Friday, May 19, 2023

தேவனால் அறியப்படுதல்

ஆதவன் 🌞 843🌻 மே 20, 2023  சனிக்கிழமை          


"தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்." ( 1 கொரிந்தியர் 8 : 3 )

ஒருமுறை இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை வேதாகமத்தில் வாசித்துவிட்டு என்னிடம், "கடவுள்தான் உலகத்திலுள்ள எல்லோரையும் அறிந்திருக்கின்றாரே? பின்னர் எப்படி நாம் , தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான் என்று கூறமுடியும்? இந்த உலகத்திலுள்ள கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், வேறு தெய்வ வழிபாடுகளைச் செய்பவர்கள் அவர்களைக் கடவுள் அறியவில்லையா?" என்று கேட்டார். அவருக்கு நான் கூறிய பதிலினை விளக்கமாக இன்றைய தியானமாகத் தருகின்றேன்.

இங்கு தேவனால் அறியப்படுதல் என்பது, தேவனால் தனி அக்கறையோடு நடத்தப்படும் அனுபவத்தைக் குறிக்கின்றது.  கோடிக்கணக்கான மக்கள் உலகத்தில் வாழ்ந்தாலும் குறிப்பிட்டச் சிலரை மட்டும் தேவன் தனிப்பட்ட முறையில் உயர்த்துகின்றாரே அது அவர்களை அவர் அறிந்திருப்பதால்தான்.  அப்போஸ்தலரான யோவான், பேதுரு, பவுல் போன்றவர்கள், ஏன்..... சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சாது சுந்தர்சிங் மற்றும் இன்று நம்மிடையே வாழும் பலர் இவர்களைத் தேவன் தனி அக்கறையோடு நடத்துவதற்கு காரணம் அவர்கள் இப்படி தேவனால் அறியப்பட்டவர்களாக வாழ்வதால்தான்.  

ஒரு தகப்பனுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மூத்த மகன்  குடித்து, எந்த பொறுப்புமற்று ஊதாரியாகத் திரிகின்றான். மற்றவன் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து அவர் துவங்கிய தொழிலையும்  சிறப்பாக நடத்துகின்றான். தகப்பன் இரண்டு மகன்களையும் நேசித்தாலும் எந்த குடும்ப சம்பந்தமான முடிவுகளையும் தொழில் முடிவுகளையும் இளைய மகனிடம் பேசியே எடுக்கின்றான். காரணம் தகப்பன் இளைய மகனை அறிந்திருக்கின்றான். இப்படியே தேவனில் அன்புகூருகிறவன் தேவனால் அறியப்பட்டிருக்கின்றான் 

தேவனால் அறியப்பட்டவர்களது வாழ்க்கை வித்தியாசமானதாக இருக்கும். வெளிப்பார்வைக்கு அவர்கள் மற்றவர்களைப்போலவும் அல்லது மற்ற மனிதர்களைவிட தாழ்ந்தவர்களாகவும் தெரியலாம். ஆனால் தேவனது பார்வையில் அவர்கள் உயர்ந்தவர்கள். அது உடனே தெரியாது, ஆனால் வெளியே தெரியும்போது பலரை ஆச்சரியப்படவைக்கும். 

இன்றைய வசனம் கூறும் , "தேவனில் அன்புகூருதல்" என்பதன் பொருளை அப்போஸ்தலரான யோவான் பின்வருமாறு கூறுகின்றார், "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான்  5 : 3 )

அவருடைய கற்பனைகள் பாரமானவைகள் அல்ல என்கின்றார் யோவான். காரணம்,  எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பதும், தன்னைத்தான் நேசிப்பதுபோல மற்றவர்களையும் நேசிப்பதும் தான் அவரது கட்டளை 

"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்." ( 1 யோவான்  5 : 2 ) ஆம், நாம் மற்றவர்களிடம் காண்பிக்கும் அன்புச்  செயல்களே நாம் அவரையும் அன்புசெய்வதற்கு அடையாளம். கிறிஸ்து இயேசுவை வாழ்வில் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போதுதான் நமது இருதயம் மாறுதல் அடைந்து எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும். 

எனவேதான் வசனம் சொல்கிறது, "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 ) குமாரனாகிய கிறிஸ்துவை இருதயத்தில் வரும்படி அழைப்போம். அப்போதுதான் நாம் அவரதுக் கட்டளைகளைக் கடைபிடிக்கமுடியும். அப்போது அவர் நம்மை அறிந்துள்ளதை அன்றாட தனிப்பட்ட அனுபவங்களால்  நாம் அனுபவபூர்வமாக உணர முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

No comments: