிய வரங்களால் நிறைந்த அந்தப் பாட்டியிடம் ஜெபித்து ஆசீர்வாதம்பெற பிரபல மருத்துவர்கள், பொறியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் வந்து காத்திருப்பதுண்டு. ஆம், அவர்கள் உலகத்தைப் பொறுத்தவரை படிக்காத ஒரு பெண், ஆனால் தேவனது பார்வையில் ஞானி. உலகத்துக்குத் தெரியாத பல விஷயங்களை தேவன் அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்கின்றார்.  

அன்பானவர்களே, நாம் பல்வேறு பட்டங்கள் பெற்றவர்களாக இருக்கலாம், தேவனுக்குமுன் அவை போதாது. நாம் தேவ ஞானத்தால் நிரப்பப்படவேண்டும். அதற்குக் கர்த்தருக்குப் பயப்படும் பயம் - அதாவது கர்த்தருக்கு ஏற்புடைய ஒரு வாழ்வு வாழவேண்டுமென்று முடிவெடுத்து நம்மை அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். அப்படி நாம் கர்த்தருக்குப் பயந்த வாழ்க்கை வாழும்போது நம்மை அவர் பரலோக ஞானத்தால் நிரப்புவார். 

அப்போது நாம் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளவர்களாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்தவர்களாகவும், பட்சபாதமில்லாதவர்களாகவும், மாயமற்றவர்களாகவும் இருப்போம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: