ஆதவன் 🌞 844🌻 மே 21, 2023 ஞாயிற்றுக்கிழமை
".... கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?" ( மீகா 2 : 7 )
பொதுவாக மனிதர்களாகிய நாம் பலவேளைகளில் கர்த்தரது வல்லமையையும் பராக்கிரமத்தையும் உணர மறந்துவிடுகின்றோம். குறிப்பாக நமக்கு ஒரு மாபெரும் இக்கட்டு நேரும்போது நமக்கு அவிசுவாசம் வந்துவிடுகின்றது. கர்த்தரது ஆவியின் வல்லமையினை நாம் உணர மறந்துவிடுகின்றோம்.
இன்றைய வசனத்தின் பிற்பகுதி, "செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?" என்று கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது, நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்வோமென்றால் நிச்சயமாக அதிசயமான வழிகளில் நமது இக்கட்டு, பிரச்சனைகளிலிருந்து அவர் நம்மை விடுவித்து நடத்துவார் என்றுபொருள்.
இஸ்ரவேல் மக்களை கானானுக்கு வழிநடத்திய மோசேக்கு எதிராக அந்த மக்கள் கிளர்ச்சி செய்தனர். மன்னாவைத்தவிர உண்பதற்கு வேறு எதுவும் இல்லை. எங்களுக்கு உண்பதற்கு இறைச்சி வேண்டுமென்று கூப்பாடுபோட்டனர். அந்த மக்களின் எண்ணிக்கை இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும் 6,03,550. அப்படியானால் அதற்கு குறைந்த வயதுள்ள ஆண்கள், மொத்தப் பெண்கள் எவ்வளவு இருந்திருக்கவேண்டும்!!! ஆனால் மோசே தேவனை நோக்கி முறையிட்டபோது தேவன் அந்த மக்களின் விருப்பப்படி இறைச்சி தருவதாக வாக்களித்தார்.
ஒருநாள் இரண்டுநாள் மட்டுமல்ல, ஒரு மாதமளவும் இறைச்சியை உண்பீர்கள் என்றார் தேவன். இதனைப் பெரிய மக்கள் கூட்டத்துக்கு ஒருமாதமளவு இறைச்சி எப்படிக் கொடுக்கமுடியுமென்று மோசே கேட்க, "அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்." ( எண்ணாகமம் 11 : 23 ) அப்படியே இஸ்ரவேல் மக்கள் இறைச்சியை உண்டார்கள்.
புதிய ஏற்பாட்டிலும்கூட, இயேசு கிறிஸ்து போதனை செய்துமுடித்து அங்கிருந்த மக்களுக்கு உணவு அளிக்க விரும்பினார். இந்த மக்களுக்கு சாப்பிடக்கொடுக்க அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று பிலிப்புவிடம் கேட்டார். ஒவ்வொருவனும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டாலும் இருநூறு பணத்துக்கு அப்பம் வாங்கினாலும் போதாதே என்று கைவிரித்த பிலிப்பு கூறுவதைப் பாருங்கள், "இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்" ( யோவான் 6 : 9 ) எம்மாத்திரம் என்று கூறப்பட்ட அந்த ஐந்து வாற்கோதுமை அப்பத்தையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐயாயிரம் பேர் உண்ணவும் மிச்சமாக 12 கூடைகள் நிறையும்படியும் செய்தார் இயேசு கிறிஸ்து.
அன்பானவர்களே, "கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?" என்று வேதம் நம்மைத் திடப்படுத்தும் வசனத்தைத் தருகின்றது. நாம் நேர்மையான, தேவன் விரும்பும் வழியில் நடக்கிறவர்களென்றால் கர்த்தரின் ஆவி குறுக்கிடாமல் நமது வாழ்விலும் மாபெரும் அதிசயங்களைச் செய்யும். கலங்காதிருங்கள்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712 Website :- www.aathavanmonthly.blogspot.com
No comments:
Post a Comment