இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, May 29, 2023

ஜெபங்களின் பாணியை மாற்றுவோம்

ஆதவன் 🌞 853🌻 மே 30, 2023  செவ்வாய்க்கிழமை       

"நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,

சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்......அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்." ( கொலோசெயர் 1 : 9, 10, 11 )

இன்று பலரும் பொதுவாக ஆராதனை எனும் பெயரில் ஆலயத்துக்கு வந்து ஒருமணி அல்லது ஒன்றரைமணி நேரம் செலவிட்டுவிட்டு தங்கள் கிறிஸ்தவ கடமை நிறைவேறிவிட்டது என்று திருப்தியடைந்துகொள்கின்றனர். அன்பானவர்களே, தேவன் நம்மை வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கவில்லை. அதனையே இன்றைய வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல் எழுதுகின்றார். அவர் தனது சபை மக்களுக்காக எதற்காகவெல்லாம் ஜெபிக்கின்றார் என்பதை இங்குக் குறிப்பிடுகின்றார். அவை என்னவென்றால்:- 

1. தேவனது சித்தத்தை அறியும் அறிவால் நிரப்பப்படவேண்டும்; 
2. சகலவிதமான நற்கிரியைகளின் கனிகளைத் தரவேண்டும்;
3. தேவனை அறியும் அறிவில் விருத்தியடையவேண்டும்;
4. கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளவேண்டும்.;
5. கர்த்தருடைய எல்லா வல்லமையிலும் பலப்படவேண்டும்              

அதாவது ஒரு சிறந்த கிறிஸ்தவன், மேற்குறிப்பிட்ட ஐந்து தகுதிகளிலும் தினமும் வளரவேண்டும்.

அன்பானவர்களே, ஏதோ கடமைக்கு நாமும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. 

தேவ சித்தத்தை அறியும்போதுதான் நாம் நம்மைக்குறித்தும் நம்மைச் சார்ந்துள்ளவர்களைக்குறித்தும் தெளிவு பெற முடியும். கனியுள்ள ஒரு வாழ்க்கைதான் பிறருக்குக் கிறிஸ்துவை அறிவிக்க உதவும். தேவனை அறியும் அறிவில் வளரும்போதுதான் தேவனைப்பற்றி ஒரு  தெளிவு கிடைக்கும். இல்லையானால் நாம் அறியாததைத் தொழுதுகொள்பவர்களாகவே இருப்போம். கர்த்தருக்குப் பிரியமாக நடக்கவேண்டுமென்று எண்ணும்போது பாவத்துக்கு விலகி வாழ்வோம். இவை அனைத்தும் இருக்கும்போது கர்த்தரது வல்லமை நம்மில் வெளிப்படும்.

இங்கு அப்போஸ்தலரான பவுல் வெறுமனே வல்லமை என்று குறிப்பிடாமல், "எல்லா வல்லமையாலும் பலப்படவும்" என்று கூறுகின்றார். அதிசயம் அற்புதம் செய்யும் வல்லமை மட்டுமல்ல,  மாறாக பாவத்தை மேற்கொள்ளும் வல்லமை. பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளும் வல்லமை. 

நமது அன்றாட ஜெபங்களில் நாம் பெரும்பாலும் உலகத் தேவைகளுக்காகவே ஜெபிக்கின்றோம். மேலான ஆவிக்குரிய தேவைகளை விட்டுவிடுகின்றோம். நமக்கு இன்றைய வசனம் மூலம் அப்போஸ்தலரான பவுல் தெளிவான வழி காட்டுகின்றார். இங்கு அப்போஸ்தலரான பவுல் தனக்காக ஜெபிக்கவில்லை. மாறாக, தான் வழிகாட்டி நடத்தும் சபை மக்களுக்காக ஜெபிக்கின்றார். 

இன்று நமக்காக இப்படி முயற்சியெடுத்து ஜெபிக்க எந்த ஊழியரும் இல்லை. எனவே நாம்தான் ஜெபிக்கவேண்டும். நமது அன்றாட ஜெபங்களின் பாணியை மாற்றுவோம். உலகத் தேவைகளைவிட்டு ஆவிக்குரிய தேவைகளுக்காக ஜெபிப்போம். அதுவே தேவனுக்கு ஏற்புடைய ஜெபமாக இருக்கும். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: